
சிங்கப்பூர் ஜனாதிபதித் தேர்தலில் திரு தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்று நாட்டின் அதிபராக பொறுப் பேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
1991ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி, சிங்கப்பூரில் பொதுமக்களே நேரடியாக அதிபரைத் தேர்ந்தெடுக்க வழிவகை செய்யப்பட்டது.
இந்த சட்டவாக்கத்துக்குப் பின்னர் நடைபெறும் மூன்றாவது தேர்தல் இதுவாகும். ஜனாதிபதித் தேர்தலில் 27 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளனர்.
சிங்கப்பூர் மக்களின் ஒற்றுமை
சிங்கப்பூர் பல்லினங்கள் வாழும் நாடாக இருந்த போதிலும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையும் நாட்டின் மீது மக்கள் கொண்டுள்ள பற்றுமே அந்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய முதற்காரணமாகும்.
ஆசிய நாடான சிங்கப்பூரின் தற்போதைய ஜனாதிபதியான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹலீமா யாகூப் அவர்களின் ஆறு ஆண்டு பதவிக்காலம் அடுத்த மாதம் 13ம் திகதியுடன் முடிவடைகிறது.
புதிய ஜனாதிபதி
புதிய ஜனாதிபதித் தேர்தலுக்கான போட்டியில், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த 66 வயதான, திரு தர்மன் சண்முகரத்னம் முறையே 76,75 வயத்கள் கொண்ட சீன வம்சாவளிகளான இங் கொக் செங், டான் கின் லியான் ஆகியோர் வேட்பு மனுத் தாக்கல் செய்து, கடும் பிரசாரத்தில் ஈடுபட்டு, தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டது.

இன்று தேர்தல் நடைபெற்றபோது, தமிழ் வம்சாவளியான திரு தர்மன் சண்முகரத்தினம் 70 சதவீத வாக்குகளுடன் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்று, சிங்கப்பூர் ஜனாதிபதியாகத் தெரிவானார்.
தமிழ் வம்சாவளியான இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட திரு தர்மன் சண்முகரத்னம், கடந்த 2001ல் சிங்கப்பூரின் ஜூரோங் தொகுதியிலிருந்து பாராளுமன்ற அங்கத்தவராகத் தேர்ந்தெடுக்கப்பட்வராவார்.
சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதியமைச்சர் கல்விஅமைச்சர், துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ள இவருக்கு இந்த அதிபர் தேர்தலில் ஆளும் மக்கள் செயற்கட்சி ஆதரவளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரின் வரலாறு
சிங்கப்பூரின் வரலாறு 1819 ஜனவரி 29ம் திகதி ஸர் தோமஸ் ஸ்டாம்போர்ட் ரப்ல்ஸ (Sir Thomas Stamford Raffles ) என்ற ஆங்கிலேயர் இத்தீவை ஜொஹோர் சுல்தானிடமிருந்து பொறுப்பேற்றுக் கொண்டதுடன் ஆரம்பமாகின்றது.

"தோமஸ் ஸ்டாம்போர்ட் ரப்ல்ஸ்” தூரதிருஷ்டியுடன் செயல்பட்டு இத்தீவை நவீன நகராக மாற்றியமைப்பதற்கான முதல் முக்கிய காரியகர்த்தராகக் கருதப்படுகின்றார். வனாந்திரமாகவும், சேரும் சகதியுமாகவும் காணப்பட்ட மீன்பிடிக்கிராமம் சுதந்திர வர்த்தகவலயமாக மாற்றம் பெறுவதற்கு இவர்தான் முன்னோடி. அதனால்தான் இவர் சிங்கப்பூரின் “சிருஷ்டிகர்த்தா” என மதித்துப் போற்றப்படுகின்றார்.
கிழக்கிந்தியக் கம்பனியின் வசமிருந்த சிங்கப்பூர், 1858ல் பிரித்தானியர் வசமாகியதும், துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டு கிழக்கு - மேற்கு வர்த்தகத்தின் முக்கிய கப்பல் போக்குவரத்து மையமாகியது. 1869ல் சுயஸ்கால்வாய் திறக்கப்பட்டதும் கப்பல் போக்குவரத்தின் அதிகரிப்பானது சிங்கப்பூரின் சுதந்திர வர்த்தகத்துறையின் அபிவிருத்திக்கு வழிவகுத்ததெனலாம்.
பிரித்தானியா சிங்கப்பூரில் இராணுவக் கடற்படைத் தலங்களை அமைத்துக் கொள்ளத் தலைப்பட்டதுடன் - தனது கிழக்கத்திய சாம்ராஜ்யத்தின் பாதுகாப்பு அரணாகவும் இத்தீவை ஆக்கிக்கொண்டது. இதுவே இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானியப் படைகளால் முற்றுகையிடப்பட்டன.
1942 பெப்ரவரி 15ம் திகதி ஜப்பானியத் தளபதி "யமாசிதா தொமொயூகி" சிங்கப்பூரைக் கைப்பற்றியபோதிலும் - சீறுகொண்ட கூட்டுப்படைகளின் கடுந்தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல், ஜப்பான் தோல்வியுற்று, சிங்கப்பூர் மீண்டும் பிரித்தானியர் வசமாகியது. அதன் பின்னரே 1946ல் சிங்கப்பூர் தனித்துவமிக்க முடிக்குரிய காலனியாகியது.
சிங்கப்பூர் வரலாற்றில் 1959ல் நடைபெற்ற முதலாவது தேர்தலில் Peoples Action Party பெரும்பான்மை வெற்றியீட்டவே, லண்டனில் வக்கீல் படிப்பை முடித்து தாயகம் திரும்பிய “லீ குவான் யூ” பல உள்நாட்டுப் போராட்டங்களுக்கு ஆதரவாகக் களமிறங்கி, நாட்டை சகஜ நிலைக்குக் கொண்டுவந்து, இறுதியில் அவரே பிரதமரானார். மக்கள் “லீ குவான் யூ” வைத் தலையில் துக்கி வைத்துக் கொண்டாடினர்.
மிகக்குறைவான இயற்கை வளங்களைக் கொண்டிருந்த சிங்கப்பூர், தன் தேவைகளுக்கு மலேஷியாவையே பெரும்பாலும் சார்ந்திருந்த காலம். அதனால் லீ, சிங்கப்பூரை மலேஷியாவுடன் இணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். மக்களும் லீயின் கருத்துக்களைப் புரிந்துகொண்டு ஆதரவு தெரிவிக்கவே , பூரண சுதந்திரம் பெற்றிருந்த சிங்கப்பூர், 1962ல் நடைபெற்ற மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பின் பின்னர், 1963ல் மலேஷியாவின் சமஷ்டி ஆட்சியுடன் இணைந்தது.
1964ல் சிங்கப்பூரில் ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரங்கள் மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வெளியேற்றப்படக் காரணமாக அமைந்து விட்டமை ஒரு துயரமிக்க சம்பவமாகும்.
மலேஷியா நாடாளுமன்றத்தில், சிங்கப்பூரை வெளியேற்றுவது குறித்து நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததன் காரணமாக, 1965 ஆகஸ்ட் 9ம் திகதி சிங்கபூர் மலேஷியாவிலிந்து வெளியேற்றப்பட்டது. அதன்போது லீ மனமுடைந்து அழுததாகவும் கூறப்படுகின்றது.
“லீ குவான் யூ”

1959 முதல் 1990 வரையில் பிரதமராகவிருந்த லீ குவான் யூ (1923-2015) தனது ஆட்சியின் போதே நாட்டின் வேலையில்லாப் பிரச்சினை, வதிவிடப்பிரச்சினை, இயற்கை அனர்த்தங்கள் ஆகியவற்றுக்கு முகம்கொடுத்து, அவற்றிலிருந்தும் சிங்கப்பூரை மீளச்செய்து, வளமிக்க நாடாக்கினார்.
பிரித்தானியாருடனான படை ஒப்பந்தம் இவரது காலத்திலேயே செய்துகொள்ளப்பட்டதொடு, மலாய், சீனம், தமிழ், ஆங்கிலம் அரச மொழியாக்கப் பட்டமையும் குறிப்பிடத்தக்கது
1990ல் லீ குவான் யூ இராஜினாமாச் செய்யவே லீ அடுதாக் கோ சோக் துங் பதவியேற்றார். அதன் பின்னர் 2004ல் லீ குவான் யூவின் இளைய மகனான லீ ஹ்சின் டோங் பதவியேற்றார்.
அரசுத்தலைவராயிருந்த யூஸுப் பின் இஷாக் ஜனாதிபதியாக்கப்பட்டார். 1965ல் பதவியேற்ற யூஸுப் பின் இஷாக் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதல் ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.
1999ல் பதவிக்கு வந்த எஸ். ஆர். நாதன் இரண்டாவது முறையும் ஜனாதிபதியாகி, 2015 வரை ஜனாதிபதியாக இருந்து, 2016ல் காலமானார்.
ஹலீமா யாகூப்

தற்போதைய சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யாகூப் ஆவர். ஜனாதிபதி டோனி டான் கெங்யாமின் பதவிக் காலம் 2017ல் நிறைவடைந்ததையடுத்து, 1954ல் பிறந்த ஹலீமா யாகூப் சிங்கப்பூரின் எட்டாவது ஜனாதிபதியாவார்.
சிங்கப்பூர் வரலாற்றில் “முதற் பெண் ஜனாதிபதி” என்ற இடத்தை இவர் பெறுகின்றார். நான்கு முறை எம். பி. யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹலீமா யாகூப், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக ஐந்து முறை எந்த மொழி அல்லது இனப்பிரிவைச் சேர்ந்தவர்கள் ஜனாதிபதிப் பதவி வகிக்கவில்லையோ, அந்த மொழி அல்லது இனப்பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் ஜனாதிபதிப்பதவி முன்னிறுத்தப்பட வேண்டும் என்பது அந்நாட்டுச் சட்டமாகும்! சுழற்சி முறையில் அனைத்துப் பிரிவினருக்கும் பதவி கிடைக்க வாய்ப்பளிப்பது இந்தச் சட்டத்தின் நோக்கமாகும்.
1991ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி, சிங்கப்பூரில் பொதுமக்களே நேரடியாக அதிபரைத் தேர்ந்தெடுக்க வழிவகை செய்யப்பட்டதால், இந்த சட்டவாக்கத்துக்குப் பின்னர் நடைபெறும் மூன்றாவது தேர்தலில் திரு தர்மன் சண்முகரத்தினம், வெற்றிபெற்று, சிங்கப்பூரின் ஒன்பதாவது ஜனாதிபதியாகின்றார்.
வாழ்த்துக்கள்!
ஐ.ஏ.ஸத்தார்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்

.gif)



0 Comments