
குகைக்குப் பக்கத்திலிருந்த கல் மீது அமர்ந்து கொண்ட பெரியார், உயரத்திலிருந்து வந்து, குகையடிவாரத்தில் விழுந்து குட்டையை நிரப்பிவிட்டு, வலிந்தோடிக் கொண்டிருக்கும் நீரையே ஒருசில கனங்கள் நோட்டமிடு கின்றார்.
அது ஓரிடத்தில் ஒடுங்கியும் மற்றோரிடத்தில் விரிந்தும் செல்வதைப் பார்த்தபோது வாழ்க்கையும் அப்படித்தான் என்பதை அவரால் உணர்ந்துகொள்ளமுடிந்தது.
மனிதன் ஒடுங்கி முடங்கிவிட்டபோதிலும், அவனுடைய பகுத்தறிவு அவனுக்குப் புரிதலை இனங்கண்டு கொள்ள வைக்கின்றது.
அவரின் தோல்த்தசைகள் இப்போது நெகிழ்ந்து விட்டன. இனிமேல் அவர் வாழ்க்கையில் தனக்குரியதைப் பலவந்தமாகத்தான் எடுத்துக் கொள்ளவேண்டும். அவற்றைத் தாராளமாகப் பிறருக்குக் கொடுக்கவும் வேண்டும்.
தன் உள்ளத்திலிருந்து பெருக்கெடுத்து வரும் அன்பைப் பிரவாகப்படுத்தி, அதைக்கொண்டு இவ்வனத்துக்குள் நல்விளைவு பெறவேண்டுமென்று, அவர் தன் நீண்டகால இருப்பிடத்திலிருந்து ஏறி வரும்போதே மனதுக்குள் பதித்து வைத்துக் கொண்டார்.
அவரது வாழ்க்கை எனும் ஏட்டில் எஞ்சியிருக்கின்ற வெள்ளைப் பக்கங்களை மாத்திரமாவது, துணிச்சலாக எதிர்கொண்டு எழுதிவைத்துவிட வேண்டுமென்ற ஆர்வம் அவருக்குள் சங்கம்மாகிவிட்டது. விடியலைத்தேடித் தட்டுத்தடுமாறும் இந்த சமுதாயத்திற்கு விடிவொன்றைக் காட்டவேண்டுமென்று அவர் மனதார விரும்புகின்றார்.
குட்டையில் விழும் நீரை மீண்டும் ஒருமுறை அவர் நோட்டமிட்டுகின்றார். அதில் மண் கலந்து உண்மைத் தன்மை மாறியுள்ளது. மண்ணை வேறாக்கி நீரைத் தெளிதாக்குவது போன்று இந்த சமூகத்தையும் சீராக்கவேண்டும் என்பதுதான் அவரின் அவா. அதற்கு, தான் நீரில் வீசப்படும் கல்லாக இல்லாமல், நிலத்தில் விசிறப்படும் விதையாக மாற வேண்டும் என்று நினைத்துக் கொண்டவராக எழுந்து நின்றவர், தனது இறப்புவரை இனிமேல் எப்போதும் வாசஸ்தலமாகப் போகும் என்று அவர் நினைக்கின்ற, அந்தக் குகைக்குள் நுழைந்து விடுகின்றார்.
வாலிப முறுக்கேறி - திடகாத்திரமாக வளர்ந்திருந்த ஒரு மனிதர், கொடூரமனிதக் கும்பலொன்று இழுத்துச் சென்று கப்பலொன்றில் ஏற்றி நீண்டதூரக் கடற்பயணத்தின் பின்னர் - ஏதோ ஓர் இடத்தில் இறக்கிவிட்டு, அங்கு கடுமையாக வேலை வாங்கிக்கொண்டிருந்தவேளை,எப்படியும் தப்பிவிட வேண்டுமென்றிருந்த அந்த மனிதர், சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்து சூசகமாக அங்கிருந்து வெளிப்பட்டு, நூற்றுக்கணக்கான மைல்கள் தூரம் கடற்கரை வழியாகவும், வனாந்திரங்களினூடாகவும் நடந்து வந்து, நுழைந்து வாழ்ந்த குகைக்குள்ளேயே இப்போது இந்தப் பெரியாரும் தன் வாழ்க்கையைத் தொடரப்போகின்றார்!
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments