Ticker

6/recent/ticker-posts

Ad Code


 

ரூபா ஐபிஎஸ் vs ரோஹினி ஐஏஎஸ் விவகாரம்: கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை!

பெண் ஐஏஎஸ் அதிகாரி ரோஹினி சிந்தூரியின் அந்தரங்க படங்களை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கியிருக்கிறார் ரூபா ஐபிஎஸ்.  தனது படங்களை வெளியிட்ட ரூபாவுக்கு மனநிலை சார்ந்த பிரச்னை இருப்பதாக குற்றம் சாட்டுகிறார் ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி. இந்த விவகாரம் இந்திய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர்கள் மீது கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக மாநிலம் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா இருந்தபோது, பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதாக கூறி தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவில் பிரபலமடைந்தவர் ரூபா ஐபிஎஸ். இவர் தற்போது கர்நாடக கைவினை பொருட்கள் வளர்ச்சி கழகத்தின் நிர்வாக இயக்குனராக உள்ளார். இவர் அண்மையில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், அறநிலையத்துறை ஆணையராக இருந்த ரோகிணி சிந்தூரி ஐஏஎஸ் மீது சரமாரி புகார்களை முன்வைத்துள்ளார்.

அதில் முக்கியமாக, ரோகிணி சிந்தூரி மைசூரு மாவட்ட ஆட்சியராக இருந்தபோது மதசார்பற்ற ஜனதாதள எம்எல்ஏ மகேஷுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்தாகவும் ஆனால் தற்போது மகேஷுடன் ரோகிணி சமாதானம் பேசுவதாக புகார்களையும் ரூபா முன்வைத்துள்ளார்.

உலகமே கொரோனா பாதிப்பில் இருந்த போது, 2021ம் ஆண்டு அரசு குடியிருப்பில் ரோகிணி வசித்த வீட்டில் சொகுசு நீச்சல் குளம் கட்டியதாகவும், ரூபா குற்றம்சாட்டியுள்ளார். மேலும் கோலார் பகுதியில் பணியில் இருந்த ஐஏஎஸ் அதிகாரி ரவி இறப்புக்கும் ரோகிணிக்கும் தொடர்பு உள்ளதா என்றும் சந்தேகமும் எழுப்பியுள்ளார். பல்வேறு ஊழல் புகார்களிலும் ரோகிணிக்கு தொடர்பு உள்ள போது ஏன் அதனை இன்னும் விசாரிக்கவில்லை என்றும் ஐபிஎஸ் அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார். அரசியல்வாதிகளை அரசு அதிகாரி சந்திக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேட்டுள்ள ரூபா, கட்டப்பஞ்சாயத்து செய்து ரோகிணி பேரம் பேசுகிறாரா என்றும் கேட்டுள்ளார். இப்படி கிட்டத்தட்ட 20 புகார்களை ரோகிணி மீது ரூபா அடுக்கியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ரோகிணி, தனது வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் வைத்த புகைப்படங்களை ரூபா எடுத்துள்ளதாகவும், ரூபாவுக்கு மனநிலைசார்ந்த பிரச்னை உள்ளதாகவும் கூறியுள்ளார். தம்மைப்பற்றி தேவையில்லாத புகார்களை ரூபா முன்வைத்து வருவதால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் ரோகிணி விளக்கமளித்துள்ளார்.

கர்நாடக தலைமைச் செயலாளருக்கு ஐபிஎஸ் அதிகாரி ரூபா எழுதியுள்ள புகார் கடிதத்தில் கொரோனா காலத்தில் ஆயிரக்கணக்கானோர் இறந்து கொண்டிருந்தபோது மைசூரில் அரசு அலுவலக வளாகத்தில் ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரி நீச்சல் குளம் கட்டியது தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி ரவிசங்கர் அளித்த பூர்வாங்க அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டும் ஒழுங்கு நடவடிக்கை விசாரணை தொடங்கப்படவில்லை என்றும் அது தொடர்பான ஆவணங்களை வேண்டுமென்றே சிலர் தாமதப்படுத்துவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், அசையா சொத்துகள் பட்டியலில் ஜலஹல்லி பகுதியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட வீட்டைப் பற்றி குறிப்பிடவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளார். இதுபோல் பல்வேறு புகார்களை அடுக்கியுள்ளார்.

இந்த விவகாரம் இந்திய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர்கள் மீது கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.
news18



 



Post a Comment

0 Comments