Ticker

6/recent/ticker-posts

பிசிறில்லாமல் வேலையை முடித்து ‘தூக்கம்’ போடும் பிரக்யான்.. 14 நாளில் கண் விழிக்குமா? இஸ்ரோ அப்டேட்!


ஸ்ரீஹரிகோட்டா: நிலவில் ஆய்வுப் பணிகளை நிறைவு செய்து ஸ்லீப் மோடுக்கு போனது பிரக்யான் ரோவர். ரோவர் நிலவில் மேற்கொண்ட ஆய்வின் தரவுகளை பூமிக்கு அனுப்பிவிட்டதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. 
கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்ட சந்திரயான்-3, கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கியது. சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடாகவும் பெயர் பெற்றது இந்தியா. நிலவில் தண்ணீரின் இருக்கிறதா என்று ஆராய்வதும் நிலவின் மேற்பரப்பு அம்சங்களை ஆராய்வதும் இந்த சந்திரயான் - 3 புராஜெக்ட்டின் நோக்கம்.

ஆகஸ்ட் 23 முதல் செயல்படும் பிரக்யான் ரோவர், அதன் பணிகளை தொடர்ந்து செய்து வந்தது. பள்ளங்களையும் மேடுகளையும் கடந்து பாதுகாப்பாக சென்று ஆய்வை மேற்கொண்டது பிரக்யான் ரோவர். ரோவரின் 100 மீட்டர் பயணத்தில், நிலவில் சல்பர், இரும்பு, ஆக்ஸிஜன், அலுமினியம், சிலிக்கான் மற்றும் பிற தனிமங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது. பிளாஸ்மா இருப்பதையும் கண்டறிந்துள்ளது.

இதற்கு முன்னர் வேறு எந்த நாட்டின் ரோவரும் இப்படி நிலவில் சல்பரை கண்டுபிடித்ததில்லை. அதேபோல டைட்டேனியம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது நிலவின் தென் துருவத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது. ஹைட்ரஜனுக்கான தேடலில் ஈடுபட்டு வந்தது பிரக்யான் ரோவர்.

இந்நிலையில், நிலவில் பகல் நேரம் முடிவுக்கு வருவதையொட்டி சூரிய ஒளி மங்கத் தொடங்கியுள்ளது. இதனால், இஸ்ரோ விஞ்ஞானிகள், விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டையும் ஸ்லீப் மோடுக்கு மாற்றியுள்ளனர். இரண்டும் சூரிய சக்தியில் இயங்குபவை என்பதால் சூரியன் இல்லாத நேரத்தில் அவை செயல்பட முடியாத நிலை ஏற்படும்.

நிலவில் அடுத்த 14 நாட்கள் சூரிய ஒளியைப் பெறமுடியாது என்பதால் ரோவர் மற்றும் லேண்டரின் செயல்பாடுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மீண்டும் நிலவில் பகல் நேரம் வரும்போது, அதாவது செப்டம்பர் 22ஆம் தேதி ரோவரும் லேண்டரும் நல்ல நிலையில் இருந்தால், அவற்றை மீண்டும் செயல்பட வைக்க முயற்சி செய்யலாம் என்று இஸ்ரோ கூறியுள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ரோவர் தனது பணிகளை முடித்தது. இது இப்போது பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு ஸ்லீப் மோடுக்கு மாற்றப்பட்டுள்ளது. APXS மற்றும் LIBS பேலோடுகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த பேலோடுகளில் இருந்து டேட்டா லேண்டர் வழியாக பூமிக்கு அனுப்பப்படுகிறது. தற்போது, ​​பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் 22 அன்று எதிர்பார்க்கப்படும் அடுத்த சூரிய உதயத்தின்போது சூரிய ஒளியைப் பெறும் வகையில் சோலார் பேனல் தயாராக அமைக்கப்பட்டுள்ளது. ரிசீவர் இயக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த செட் பணிகளைச் செய்வதற்காக ரோவர் மீண்டும் எழும் என்று எதிர்பார்க்கிறோம்! இல்லையெனில், அது இந்தியாவின் நிலவு தூதராக எப்போதும் அங்கேயே இருக்கும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நமது பூமியில் ஒரு நாள் என்பது 24 மணி நேரம், 12 மணி நேரம் பகல், 12 மணி நேரம் இரவு. ஆனால் நிலவில் ஒரு நாள் என்பது பூமியின் 28 நாளை குறிக்கிறது. நிலவில் தொடர்ந்து 14 நாட்கள் பகலும், அடுத்த 14 நாட்கள் இரவாகவும் இருக்கும். பகல் தொடங்கியபோது சந்திரயான் 3 விக்ரம் லேண்டரை நிலவின் தென் துருவத்தில் தரை இறக்கினர்.

சூரிய வெப்பத்தைப் பயன்படுத்தி, லேண்டரில் இருந்து பிரிந்த பிரக்யான் ரோவர் நிலவில் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது. 14 நாட்களுக்குள் அனைத்து ஆய்வுகளையும் முடிக்கும் வகையிலேயே திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, தனக்குக் கொடுக்கப்பட்ட பணிகளை வெற்றிகரமாக முடித்துவிட்டது பிரக்யான் ரோவர்.

இதையடுத்து அடுத்த 14 நாட்கள் இரவாக இருக்கும் என்பதால், சூரிய ஒளி கிடைக்காது. இரவு நீடிக்கும் 14 நாட்களில் நிலவும் உறைபனி குளிர் காரணமாக, கருவிகளின் பாகங்களில் விரிசல்கள் ஏற்படலாம். இதனால், லேண்டர், ரோவர் கருவிகள் இயங்காமல் போகவும் வாய்ப்பிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை செப்டம்பர் 22ஆம் தேதி மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டால், ரோவர் அடுத்த 14 நாட்களுக்கு மீண்டும் தனது அடுத்தகட்ட ஆய்வைச் செய்யும்.

SOURCE:oneindia


 



Post a Comment

0 Comments