Ticker

6/recent/ticker-posts

"வெண்ணிலா"கவிதை மஞ்சரியும்,கவிஞர் எஸ். ஏ. கப்பாரும்.-VIDEO


ஆசிரியத்தொழில் புரிந்து வந்த ஒருவர் இலக்கியப் பணியில் தன்னை 
ஈடுபடுத்திக் கொள்வது சாதாரண ஒரு விடயமாகும்.  ஆனால், வங்கித் தொழில்  புரிந்துவந்தவர், இலக்கியப் பணியில் தன்னை ஈடுபடுவதென்பது அபூர்வமான செய்தியாகும்; ஆசிரியர் ஒருவருக்கு மகனாகப் பிறந்தமை கூட, அதற்குக் காரணமாகக் கொள்ளப் படலாம்.
 
ஓய்வுநிலை அதிபரான   காலஞ் சென்ற சுலைமா லெவ்வை செய்னுல் ஆப்தீன்,  காலஞ்சென்ற  முகம்மது அபூவக்கர்  முஸ்தபா பீவி ஆகியோருக்கு மகனாக, 1959 ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதி அப்துல் கப்பார், மருதமுனையில் பிறந்தார்.

கல்வித்துறை

தனது ஆரம்பக் கல்வியை,மருதமுனை அல்ஹம்றா வித்தியாலயத்திலும்,இடைநிலைக்கல்வியை, கல்முனை    கார்மேல் பாத்திமா கல்லூரியிலும்,உயர் கல்வியை,சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் பெற்ற இவர்,1995ம் ஆண்டு கணினி வரைகலைக் கல்வி,2000ம் ஆண்டு கணினி வன்பொருள் பொறியியல் கல்வி மற்றும் தொடர்பாடல் ஆங்கிலக் கல்வித்துறைகளில் டிப்ளோமா சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.

1981ம் ஆண்டு இலங்கை வங்கியில் பணியில் சேர்ந்து கொண்ட  இவரது,  இலக்கியப் பிரவேசம், 1977ம் ஆண்டு வெளிவந்த, ‘ஸாஹிரா’ இலக்கிய இதழில் ‘அவன் என்ன செய்து விட்டான்’ என்ற சிறுகதை பிரசுரமானதுடன் ஆரம்பமாகியது.  அதனைத் தொடர்ந்து, அதே ஆண்டு  அக்டோபர் மாதம் வெளிவந்த‘உள்ளம்’ என்ற இலக்கிய இதழில் ‘உயரத்திலிருப்பவன்’ என்ற உருவகக் கதை பிரசுரமானது.

அத்துடன், தேசிய நாளேடுகளிலும், சஞ்சிகைகளிலும் அவ்வப்போது கவிதைகளும், சிறுகதைகளும் பிரசுரமாகியுள்ளன.

1978 எப்ரல் மாதம் ‘காவியன்’ என்ற புனைப்பெயரில் இவரைப் பிரதம ஆசிரியராகக் கொண்டு,  ‘வெண்ணிலா’ கலை, இலக்கியச் சஞ்சிகை வெளிவர ஆரம்பித்து, தொடர்ந்து 12 இதழ்கள் வெளியாயின. 

2004 - 2006 காலப்பகுதியில் இவர் தேசிய பத்திரிகைகளுக்கு எழுதிய  25 கவிதைகளைத் தொகுத்து, ‘நிலவு அவள்’ கவிதைத் தொகுதியாக, 2019ம்ஆண்டிலும், 2000ம் ஆண்டு 'கொம்பியூட்டர் கவிதைகள்' கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டார்.

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில்

மேலும் கணினிக் கல்வி மற்றும் கணினி மென்பொருள் தொடர்பான, 
  • A Guide to PC users (Tamil + English),Quick reference to MS Excel 2000 (Tamil) 
  • Quick reference to MS Excel 2000 (English),Quick reference to MS Word 2000 (Tamil) Quick reference to MS Word 2000 (English)
  • Quick reference to MS Access 2000,
இன்ரநெட்டும் ஈமெயிலும் போன்ற  எட்டு நூல்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இவரால் வெளியிடப்பட்டுள்ளன.

"வெண்ணிலா" சஞ்சிகை

மீண்டும் 43 வருடங்களின் பின், 2021ம் ஆண்டு முதல்  ‘வெண்ணிலா கவிதை மஞ்சரி’ என்ற பெயரில் கவிதைளுக்கான காலாண்டிதழ் ஒன்றைத் தொடர்ச்சியாக வெளியிட்டு, இதுவரை பத்து இதழ்கள் வெளிவந்துள்ளன. கவிஞர் எஸ். ஏ. கப்பார்  தனது இளைப்பாறலுக்குப் பின்னர், "வெண்ணிலா" சஞ்சிகையை வெற்றிகரமாக நடாத்திவருவது பாராட்டப்பட வேண்டிய  ஒரு விடயமாகும்.  

தினகரன் பத்திரிகையும், மானஸி நிறுவனமும் 2004ம் ஆண்டு,   இணைந்து நடாத்திய முத்திரைக் கவிதைப் போட்டியில் இவரது 'என் காதல் நீதான்…’ கவிதை முதற்பரிசு பெற்றது. மற்றும், கல்முனைப் பிரதேச செயலகத்தினால் ‘கலைஞர் சுவதம் விருது 2021’ வழங்கி இவர்  கௌரவிக்கப்பட்டார்.

வங்கிச் சேவையில் பல பதவியுயர்வுகள்

2005ம் ஆண்டுகளைத் தொடர்ந்த காலப்பகுதியில் இலங்கை வங்கித் தலைமைக் காரியாலயத்தில் கணினிப் பிரிவிலும், சிலகாலம் இலங்கை வங்கி கிழக்கு மாகாண கணினித் தொழிநுட்ப ஆதரவு அதிகாரியாகவும் கடமையாற்றினார்.

தனது 34 வருட வங்கிச் சேவையில் பல பதவியுயர்வுகள் பெற்று இறுதியாக வங்கி முகாமையாளராகி, 2015ம் ஆண்டு ஓய்வுபெற்றார்.

அண்மைக் காலத்தில் 'தமிழன்’ வாரவெளியீட்டில் இவரது எட்டு சிறுகதைகள் வெளிவந்துள்ளன. 

அத்துடன் தற்போது கணனித்துறையில் கற்பதற்காகத் தன்னை நாடிவரும் நண்பர்களுக்கும், மாணவர்களுக்கும் கணினி மென்பொருள், வன்பொருள் மற்றும் இன்ரநெட் சம்பந்தமான கல்வியினை இலவசமாக வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செம்மைத்துளியான்.


 



Post a Comment

0 Comments