சீனாவின் மிக அழகான யோகா பாட்டி.. 78 வயது பாட்டியை பின்பற்றும் பல லட்சம் பேர்.. சிலிர்க்க வைத்த சாதனை

சீனாவின் மிக அழகான யோகா பாட்டி.. 78 வயது பாட்டியை பின்பற்றும் பல லட்சம் பேர்.. சிலிர்க்க வைத்த சாதனை


பெய்ஜிங்: 60 வயதில் புற்றுநோய் வந்த மூதாட்டி, 18 வருடங்களில் அப்படியே குமரியாக மாறி உள்ளார், 78 வயதில் சீனாவில் 'சிறந்த யோகா பாட்டியாக' உருமாறி உள்ளார். 

நல்ல உடற்பயிற்சியும், நேர்மறையான எண்ணங்கள் காரணமாக அவரது உடல் நிலையும் மனநிலையும் அடியோடு மாறி உள்ளது.

வடகிழக்கு சீனாவில் உள்ள தியான்ஜின் நகரைச் சேர்ந்தவர் பாய் ஜின்கின், இவர் தான் "சீனாவின் மிக அழகான யோகா பாட்டி" என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார். இவர் சீன மக்களிடையே அதிக பிரபலமான நபராக மாறி உள்ளார்.

78 வயதாகும் பாய் ஜின்கின் ஜிம்மில் தனது முழு தலையும் நரைத்த தலைமுடியுடன், கடினமான உடற்பயிற்சியுடன், பளு தூக்குதலையும் அசால்ட்டாக செய்து வரும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பேரால் சமீபகாலமாக பகிரப்படுகிறது.

பாய் ஜின்கின் இளமையாக இருந்த காலக்கட்டத்தில் உடல் நிலையை பற்றி கண்டுகொள்ளாமல் உழைத்துக் கொண்டிருந்தார். பாய் ஜின்கின் பொதுவாக நீண்ட நேரம் உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்து வந்துள்ளார். அதேபோல் தாமதமாக தூங்குவதையும் வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். பணம் சம்பாதிப்பதற்காக அதிகப்படியான நேரம் தூங்காமல் உட்கார்ந்து உட்கார்ந்து உழைத்ததால் நோய் வந்தது தான் மிச்சம்.

60 வயதிலேயே பல்வேறு உடல் நல பாதிப்புகளை கண்ட பாய், ஒரு கட்டத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். பொதுவாக முதியவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டால் மீண்டு வருவது கடினம். இந்நிலையில் பாய் மூன்று அறுவை சிகிச்சைகளில் உயிர் பிழைத்தார். புற்றுநோயில் இருந்து மீண்டவருக்கு, அப்போது தான் உடல் நிலை குறித்து அக்கறை வந்துள்ளது. எப்படியாவது உடற்பயிற்சி மேற்கொள்வதுடன், வழக்கமான வாழ்க்கையை முறையை மாற்றி, உடல் நிலையை மேம்படுத்த வேண்டும் என்று விரும்பி உள்ளார்.

பொதுவாக 60 வயதில் அதுவும் புற்று நோயில் இருந்து மீண்டவர்கள், உடனே கடினமான உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாது. இதை உணர்ந்த பாய் முதலில் உடற்பயிற்சி செய்வதற்காக மன ரீதியாக தயாரானார். நேர்மறையான சிந்தனைகள் நம்மை மாற்றும் என்பதற்கு பாய் சிறந்த உதாரணம். நேராக ஜிம்மிற்கு போனார். அங்கு உறுப்பினராக சேர்ந்தார். ஆரம்பத்தில், அவரது உடல் திறன் மோசமாக இருந்தது. அப்போது உடற்பயிற்சிகளைப் பற்றி எதுவும் அவருக்கு தெரியாது. ஆனால் முயற்சி செய்வதே மிக முக்கியமானது என்று உறுதியாக நம்பினார்.

ஜிம்மில் ஆரம்பித்திலேயே கடினமான உடற்பயிற்சி மேற்கொள்வது ஆபத்தானது என்பதை புரிந்து கொண்ட பாய், முதலில் விறுவிறுப்பாக நடைபயிற்சி மேற்கொண்டார்.. கயிறு தள்ளுதல், மற்றும் மூட்டுகள் மற்றும் தசைகளில் எளிதாக இருக்கும் மென்மையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார் பாய். பின்னர் காலப்போக்கில் உடல் வலுவடைவதை உணர்ந்து, படிப்படியாக அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகளை செய்ய தொடங்கி உள்ளார்.

பாய் இப்போது யோகா, பைலேட்ஸ், உள்ளிட்ட பலவிதமான பயிற்சிகள் செய்து வருகிறார். ஜிம்மில் அசால்ட்டாக பல ஒர்க் அவுட்களை செய்கிறார். இன்றைய இளைஞர்கள் 25 வயதில் செய்யத் தயங்குவது எழுபத்தி எட்டு வயதில் பாட்டி பாய் செய்து வருகிறார். சீனாவில் உள்ள சமூக ஊடகங்களில் லட்சக்கணக்கான மக்கள் பாய் பாட்டியை பாராட்டி தள்ளுகிறார்கள். 60 வயதில புற்று நோயில் இருந்து மீண்டு, 78 வயதில் சீனாவின் மிக அழகான யோகா பாட்டி என்று பட்டம் பெற்றுள்ள பாய்யின் கதை சீனாவில் இப்போது அதிகம் பேசப்படுகிறது.

பாய் ஜின்கின்னின் வீடியோக்களை பார்த்த நெட்டிசன்கள் பலர், இந்த வயதில் அதுவும் 20 வருடங்கள் இப்படி உடற்பயிற்சி செய்வது நிச்சயம் நிறைய இளைஞர்களால் முடியாது என்று கூறியுள்ளனர்.சிலர் பாட்டியின் கதை தங்களுக்கு ஊக்கமளிக்கிறது என்றும், அவரிடம் இருந்து வாழ்க்கையில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

Source:oneindia


 



Post a Comment

Previous Post Next Post