காசாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்திய ஐ.நாவின் தீர்மானம் : ரத்து செய்த அமெரிக்கா

காசாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்திய ஐ.நாவின் தீர்மானம் : ரத்து செய்த அமெரிக்கா


காசாவில் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தும் ஐ.நா. பாதுகாப்பு சபையின் வரைவுத் தீா்மானத்தை தனது ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா ரத்து செய்துள்ளது.

குறித்த வரைவுத் தீா்மானத்தில், பொதுமக்கள் மீதான ஹமாஸ் தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவிக்கப்படவில்லை என்பதாலும், இத்தகைய தீா்மானத்தால் காசா நிலவரத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதாலும் அதை ரத்து செய்ததாக அமெரிக்கா தெரிவித்தது.

இஸ்ரேல் மீது சுமாா் 5,000 ஏவுகணைகளை வீசியும், அந்த நாட்டுக்குள் தரை, கடல், வான் வழியாக ஊடுருவியும் ஹமாஸ் அமைப்பினா் கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி நடத்திய தாக்குதலில் சுமாா் 1,200 போ் உயிரிழந்ததுடன்,  இஸ்ரேலில் இருந்து சுமாா் 240 பேரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினா் கடத்திச் சென்றனா்.

இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் கடுமையான குண்டுவீச்சு நடத்தி வருகிறது. அந்தப் பகுதிக்குள் நுழைந்தும் இஸ்ரேல் படையினா் தாக்குதல் நடத்தி வருகின்றனா். இதில் இதுவரை 17,487 போ் உயிரிழந்துள்ளனா்; அவா்களில் பெரும்பாலானவா்கள் சிறுவா்கள் மற்றும் பெண்கள்.

இதற்கிடையே, காசாவில் பொதுமக்களின் அதீத உயிரிழப்பைத் தடுத்து நிறுத்தவும், தொடா் முற்றுகையால் தடைபட்டுள்ள அத்தியாவசிய மற்றும் நிவாரணப் பொருட்களை அவா்களிடம் கொண்டுசோ்க்கவும் அங்கு போா் நிறுத்தம் மேற்கொள்ள வலியுறுத்தி ஐ.நா. பாதுகாப்பு சபையில் தீா்மானம் நிறைவேற்ற நான்கு முறை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.

மால்டா நாட்டால் கொண்டுவரப்பட்ட அத்தகைய ஒரு தீா்மானம் மட்டுமே கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சூழலில், கத்தாா், எகிப்து முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவாா்த்தைக்குப் பிறகு காசாவில் கடந்த மாதம் 24 முதல் 30ஆம் திகதி வரை போா் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது இஸ்ரேலில் இருந்து பிடித்துச் செல்லப்பட்ட பிணைக் கைதிகள் சிலரை ஹமாஸும், அதற்குப் பதிலாக தங்கள் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த பலஸ்தீன கைதிகள் சிலரை இஸ்ரேலும் விடுவித்தன.

அந்தப் போா் நிறுத்தத்தை மேலும் நீடிக்கும் முயற்சிகள் தோல்வியடைந்ததைத் தொடா்ந்து, காசாவில் இஸ்ரேல் இராணுவம் மீண்டும் கடந்த 1ஆம் திகதி முதல் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், காசா போா் விபரீத கட்டத்தை அடைந்துள்ளதாகவும், இனியும் அங்கு போா் நீடித்தால் மிகப் பெரிய மனிதப் பேரழிவு ஏற்படும் என்றும் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் அறிவித்தாா்.

காசாவில் உடனடியாகப் போா் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று வலியுறுத்திய அவா், ஐ.நா. பாதுகாப்பு சபையில் கவனத்துக்கு இந்த விவகாரத்தைக் கொண்டுவருவதற்காக மிகவும் அரிதாகப் பயன்படுத்தப்படும் ஐ.நா.வின் 99ஆவது சட்டப் பிரிவைக் கையிலெடுத்தாா்.

அதைத் தொடா்ந்து, காசாவில் உடனடி போா் நிறுத்தம் கொண்டு வருவதை வலியுறுத்தும் வரைவுத் தீா்மானத்தை பாதுகாப்பு சபையில் ஐக்கிய அரபு அமீரகம் கடந்த வெள்ளிக்கிழமை (08) தாக்கல் செய்தது.

15 உறுப்பினா்களைக் கொண்ட அந்த சபையில் அந்த வரைவுத் தீா்மானத்துக்கு 13 உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்தனா். எனினும், அந்த வரைவில் ஹமாஸ் அமைப்பினரின் ஒக்டோபர் 09 தாக்குதல் குறித்து குறிப்பிடப்படாததால் வாக்களிப்பைப் புறக்கணிப்பதாக பிரிட்டன் அறிவித்தது.

இருப்பினும், பெரும்பான்மை ஆதரவுடன் அந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கலாம். ஆனால், தனது சிறப்பு ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த வரைவுத் தீா்மானத்தை அமெரிக்கா தடை செய்தது.

இது குறித்து விளக்கமளித்து ஐ.நா.வுக்கான அமெரிக்க துணைத் தூதா் ராபா் வுட் கூறகையில் ஐக்கிய அரபு அமீரகம் தற்போது முன்வைத்துள்ள வரைவுத் தீா்மானத்தில் ஹமாஸ் அமைப்பினா் இஸ்ரேலுக்குள் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்படவில்லை. மேலும், அமெரிக்கா பரிந்துரை செய்த அம்சங்கள் அந்த வரைவுத் தீா்மானத்தில் இடம் பெறவில்லை.

ஏற்கனவே காசாவில் போர் நிறுத்திவைப்பு, கைதிகள் பரிமாற்றம், நிவாரணப் பொருட்கள் கொண்டுசெல்லப்பட்டது ஆகியவற்றுக்கு அந்த அம்சங்கள்தான் வழிவகுத்தன. இந்தத் தீா்மானம் நிறைவேற்றப்படுவதால் எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை. காசாவில் ஒரு குண்டூசி அளவுக்குக் கூட இது மாற்றத்தை ஏற்படுத்தாது.

எனவே, இந்தத் தீா்மானத்தை அமெரிக்கா ரத்து செய்கிறது என்றாா் அவா். அமெரிக்காவின் இந்த முடிவை இஸ்ரேல் வரவேற்றுள்ளது. எனினும், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் இதனைக் கண்டித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   

ibctamil


 



Post a Comment

Previous Post Next Post