கனிமொழி, ஜோதிமணி உட்பட 14 எம்.பிக்கள் சஸ்பெண்ட்.. நாடாளுமன்றத்தில் நடப்பது என்ன?

கனிமொழி, ஜோதிமணி உட்பட 14 எம்.பிக்கள் சஸ்பெண்ட்.. நாடாளுமன்றத்தில் நடப்பது என்ன?

மக்களவையில் நடந்த பாதுகாப்பு அத்துமீறல் விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகக்கோரி அமளியில் ஈடுபட்ட 14 எம்பிக்கள் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் இளைஞர்கள் 2 பேர் அத்துமீறி நுழைந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மிகுந்த பரபரப்புக்கு இடையே நேற்று நாடாளுமன்றம் கூடியது. அப்போது பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஸ் வழங்குவதில் அனைவரும் கவனமுடன் செயல்பட வேண்டும் எனவும், எதிர்காலத்தில் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதை ஏற்காத எதிர்க்கட்சி எம்பிக்கள், நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறலுக்கு பொறுப்பேற்று, உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என முழக்கமிட்டனர். அப்போது பதில் அளித்த சபாநாயகர் ஓம் பிர்லா, அவையின் பாதுகாப்புக்கு நாடாளுமன்ற செயலகம் தான் பொறுப்பு என விளக்கம் அளித்தார். எனினும், தொடர்ந்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு, அவை நடவடிக்கைகள் முடங்கின.

பின்னர் மீண்டும் மக்களவை கூடியபோது பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, பாதுகாப்பு அத்துமீறல் துரதிர்ஷ்டமான சம்பவம் எனவும், இதில் அரசியல் செய்ய வேண்டாம் எனவும் கூறினார். எனினும், அமித்ஷா பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவர்களை இந்த கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி முன்மொழிந்தார்.குரல் வாக்கெடுப்பில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அவை நடத்தை விதியை மீறியதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த கனிமொழி, ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், சுப்பராயன், பி.ஆர்.நடராஜன் உள்ளிட்ட 14 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இடைநீக்கம் செய்யப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட்டதில் குழப்பம் ஏற்பட்டது. அவைக்கு வராத திமுக எம்பி எஸ்.ஆர்.பார்த்திபனின் பெயரும் சஸ்பெண்ட் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. 

இது குறித்து சுட்டிக்காட்டப்பட்ட பின்னர், இடைநீக்கம் செய்யப்பட்டது திமுக எம்பி கௌதம சிகாமணி எனவும், எஸ்.ஆர்.பார்த்திபன் பெயர் தவறுதலாக இடம் பெற்றுவிட்டதாகவும் நாடாளுமன்ற செயலகம் தெரிவித்தது. எனினும், குழப்பங்களுக்குப் பின்னர், நாடாளுமன்ற செயலகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், கௌதம சிகாமணியின் பெயர் இடம்பெறவில்லை. மக்களவையில் 13 எம்பிக்கள் மட்டுமே சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிக்கள் மக்களவைக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பேசிய திமுக எம்பி கனிமொழி, நாடாளுமன்றத்தில் நடந்த மிகப்பெரிய பாதுகாப்பு அத்துமீறலை பாஜக மிக எளிமையாக கடந்து செல்வதாக குற்றம் சாட்டினார்.

இதேபோல, உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என மாநிலங்களவையிலும் கடும் அமளி ஏற்பட்டது. அப்போது, மாநிலங்களவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததாகக் கூறி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., டெரிக் ஓ பிரைய்ன்-ஐ, கூட்டத்தொடர் முடியும் வரை இடைநீக்கம் செய்வதாக துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவித்தார். அவையிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் தன்கர் உத்தரவிட்டார்

நாடாளுமன்ற எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது கருத்துரிமையை பறிக்கும் செயல் எனவும், ஜனநாயக விரோத நடவடிக்கை எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

news18



 



Post a Comment

Previous Post Next Post