Ticker

6/recent/ticker-posts

முகப்பருக்களை ஒழிக்க வழி சொல்வீர்களா?


நான் முகப்பருக்கள் ஏற்பட்டு கடந்த 6 வருட காலமாக எதுவித சிகிச்சை பலனுமின்றி மன விரக்திற்கு உள்ளாகியுள்ளேன். எனது முகத்தை எனக்கே பார்த்து சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு பருக்கள் ஏற்பட்டுள்ளன. தயவு செய்து கூடிய சீக்கரம் Dr.விடிவெள்ளி மூலம் ஆலோசனை தாருங்கள்.
பெளசியா, மருதமுனை

பதில்; முகப்பரு என்பது இளம் சந்ததியினரிடையே ஆண், பெண் என்ற வித்தியாசமின்றி பொதுவாகக் காணக் கூடிய ஒரு நோயாகும். இது உடல் நலத்திற்கு ஏற்படுத்தும் தீமையை விட மன நலத்தையும் அதிகமாகப் பாதிக்கின்றது. காரணம் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழிக்கமைய முகத்தின் அழகு கெட்டு விட்டால் அகமும் பாதிக்கப்படும்.

முகம் என்பது ஒரு மனிதனை அடையாளம் காண்பதற்கு முக்கியமாக இருப்பதோடு, சமூகத்தில் சகலருடனும் தயக்கமின்றிப் பழகுவதற்கு முகத்தின் அழகு முக்கியமாகும். எனவே தான் முகத்தைச் செழிப்பாகவும், பிரகாசமாகவும் வைப்பதில் கவனம் செலுத்துகிறோம்.

இன்று உலகின் சனத்தொகை 500 கோடியைத் தாண்டி விட்டது. அல்லாஹுத்தஆலாவின் வல்லமை என்னவென்றால், முகத்தில் ஒரே இடத்தில் கண், காது, மூக்கு, பல் போன்றவைகளை படைத்து இந்த 500 கோடி மக்களையும் ஒருவருக்கொருவர் வித்தியாசமானவர்களாகவும், வித்தியாசப்படுத்தப்படக் கூடியவர்களாகவும் படைத்துள்ளான். எனவே இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த முகத்தின் நலனை நாம் பேண வேண்டும்.

ஆனாலும் முகத்திற்கும் பல்வேறு பட்ட காரணங்களினால் பல நோய்கள் ஏற்படுகின்றன. அதில் பொதுவாக ஏற் படக்கூடிய நோய் தான் முகப்பருக்கள்.

முகப் பருக்கள் இளம் வயதினரையே பொதுவாகத் தாக்குகின்றன. ஒருவர் பருவமடையும் போது உடம்பினால் சில ஹோர்மோன்கள் அதிகமாகச் சுரக்கப் படுகின்றன. இந்த ஹோர்மோன்களின் தூண்டுதலினால் தோலில் காணப்படு கின்ற ஒருவகைப் புரோட்டீனையும், எண்ணெய்த் தன்மை கொண்ட ஒரு பதார்த்தத்தையும் அதிகமாகச் சுரக்கின்றன. இந்த எண்ணெய்த்தன்மையுடைய பதார்த்தம் ஒழுங்காக வெளியேற்றப்புடாமல் இருப்பதோடு அவை தோலில் உள்ள துவாரங்களை அடைப்பதன் மூலம் அங்கு தொற்றுதல் உண்டாகி முகப்பருக்கள் தோன்றுகின்றன. 

பருக்கள் பொதுவாக முகத்தில் தோன்றினாலும் கழுத்து தோற்பட்டை போன்ற பகுதிகளிலும் தோன்றலாம்.

முகப் பருக்கள் இருக்கும் பெண்களுக்கு மாதவிடாய் நெருங்கும் போது பருக்கள் அதிகமாகத் தோன்றும். அத்துடன் Progesterone எனப்படும் ஹோர்மோன் அதிகமாக இருக்கும் குடும்பக்கட்டுப்பாட்டு மாத்திரையினைப் பாவிக்கும் பெண்களுக்கு முகப்பருக்கள் ஏற்படலாம். மேலும் பருக்கள் பரம்பரையாக சில குடும்பங்களில் காணப்படுகின்றன. அதிக எண்ணெய்த் தன்மையுடைய தோலை உடையவர்கள், அடிக்கடி அலர்ஜி ஏற்படுகிறவர்கள் prednisolone மற்றும் Lithium, சில வலிப்பு மாத்திரைகள் பாவிப்பவர்களுக்கும் முகப்புருக்கள் தோன்றலாம். 

எனவே முகப்பருக்கள் வராமல் தடுப்பதாயின் மேற்கூறிய காரணிகளை கருத்திற்கொள்ள வேண்டும். முக்கியமாக முகப் பூச்சுகளாக இரசாயன பொருட்கள் அடங்கியவைகளைத் தவிர்க்க வேண்டும்.

ஒருவருக்கு முகப்பரு ஏற்பட்டு விட்டால் சொக்லேட், படர் சீஸ், கோப்பி, முட்டை, கொழுப்பு அடங்கிய உணவு வகைகளை இறைச்சி, பொரித்த உணவுப் பண்டங்கள், மென்பானங்கள், அலர்ஜியை ஏற்படுத்தக் கூடிய உணவு வகைகள் போன்வற்றைத் தவிர்க்க வேண்டும். மேலும் பருக்களை அடிக்கடி தடவுவதையோ அல்லது நசுக்கு வதையோ தவிர்க்க வேண்டும். மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய அதிக கோபம், வாழ்க்கைக்குப் பிரயோசன மளிக்காத விடயங்களை அதிகமாக யோசித்தல், தேவையற்ற தர்க்கம், உணர்ச்சிவசப்படுதல் போன்றவைகளையும் தவிர்த்தல் வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை முகத்திற்கு நீர் ஆவி பிடிப்பது நன்மை தரும்.

எம்மில் பலர் பருக்கள் ஏற்பட்டுவிட்டால் பருக்களை உடைப்பதன் காரணமாக அவை மேலும் பரவக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதோடு காயங்களினால் ஏற்பட்ட வடு தொடர்ந்தும் முகத்தில் நிலைத்திருக்கும். 

மற்றுமொரு சாரார் பருக்கள் ஏற்பட்டவுடன் வைத்தியர்களது ஆலோசனைகளை பெறாமல் பல இரசாயனப் பொருட்களினால் செய்யப்பட்ட பூச்சு மருந்துகளையும் மற்றும் மாத்திரைகளையும் பாவிக்கின்றார்கள். பரு ஏற்படுவதற்காக சரியான காரணத்தைத் தெரியாமல் இம்மருந்துக்களைப் பாவிப்பதனால் எதிர்பார்க்கும் பலனைப்பெற முடியாது.

யுனானி வைத்தியத்துறையில் இயற்கையான மூலிகைகளைக் கொண்டு, தயாரிக்கப்பட்ட பக்க விளைவுகளற்ற திருப்திகரமான பயனைத் தரக் கூடிய பல சிகிச்சை முறைகள் உள்ளன. 

இங்கு கேள்வி கேட்டிருப்பவரும் தனக்கு கடந்த 6 வருடங்களக முகப்பருக்கள் இருப்பதாகவும், இதற்குப் பல சிகிச்சைகள் பெற்றும் பயனில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நோயை மருந்தினால் மாத்திரம் குணப்படுத்த முடியாது. மருந்துகள் தொழிற்படுவதற்கு ஏற்ற சூழ்நிலையை எமது உடம்புக்கு நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதை நாம் உட்கொள்ளும் உணவுகளும் எமது ஏனைய தொழிற்பாடுகளுமே தீர்மானிக்கின்றன. 

இறுதியாக வாசகர்களுக்கு விசேடமாக இளம் வயதினருக்கு ஒரு செய்தியாக உங்கள் முகத்தைச் செழிப்பாக்கும் நோக்கத்தில் செயற்கைப் பொருட்களைப் பாவிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

DR.NASEEM



 



Post a Comment

0 Comments