Ticker

6/recent/ticker-posts

சூரியனை ஆய்வு செய்வது சாத்தியமா? விண்கலம் சென்றால் எரியாதா? ஆதித்யா விண்கலத்தின் பக்கா பிளான் இதுதான்!


சந்திரயான் -3ன் வெற்றியைத் தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்யும் வகையில், வரும் செப்டம்பர் இரண்டாம் தேதி ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
சந்திரயான் 3-ன் வெற்றி களிப்பு இன்னும் அடங்காத நிலையில் தான் அடுத்த பிரமாண்ட திட்டத்தின் செயல்பாட்டு தேதியை அறிவித்திருக்கிறது இஸ்ரோ. ஆம் சூரியனை ஆராயும் முயற்சியாக ஆதித்யா எல்1 குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது வரும் செப்டம்பர் 2ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று அறிவித்திருக்கிறது இஸ்ரோ.

ஆதித்யா என்றால் ஹிந்தியில் சூரியன் என்று பொருள். சூரியனை ஆராய உள்ளாதால் இந்த பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. நிலவு என்பது சாமானியரின் மொழியில் சொன்னால் சாதுவான நட்சத்திரம் எனலாம். ஆனால் சூரியன் அப்படி அல்ல! சூரியனுக்கு பயணம் செய்வது சாத்தியமா? வெயிலிலேயே பொருட்கள் உருகும் நிலையில், மைய மேற்பரப்பு வெப்பநிலை 15 லட்சம் டிகிரி செல்ஷியஸ் உள்ள சூரியனுக்கு அருகில் எப்படி செல்ல முடியும்.

சந்திரயானை போல் அல்ல ஆதித்யா. சூரியனில் நேரடியாக இறங்காது. சூரியனுக்கும் , பூமிக்கும் இடையில் உள்ள ஒரு புள்ளியில் நின்று சூரியனின் மேற்பரப்பை தான் ஆய்வு செய்யும். அதிலும் ஒரு சிக்கல் உள்ளது. சூரியனின் ஈர்ப்பு விசையால் அது உள்ளிழுத்துக்கொள்ளப்பட கூடாது.அதற்காக தான் லெக்ராஞ்சியன் புள்ளியில் அதை நிலைநிறுத்த இருக்கிறார்கள்.

இந்த புள்ளியில் பூமியின் ஈர்ப்பு விசையும், சூரியனின் ஈர்ப்பு விசையும் பூஜ்ஜியமாக இருக்கும். இவ்வாறு இரண்டு கோல்களுக்கு நடுவில் 0 ஈர்ப்பு விசையை கொண்ட புள்ளிகள் மொத்தம் ஐந்து. அந்த ஐந்தையும் லெஜ்ராஞ்சியன் 1, 2, 3, 4,5 என்கிறார்கள். இதில் முதல் புள்ளி தான் சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் உள்ளது. இதில் தான் ஆதித்யா தங்கி ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளது. இதனால் தான் இதற்கு ஆதித்யா எல்-1 என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தப் பயணம் எத்தனை நாட்கள் நடைபெறும்? சூரியன், பூமியிலிருந்து 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதில் லெக்ராஞ்சியன் முதல் புள்ளி சூரியனிலிருந்து ஒன்றரை கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தூரம் அதிகம் என்பதால் ஏவப்படும் தேதியிலிருந்து நான்கு மாதங்கள் பயணம் செய்யும் என்று கருதப்படுகிறது. இந்த விண்கலம் மூலம் சூரிய புயல்கள், பூமியில் ஏற்படும் மாற்றங்கள், ஒளிக்கோளம் மற்றும் குரோமோஸ்பியர் ஆகியவற்றை ஆய்வு செய்து பூமிக்கு தகவல்களை பெற முடியும்.

மேலும் சூரியனுடைய வெளி அடுக்கு மற்றும் அருகாமை புற ஊதாக்கதிர்களை ஆய்வு செய்வதே முக்கிய நோக்கமாகும். பூமியை நோக்கி வரும் சூரிய புயல்களை அறிந்து கொள்ளவும், அதன் தாக்கத்தை தணிக்கவும் தொடர்ச்சியாக சூரியன் குறித்த ஆய்வுகளை இஸ்ரோ மேற்கொள்ள உள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஏஜென்சி ஏற்கனவே இங்கு விண்கலன்களை அனுப்பியுள்ள நிலையில், சூரிய ஆராய்ச்சியில் ஈடுபடும் நான்காவது நாடாக இந்தியா இணையும்.

SOURCE:news18


 



Post a Comment

0 Comments