புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா -176

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா -176


தன் நண்பன் எதையெதையோ கூறி தன்னைக் குலம்ப வைப்பதாக செரோக்கி நினைத்தான். இதுநாள் வரை தன்னிடம் அவன் நடந்து கொண்டதை விடவும் வித்தியாசமான முறையில் இப்போது நடந்து கொள்வதும், பேசுவதும் செரோக்கியை சிந்திக்க வைத்தது.
 
நண்பனின் குழப்பநிலையைப் புரிந்து கொண்ட இர்வின், அலட்டிக் கொள்ளாமல் செல்போனை எடுத்து தன் காதலிக்கு மறு அழைப்பு விடுத்தான்.

"ஹலோ ... சிரோமி ஹிய...வட் கென் ஐ டூ போர் யூ மை டார்லிங்?"

"எனக்கொரு  நண்பன் புரோகோனிஷில் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தேனே... ஞாபகமா?"

"ஓம் ஒம் அது என்னமோ கரோக்கி..."

"கரோக்கி இல்லம்மா... செரோக்கி!"

"சரி ஏதோ ஒரு ரோக்கி... இப்ப அதுக்கு என்ன?"

"அவன் இங்கு வந்துள்ளான்... அவனுடன் கொஞ்சம் பேசேன்" என்றவன்,  அவளின் பதிலுக்குக் கூட காத்திராமல் போனை செரோக்கியிடம் கொடுத்து விட்டான்.

நீண்ட நேரமாக நண்பனின் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்த செரோக்கி, போனைக் கையிலெடுத்து தன் நண்பன் போலவே அதனைக் காதுக்கருகில் வைத்தான்.

"ஹலோ  நான் பேசுறது கேட்கிறதா?  நான் சிரோமி... உங்க நண்பனின் லவர்... அதுதான் காதலி!"

"சந்தோசம் சிஸ்டர்...உங்க நட்பு சிறப்புற  எனது வாழ்த்துக்கள்!" என்று கூறியவன், தொடர்ந்து பேசாமல் போனை இர்வினிடம் கொடுத்துவிட்டான்.

செரோக்கியிடமிருந்து போனை வாங்கிய இர்வின்,
"மதியம்... முச்சந்திப் பூங்காவனத்தில் சந்திப்போம்!" என்று மட்டும் கூறிவிட்டு, போனை மேசை மீது வைத்தான்.

செரோக்கியோடு பலதையும் அலவலாவிக் கொண்டே தனது வேலையில் மும்முரமாயிருந்த இர்வின், தேனீர் இடைவேளையின்போது, வழமைபோல்  டொராபிகா கொபீ ஷொப்"புக்குச் சென்றான். இருவரும் 'ப்ரவ்னி கேக்'கைச் சுவைத்துக் கொண்டே, சிகோரி கொபீ'யை சுவைத்துப் பருகினர்.

கொபீ ஷொப்பிலிருந்து வெளியேறு முன்,  தான் எடுத்து வந்த நாணயத்தாள்களை இர்வினின் கையில் கொடுத்தான் செரோக்கி! வாங்கிக்கொள்ள மறுத்த இர்வினைப் பலவந்தப் படுத்திக் கொடுத்துவிட்டு,

"புராதன நூலிலிருந்து காணாமற்போன பக்கங்களைக் கண்டுபிடிக்க உமக்கு  நிறையச் செலவாகலாம்... அதற்கு இது உதவியாக இருக்கட்டுமே"  
என்று கூறிவிட்டு,தன்னிடமிருக்கும் இரண்டொரு தாள்களை இந்நாட்டு நாணயமாக மாற்றித் தரும்படி குறிப்பிட்டதும், செரோக்கியை அழைத்துக்கொண்டு நாணயமாற்று நிலையம் சென்றான் இர்வின்.

(தொடரும்)


 



Post a Comment

Previous Post Next Post