உ.பி : “நானு இந்துதான்”: நமாஸ் செய்ய 2 நிமிடம் பேருந்தை நிறுத்திய நடத்துநர்.. விபரீத முடிவால் சோகம்!

உ.பி : “நானு இந்துதான்”: நமாஸ் செய்ய 2 நிமிடம் பேருந்தை நிறுத்திய நடத்துநர்.. விபரீத முடிவால் சோகம்!


உத்தர பிரதேசத்தில் இஸ்லாமிய பயணிகள் நமாஸ் செய்ய பேருந்தை 2 நிமிடம் நிறுத்தியதால் ஓட்டுநர் நடத்துநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனால் மன உளைச்சலில் இருந்த நடத்துநர் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

 
கடந்த ஜூன் 3-ம் தேதி உத்தர பிரதேசத்தில் உள்ள பைரேலி (Bareilly) என்ற பகுதியில் இருந்து டெல்லிக்கு அரசுப் விரைவு பேருந்து சென்றுள்ளது. இந்த பேருந்தில் மோஹித் யாதவ் என்பவர் ஒப்பந்தம் அடிப்படையில் நடத்துநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த சூழலில் அந்த பேருந்தில் பல்வேறு பயணிகள் பயணம் செய்த நிலையில், அன்றைய இரவு நேரத்தில் பேருந்து திடீரென பாதி வழயில் நிறுத்தப்பட்டது.

காரணம் பேருந்தில் இருந்த இஸ்லாமிய பயணிகள் சிலர் நமாஸ் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்ததால் பேருந்தை ஓட்டுநர், நடத்துநர் சிறுது நேரம் நிறுத்தியுள்ளனர். இதனால் சக பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே இந்த நிகழ்வு குறித்து வீடியோ எடுத்த பயணி ஒருவர் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு "பரேலியில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து நமாஸ் செய்வதற்காக நடுரோட்டில் நிறுத்தப்பட்டது. அங்கு ஏதேனும் குற்றம் நடந்திருந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பார்கள்?" என்று குறிப்பிட்டு புகார் தெரிவித்தார்.

மேலும் அந்த வீடியோவில் பேருந்து நடத்துநர் மோஹித் யாதவ், "நாங்களும் இந்துக்கள்தான். இங்கு இந்து, முஸ்லிம் என்று எந்தப் பிரச்னையும் இல்லை. இரண்டு நிமிடங்கள் பேருந்தை நிறுத்துவதால் என்ன நடந்துவிடப்போகிறது" என்று கேள்வி கேட்டதும் இடம்பெற்றிருந்தது. ஓட்டுநரின் இந்த செயல் சில பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பேருந்து ஓட்டுநர், நடத்துநரை எந்தவித முன்னறிவிப்புமின்றி போக்குவரத்துத்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்தனர். அதோடு நடத்துநர் மோஹித்தின் ஒப்பந்தமும் நிறுத்தப்பட்டது. இதனால் மோஹித் வேலையின்றி தவித்து வந்துள்ளார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவர், வேலை இல்லாத காரணத்தினால், மன உளைச்சலில் இருந்துள்ளார்.

வேறு வேலை தேடியும் கிடைக்கவில்லை என்பதால் மிகுந்த உளைச்சலில் இருந்த இவர், கடந்த திங்கட்கிழமை தனது சொந்த ஊரான மெயின்புரி என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்த இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூ.17,000 சம்பளத்துக்கு ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்த மொஹித்தின் குடும்பத்தில் 8 பேர் உள்ளனர்.

அவர்கள் அனைவரும் இவரது சம்பளத்தில் வாழ்ந்து வந்த நிலையில், வேலை இல்லாத காரணத்தினால் குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்டது. இந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இஸ்லாமிய பயணிகளின் கோரிக்கையை ஏற்று நமாஸ் செய்ய வெறும் 2 நிமிடம் பேருந்தை நிறுத்தியதற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதற்கு மக்கள் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.

Source:kalaignarseithigal


 





Post a Comment

Previous Post Next Post