சந்திரயான் நிலவுத் திட்டங்களும் தமிழ்நாட்டின் பங்களிப்பும்!

சந்திரயான் நிலவுத் திட்டங்களும் தமிழ்நாட்டின் பங்களிப்பும்!


விண்வெளித் தொழில் நுட்பத்தில் மேம்பாடுகளை ஆராய்வதற்கும், அவற்றை நாட்டு நலனுக்காகப் பயன்படுத்துவதற்குமாகவும் 1969ல் இந்தியா, தேசிய விண்வெளி முகாம் ஒன்றை பெங்களூரைத் தலைமையகமாகக் கொண்டு நிறுவியது. 
இது "ISRO" என்ற செல்லப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டு வருகின்றது!

நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008ம் ஆண்டு 'சந்திரயான்-1' என்ற விண்கலத்தை 386 கோடி ரூபாய் செலவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ, அதன் மூலம் நிலவில் நீர் இருப்பதற்கான தடயங்களை அறிந்து கொண்டது.
அதனைத் தொடர்ந்து, பத்து ஆண்டுகளுக்குப் பின் 603 கோடி ரூபாய் செலவில் 'சந்திரயான்-2' விண்கலத்தை அனுப்பியவேளை, அது வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதை வரை சென்று, லேண்டரைத் தரையிறக்க முயன்றபோது, சமிக்ஞை  இழக்கப்பட்டதால் நிலவின் தென் துருவப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.

அதன் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட ISRO தற்போது 'சந்திரயான்-3' விண்கலத்தைத் நிலவுக்கு ஏவியது

அதிலிருந்து பிரிந்த 'விக்ரம் லேண்டர்' கடந்த 23.08.2023 அன்று  மாலை 6.03 மணிக்கு வெற்றிகரமான நிலவில் தரையிறக்கப்பட்டதன்  மூலம் அமெரிக்கா, ரஷ்யா,      சீனாவுக்கு அடுத்தபடியாக நிலவில் தடம்பதித்த நாடு என்ற பெருமையையும், நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதலாவது நாடு எனும் பெருமையையும் இந்தியா பெற்றுக்கொண்டது!

விக்ரம் லேண்டர் நிலவின் தரையில்  இறங்கியபோது எழுந்த தூசுகள் முழுவதுமாக நீங்கிய பின், அதிலிருந்த 'ரோவர்' வெளியே வந்து முதலாவது புகைப்படத்தை எடுத்தனுப்பியது.

சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து   வெளிப்பட்ட லேண்டர் தரையிறங்கிய அதே இடத்தில் அப்படியே இருக்க, ‘பிரக்யான்’ ரோவர் பத்திரமாக நிலவின் தரைப்பகுதியில் இறக்கப்பட்டு,  நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து ஆய்வுகளை மெற்கொள்ள ஆரம்பித்துள்ள நிலையில், சிரிது தூரம் முன் நகர்ந்து கொண்டிருந்த வேளை, பல்லமோன்றை எதிர்கொண்டதால், ரோவர் வேறு பக்கமாகத் திருப்பப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.

“பிரக்யான் ரோவர் நிலவில் நகர்வதற்கு விக்ரம் தரையிறங்கி  வழிகாட்டுகின்றது. ரோவரில் மொத்தம் ஆறு சக்கரங்கள் உள்ளன. அந்த ஆறு சக்கரங்களுக்கும் தனித்தனியாக டிசி மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது,” என்று முனைவர் எஸ்.பாண்டியன் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

"பூமியில் நாம் பார்க்கக்கூடிய நான்கு சக்கர வாகனங்களில் இருசக்கர இயக்கம், நான்கு சக்கர இயக்கம் போன்ற இயக்கவியல் செயல்முறையைப் பார்த்திருப்போம். அவற்றில், இரண்டு சக்கரங்களுக்கு ஒரு மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும். அந்த இரண்டு சக்கரங்களும் இணைந்தே இயங்கும். ஆனால், நிலவில் ஆய்வு செய்யப்போகும் ரோவரின் ஆறு சக்கரங்களுக்கும் தனித்தனியாக மோட்டார்கள் உள்ளன. இதனால், ஒவ்வொரு சக்கரமும் அவற்றின் போக்கில் சுதந்திரமாகச் செயல்பட முடியும். அவற்றுக்கு  டிபெரென்சியல்  பிரேக்குகள் பொருத்தப்பட்டிருக்கும். இவையனைத்தும் பொதுவான ஒரு செயற்கை நுண்ணறிவு இணைக்கப்பட்டிருக்கும். அதுவே எந்த சக்கரம் எங்கு செல்ல வேண்டும் என்பதற்கான கட்டளைகளை வழங்கும்,” என்று விளக்கும் முனைவர். எஸ். பாண்டியன்,"இதன்மூலம், நிலவின் தரைப்பரப்பில் உள்ள பள்ளங்களில் ஏதேனும் ஒன்றில் ரோவரின் ஏதாவது ஒரு சக்கரம் சிக்கினாலும்கூட அதை மற்ற ஐந்து சக்கரங்களும் சேர்ந்து வெளியே கொண்டுவந்துவிடும். அது மட்டுமின்றி விநாடிக்கு ஒரு சென்டிமீட்டர் என்ற வேகத்தில் ரோவர் பயணிக்கும். லேண்டரும் ஒருபுறம் அதற்குத் தொடர்ச்சியாக வழிகாட்டிக் கொண்டே இருக்கும் தரையிறங்கி கலன், ரோவரின் பாதையில் எங்கேயாவது பெரும் பாறைகள் கிடந்தால் அவை குறித்த எச்சரிக்கைகளை வழங்கும். அதன்மூலம் எங்கும் மோதிவிடாமல் ரோவர் பாதுகாக்கப்படும்"என்றும் கூறுகிறார்.

நிலவின் வெப்பநிலை?

விக்ரம் லேண்டரில் உள்ள சேஸ்ட் (Chandra's Surface Thermophysical Experiment (ChaSTE) ) சாதனத்தின் முதல் ஆய்வுத் தரவுகள் கிடைத்துள்ளன.

இந்த சேஸ்ட் (ChaSTE) சாதனத்தை, திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் அகமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகளின் கூட்டிணைப்பில் வடிவமைக்கப் பட்துள்ளது. இந்த ஆய்விற்காக பத்து வெப்பநிலை உணரிகள் பொருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக்கருவி மூலம் நிலவின் மேற்பரப்பில் உள்ள மணலின் வெப்பநிலை ஆராயப்படுகின்றது.  நிலவின் மேற்பரப்பின் வெப்பநிலை குறைந்தபட்சம் ஆழத்தில் தென் துருவத்திற்கு அருகில் வேகமாகக் குறைவதை அது வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, ரோவர் நிலவின் தரைப் பரப்பில் உள்ள மணலிலிருந்து 10 செ.மீ. ஆழத்துக்குத் துளையிட்டு, தனது சென்சார்கள் வாயிலாக வெப்பநிலையைப் பதிவு செய்து அனுப்பியுள்ள்தாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவுக்கு போவதும், ஆய்வுகளை மேற்கொள்வதும்  வீண் செலவு என்று விண்வெளி ஆய்வு நாடுகள் முடிவு செய்து, திட்டங்களை அடியோடு நிறுத்தி வைத்திறுந்தபோது, இந்தியா, சந்திராயன்-1ஐ நிலவுக்கு அனுப்பி தென் துருவத்தில் உரைபணி வடிவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதை உறுதி செய்தது!

இப்போது நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கிய பிரக்யான் ரோவர், லேண்டரை சுற்றி வலம் வந்து கொண்டிருக்கின்ற நிலையில், நிலவின் மேற்பரப்பிலுள்ள வெப்பநிலையை முதற்கட்டமாக ஆராயத் தொடங்கி, மகத்தான  கண்டுபிடிப்பொன்றை வெளியாக்கியுள்ளது. மேற்பரப்பில் ஒரு வெப்பமும், அதன் கீழே பத்து சென்டிமீட்டர் ஆழத்திலேயே கிட்டத்தட்ட 45-70 டிகிரி செல்சியஸ் வெப்பத்தன்மையும்  இருப்பதாக அது பதிவு செய்துள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானிகளே எதிர்பார்க்காத மர்ம முடிச்சை பிரக்யான் ரோவரின் முதற்கட்ட ஆராய்ச்சி கட்டவிழ்த்துள்ளது. விஞ்ஞானிகள் எதிர்பார்த்தது 20 முதல் 30 டிகிரி வரையான மாற்றத்தைத்தான்! ஆனால் ஒரேயடியாக அதைவிட மேற்சென்றிருப்பது ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது !

பல நூறு ஆண்டுகளாக நாம் ரசித்துக் கொண்டிருக்கும் நிலவில், நாம் கற்பனை கூட செய்து பார்க்காத வகையில் மர்மங்கள் பல உள்ளன. பூமியின் ஒரே துணைக்கோளான சந்திரனை நாம் புரிந்து கொள்ள இன்னும் நிறையவே கண்டுபிடிக்கப்பட வேண்டியிருக்கின்றது!

அதுவும், நிலவின் தென்துருவப் பகுதியில் வெப்பநிலை கண்டறிய சோதனை நடாத்தப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது!

நிலவில் கந்தகம்?

மேலும், ரோவரில் உள்ள எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோகிராப் மற்றும் லேசர் இன்டியூஸ்ட் ஸ்பெக்ட்ரோகிராப் துணையுடன் தென்துருவத்தில் 'கந்தகம்' இருப்பதை ரோவர் உறுதி செய்துள்ளதாகவும்  இஸ்ரோவின் விண்வெளி அப்ளிகேஷன் மையத்தின் இயக்குனர் நிலேஷ் தேசாய் தெரிவித்துள்ளார்.

நிலவின் மேற்பரப்பில் கந்தகம் (Sulfur) இருப்பதை சந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்யான் ரோவா் கண்டறிந்துள்ள அதேவேளை, தற்போது ஹைட்ரஜன்  தேடல் நடைபெற்று வருவதாகவும் அறிய முடிகின்றது!

நிலவின் தென் துருவத்தில் ‘பிரக்யான்’ ரோவா் நிலவு மேற்பரப்பில் தனது ஆய்வுகளை தொடர்ந்தும் நடத்தி வருகின்ற நிலையில், 'கந்தகம்' மட்டுமின்றி அலுமினியம், கால்சியம், இரும்பு, க்ரோமியம், டைடேனியம், மங்கனீஸ், சிலிக்கான் மற்றும் ஒக்சிஜன் போன்றவையும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கசிகின்றன; உண்மைத் தன்மையைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

ஆய்வுத் திட்டத்தின் முக்கிய இலக்குகளில் 'ஹைட்ரஜன்' தேடல் முக்கியமான ஒன்றாகும். இந்நிலையில், செப்டம்பர் 3ம் திகதி வரை லேண்டரும், ரோவரும் ஆய்வுப்பணிகளில் ஈடுபடும் என்று நம்பப்படுகின்றது. லேண்டர் மற்றும் ரோவரின் செயற்பாட்டை பூமியிலுள்ள தரைக் கட்டுப்பாட்டு மையத்தின் மூலமே இஸ்ரோ கண்காணித்து வருகின்றது.

சாதனையில் தமிழ் நாட்டின் பங்கு?

இந்த சாதனையில் தமிழ் நாட்டிற்குப் பெரும்  பங்குண்டு என்பதாக தற்போது ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

சந்திரயான்-1ல் திட்ட இயக்குனராக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை சந்திராயன் 3 திட்டத்தில் பெரும்பங்காற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து சந்திரயான்-2 திட்டத்தை தயாரித்த இரண்டு பெண்களில் வனிதா முத்தையா என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராவார். மேலும் சந்திரயான்-2 திட்டத்தின்போது இஸ்ரோவின் தலைவராக செயல்பட்டு,  சந்திராயன்-3  திட்டத்தையே வழி நடத்திய சிவன் என்பவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்தான்.  தற்போது, சந்திரயான்-3 திட்ட இயக்குனராக தமிழ்நாட்டை சேர்ந்த வீரமுத்துவேல் என்பவர் நியமிக்கப்பட்டு, திட்டத்தை வெற்றிகரமாக  நிறைவேற்றிக் கொடுத்துள்ளார்.

இவ்வாறு இந்தியாவின் மூன்று முக்கிய திட்டங்களிலும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் மிக முக்கிய பணியாற்றியுள்ளார்கள் என்பது பெருமைப்படத்தக்க ஒரு விடயமாகும்.

அதுமட்டுமல்லாது, சந்திரயான்-3 விண்கலனின் பல்வேறு முக்கிய பாகங்கள் தமிழ்நாட்டின்  கோயம்புத்தூரிலுள்ள 'சக்ரதாரா ஏரோஸ்பேஸ் அண்ட் கார்கோ பிரைவேட் லிமிடெட்' என்ற  நிறுவனத்திலேயே தயாரிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக லிக்விட் புரபல்ஸன் சிஸ்டம், திரஸ்ட் வால்வுகள், சி.இ.20 இன்ஜினில் பொருத்தப் பட்டுள்ள 130 பிரஷர் டிரான்ஸ் டியூசர்கள் ஆகியவை கோயம்புத்தூரிலிருந்து 'இஸ்ரோ' சென்ற தயாரிப்பு பொருட்களாகும். மேலும் ஜி.டி.என். மற்றும் 'எல் அண்டு டி' நிறுவனங்களின் தயாரிப்புகளும் 'சந்திரயான்-3 திட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

விஞ்ஞானி வீரமுத்துவேல்

வீரமுத்துவேல் எனும் பெயர் இன்று ஒட்டு மொத்த இந்திய தேசத்தினதும் கவனத்தை ஈர்க்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் சற்றே கூடுதல் பெருமிதத்துடன் இவர்  கொண்டாடப்படுகின்றார்.

இவ்வாறு கொண்டாடப்படும்  P, வீரமுத்துவேல் என்பவர் யார்?

தற்போது பெங்களூர் 'இஸ்ரோ' மையத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகளுள் ஒருவரான இவர்,  விழுப்புரம் அரச பாடசாலையில் படித்தவராவார்.  பாடசாலையில் படிக்கும்போது ஒரு  சராசரி மாணவனாக இருந்துள்ள இவர்;  அடுத்து என்ன படிக்க வேண்டும், எங்கே படிக்க வேண்டும் என்ற எவ்வித நோக்கமும்  இல்லாமல்  நண்பர்களோடு சேர்ந்து டிப்ளோமா இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (DME) துறையில்  சேர்ந்ததாக, அவரே குறிப்பிடுகின்றார்.

இன்ஜினியரிங் மேல்  தனக்கு வந்த விருப்பத்தாலேயே தன்னால் 90 சதவீதம் மதிப்பெண் பெற இயன்றதாக மேலும்  குறிப்பிடும் அவர், மெரிட்டில் ஸ்ரீ சாய்ராம் இன்ஜினியரிங் கல்லூரியில் பட்டப்படிப்பில் சேர்ந்து எல்லா செமஸ்டரிலும் முதல் அல்லது இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

நல்ல மதிப்பெண்ணைப் பெற்ற இவர், ஆர்இசி திருச்சி கல்லூரியில் எம்இ முதுநிலை படிப்பில் இணைந்து, இளநிலைபோல் முதுநிலையிலும் நன்றாகப் படித்து, தனது முதுநிலைப் படிப்பை முடித்துள்ளார்.

அதன் பின்னர், கோவை லக்‌ஷ்மி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனத்தில் சீனியர் இன்ஜினியராகப் பணியில் சேர்ந்த அவர், வேலை செய்து கொண்டிருந்தபோதே விண்வெளி ஆராய்ச்சி மீது அதிக ஈடுபாடு காட்டியுள்ளார். அதன்போதுதான் அவருக்கு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் இன்ஸ்டிட்யூட் பெங்களூருவில் ஹெலிகாப்டர் டிவிஷன் எனப்படும் ரோட்டரி விங் டிசைன் அண்ட் ரிசேர்ச் சென்டரில்  இன்ஜினியராகப் பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து அவரது கனவு மையமான இஸ்ரோவில் பணி புரியும் வாய்ப்பை அவர் பெற்றார்.

முதலில் ப்ராஜக்ட் இன்ஜினியர் (திட்ட பொறியாளர்) பின்னர் ப்ராஜக்ட் மேனேஜராக (திட்ட மேலாளர்) மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் உள்பட நிறைய ரிமோட் சென்ஸிங் அண்ட் சயின்டிஃபிக் சாட்டலைட் மிஷன்களில் பணியாற்றினார். தொடர்ந்துவந்த காலங்களில் தனது ஆராய்ச்சிக் கனவைக் கைவிடாது, சென்னை ஐஐடியில் பிஎச்டி ஆராய்ச்சிப் படிப்பில் இணைந்து, "வைப்ரேஷன், செபரேஷன் ஆஃப் எலக்ட்ரானிக் பேக்கேஜ் இன் சாட்டலைட்ஸ்"  என்ற தலைப்பில் நவீன ஆராய்ச்சியை மேற்கொண்ட அவரது  ஆராய்ச்சிக் கட்டுரைகள்  சர்வதேச இதழ்களில் பிரசுரமாகி,  வெற்றிகரமாக முனைவர் பட்டம் பெற்றார்.

அதன் பின்னர், அவருக்கு இஸ்ரோவின் முதல் 'நானோ சாட்டிலைட்' குழுவை வழிநடாத்தும் தலைமைப்பொறுப்பு கிடைத்தது. சந்திரயான்-2 திட்டத்தின் அசோசியேட் ப்ராஜக்ட் டைரக்டராக இருந்த அவர்,  சந்திரயான்-3 திட்டத்தில்  திட்ட இயக்குநர் பதவியைப் பெற்றார்.

தான் ஓர் எளிமையான மனிதர் என்பதை ஒப்புக்கொண்டுள்ள அவர், "வாய்ப்புகள் எல்லோருக்கும் இருக்கின்றன. அதை நாம் எப்படிப் பயன்படுத்துக் கொள்கிறோம் என்பது நம் கைகளில் தான் இருக்கிறது. சுய ஒழுக்கம், எதிர்பார்ப்புகளற்ற ஈடுபாடும், கடின உழைப்பும், தமக்கு இருக்கும் தனித்துவம் ஆகியன நிச்சயமாக வெற்றியைத் தரும்" என்கின்றார்.

விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை?

சந்திரயான்-1 திட்டத்தில்  விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, சந்திரயான்-2 திட்டத்தில் விஞ்ஞானி வனிதா, தற்போது சந்திராயன்-3 திட்டத்தில்  விஞ்ஞானி வீரமுத்துவேல் என்று சந்திராயன் திட்டங்களில் தமிழ்நாட்டவர் பெரும் பங்காற்றியுள்ளமை பெருமை தருகின்றது.

மயில்சாமி அண்ணாதுரை சந்திராயன் 1 திட்டத்தை 2008ல் வெற்றியாக்கியதையடுத்து அவர், “இந்தியாவின் நிலவு மனிதர்” என்று போற்றப்பட்டார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குனராக இருந்த இவர், சந்திரயான்-1 மட்டுமல்ல மங்கல்யான், சந்திரயான்-2 விண்வெளி திட்டங்களிலும் முக்கிய பங்காற்றினார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் சிறிய கிராமமான கோதவாடி கிராமத்தைச் சேர்ந்த இவர், பட்டமேற்படிப்பு படிக்கத் துவங்கும் வரை கோவை மாவட்டத்தைவிட்டுத் தாண்டியதில்லை.

1976ல் கோவையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரில் பட்டம் பெற்ற விஞ்ஞானி மயில்சாமி, 1982ல் கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியில் பட்டமேற்படிப்பு முடித்துள்ளார். 1982ம் ஆண்டில் தனது 24வது வயதில் இஸ்ரோவில் பணியில் சேர்ந்த இவர், அங்கு சுமார் 36 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

தன்னுடைய பணிக்காலத்தில் ஐஆர்என்எஸ்எஸ், ஜிசாட், ஆஸ்ட்ரோ சாட், இந்சாட் உள்பட 30 செயற்கைகோள்களை வடிவமைத்து, விண்ணில் செலுத்தியுள்ளார். திறமைசாலியான இவரின் வியக்க வைக்கும் அறிவியல் சிந்தனைக்கு 75க்கும் மேற்பட்ட விருதுகளை மத்திய, மாநில அரசுகள் மற்றும் பல்வேறு அமைப்புக்களும்  வழங்கி கௌரவித்துள்ளன.

விஞ்ஞானி வனிதா முத்தையா?

சந்திரயான்-2 திட்டத்தின் இயக்குநராக செயல்பட்டவர்  வனிதா முத்தையா ஆவார். திட்டப்பணி இயக்குநர் என்பது, மொத்த விண்கலம் மற்றும் அதன் உறுப்புகளை வடிவமைத்து, தயாரித்து, சரிபார்த்து, விண்கலத்தை இறுதி வடிவத்திற்கு கொண்டு வந்து, அதனைச் செலுத்தும் வரை பொறுப்பேற்பதாகும். இத்தகைய முக்கியப் பொறுப்பில் இருந்த வனிதா, சந்திரயான்-2 செயற்கைகோளுக்கு முன்னர் கார்டோசாட்-1, ஓசன்சாட் – 2 உள்ளிட்ட விண்கலங்களிலும் பணியாற்றியுள்ளார். 2013ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட "மங்கள்யான்" செயற்கைக்கோள் வடிவமைப்பில் வனிதாவின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். இஸ்ரோவில் நீண்டகாலம்  பணியாற்றியுள்ள இவர், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் வழிகாட்டுதலில், சந்திரயான்-2 திட்டத்தில் செயலாற்றினார்.

சந்திராயன்-2 விண்கலம் வெற்றியின் விளிம்பு வரை  சென்று வாய்ப்பைத் தவறவிட்டபோதிலும், இந்தியாவின் “ராக்கெட் பெண்மணி” என்று புகழப்பட்ட வனிதா,        திட்டப்பணி  இயக்குனராக செயல்பட்டவராவார்.

எனினும் சந்திரயான்-2 விண்கலத்தின்  லேண்டர் வெடிப்பதற்கு முன்னர், ரோவர் எடுத்த புகைப்படங்கள் மட்டுமே தற்போதைய வெற்றிக்குப் பயன்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. லேண்டர் வெடித்த நிலையில் நிலவில் இருக்கும் சந்திராயான்-2 விண்கலம், சந்திராயான்-3 விண்கலத்துடன் இன்னும் தொடர்பில்தான் இருக்கிறது.

சந்திராயன்-3 விக்ரம் லேண்டர் தரைதொட்ட இடம் இனி ‘சிவசக்தி பாயிண்ட்’ என்றும், சந்திரயான்-2 லேண்டர் 2019ல் நிலவின் மேற்பரப்பில் விழுந்து நொறுங்கிய இடம் 'திரங்கா' என்றும் அழைக்கப்படும் என்றும்,  சந்திராயன்-3 லேண்டர் நிலவின் மேற்பரப்பைத் தொட்ட நாளைக் குறிக்கும் வகையில் ஆகஸ்ட் 23ம் திகதி ‘தேசிய விண்வெளி தினமாகக் கொண்டாடப்படும் என்றும் அறியப்படுகின்றது.

நிலவில் சந்திராயன்-3 தரையிறங்கிய இடத்திற்கு ‘சிவசக்தி’ எனப் பெயரிட்டமை குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது!

செம்மைத்துளியான்


 



Post a Comment

Previous Post Next Post