1.சிங்கப்பூர் - மலேசியா நினைவுகள்!

1.சிங்கப்பூர் - மலேசியா நினைவுகள்!

பயணக்கட்டுரையாசிரியர் பற்றி...

1954ல் மாத்தளை மாவட்டத்தில் உள்ள உக்குவளையில் பிறந்து - 1962ல் கல்ஹின்னை அல்மனாரில் சேர்ந்து, உயர்தரத்தில் வர்த்தகப் பிரிவில் தேர்ச்சியடைந்த இவர், திட்ட அமுலாக்கல் அமைச்சில் சில காலம் பணி செய்துவிட்டு, வார்த்தக நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முற்பட்டமையால் சிலகாலம் தனது எழுத்துப் பணிக்கு முழுக்குப் போட்டிருந்தார்.

சிறுகதை எழுத்தாளராக தனது எழுத்துத்துத்துறையில் நுழைந்த இவரது முதலாவது சிறுகதை 1974ல் “சிந்தாமணி” வார இதழில் வெளியாகியதன் மூலம், கல்ஹின்னையின் முதலாவது சிறுகதை எழுத்தாளரானார்.

தொடர்ந்து வீரகேசரி, தினகரன், விடிவெள்ளி போன்ற உள்நாட்டிதழ்களிலும், “நயனம்” போன்ற மலேசிய சஞ்சிகைகளிலும் இவரது ஆக்கங்கள் இடம்பெற்றன.

28 வருடங்களாகத் தனது எழுத்துப் பணிக்கு முழுக்குப்போட்டிருந்த இவர், சிங்கள மொழி  பேசுவோர்  தமிழ்  மொழியைக்  கற்றுக்  கொள்ளும்  நோக்கில், சில காலம் “சிந்தமி” என்ற மாதாந்த சஞ்சிகையைத் தனது அச்சகத்திலிருந்து வெளியிட்டதுடன், 2010 முதல் தொடர்ந்து  இரண்டு வருடங்களாக “விஜய்” என்ற வாராந்த சஞ்சிகைக்குக் கல்விக் கட்டுரைகளை எழுதிக் கொண்டிருந்தார். அதன் பின்னர் இவர், மீண்டும் தனது எழுத்துப் பணியை வேட்டையுடன் தொடர்ந்துவருகின்றார்!

-----------

மலேசியா பற்றிய தகவல்களை  அறிந்து கொள்வதற்காக அவ்வப்போது இணையத்தளத்தில்  ஊடுறுவியதன் இறுதிப் பலன்  இந்நாட்டை நேரில்  சென்று பார்த்துவிட வேண்டுமென்ற ஆவலைத் தூண்டிவிட்டது. 

ஒரு மாத காலத்துக்கு முன்னர்  முன்கூட்டியே பிரயாண ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு - கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வந்து  - சகல விமான நிலைய சோதனைகளையும் தாண்டி  விமானத்துக்குள் நுழைந்தேன்.
 
குறிப்பிட்ட நேரத்தில்  புறப்பட்ட ”எயார் ஆசிய” விமானம் - கோலாலம்பூர்  விமான  நிலையத்தில்  மலேசிய நேரப்படி  சரியாக  பி. ப 2.00 மணிக்கு தரைதட்டியதும் கைக்கடியாரத்தைப் பார்த்தபோது -  அது இலங்கை நேரம் பி. ப. 4.30 ஐக் காட்டியது. 

மலேசியா என்கின்றபோது  - அதில் சிங்கப்பூர் தொக்கி நிற்பதை அறிவோம். இரு நாடுகளும் ஒருகாலத்தில்  இணைந்திருந்து பிரிந்துவிட்டமை  ஒரு கசப்பான உண்மையாகும்.


சிங்கப்பூரிலிருந்து தரைமார்க்கமாக சென்று மலேயசியாவைப் பார்வையிடுவதானது அந்நாட்டை முற்று முழுதாகப் பார்த்த திருப்தியை அளிக்கும் என்பதால் - மலேசியப் பயணத்தை சிங்கப்பூரிலிருந்து துவங்குவதே உசிதமானது.

விமானத்திலிருந்து இறங்கி சிங்கப்பூர் இணைப்பு விமானம் வரும் வரைக்கும் இரண்டு மணித்தியாலங்கள்  கோலாலம்பூர் விமான நிலையத்தைச் சுற்றிப் பார்க்கின்ற சந்தர்ப்பம் கிடைத்தது.
 
இதற்காக “பயணப்பொதி”யை (Package) கச்சிதமாக ஒருங்கமைத்துத் தந்த கொழும்பிலுள்ள பிரயாண முகவர் நிலையத்திற்குத்தான் நன்றி செலுத்த வேண்டும்.

வழமையைவிட அதிக விமானங்கள் தரையிறங்கியிருந்தமையால் விமான நிலையத்தில் சனநெரிசல் சற்று அதிகமாகவே இருந்தது. 

இது  இந்த விமான நிலையத்தின் இயல்பான இயக்கமாக இருந்தபோதிலும் இந்நாட்களில் சகல நாடுகளிலிருந்தும்  விடுமுறையைக் கழிப்பதற்காக மக்கள் பிரயாணங்களில் ஈடுபடுவது இந்த அபரித சனநெரிசலுக்கு இந்நொரு காரணமாகவும்  இருந்திருக்கலாம்.

தவிர ஆசியாவிலேயே மிகக் குறைந்த விலையிலான விமானப்போக்குவரத்தை வழங்கும் நாடாக மலேசியா இருப்பதுவும்  சனநெரிசலுக்கு மற்றொரு காரணமாகும்.  

விமான நிலையத்தில் சுயமாக இயங்கக் கூடிய கணிணிகள் அமைந்திருந்த இடத்தைத் தேடிக்  கண்டுபிடித்து  அங்கிருந்த  கணிணித் தொடுரைகளிலொன்றில் விரலைப் பதித்தபோது கணிணிதானாக செயல்படத் தொடங்கியது. 

கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலலித்ததோடு எமது விமான ஆசன ஒதுக்கீட்டுக் குறியீடு உள்வாங்கப்பட்டவுடன்,  கணிணித் திரையோடிணைந்திருந்த ஓட்டை வழியே பற்றுச்சீட்டொன்று வெளியே வந்தது.

அங்கிருந்த கவுண்டர்களில் ஒன்றில் கடவுச்சீட்டுடன் பற்றுச்சீட்டைக் கையளித்ததும் - கடவுச்சீட்டு முத்திரையிடப்பட்டு கைக்கு வந்தது.

விமானம் வரும் வரைக்கும் காத்திருக்கும் இடத்தை இனங்கண்டு விமானம் வருவதற்கு சற்றுநேரமாகும்  என்பதால் அந்த இடத்தை குறிப்பறிந்து ஞாபகத்தில்  வைத்துக்கொண்டு  விமானநிலையத்தில் ஆங்காங்கே இருந்த கடைகளுக்குச் சென்று பொருட்களையும் விலைகளையும் நமது நாட்டோடு ஒப்பிட்டுப் பார்த்தபடி நேரத்தை நகர்த்தினேன்.

எந்த நாட்டு விமான நிலையத்திலும் நாட்டிற்குள் விற்கப்படுவதை விடவும் பொருட்களின் விலை அதிகம் என்பதை இலங்கை விமான நிலையத்திலிருந்தபோதே அறிந்துகொண்டதால் விமான நிலையத்தில் பொருட்கள் வாங்குவதில் புத்திசாலித்தனமாகப் பின்னின்றேன்.

குறிப்பிட்ட நேரம் நெருங்கவே விமானம் வரும்வரை காத்திருக்கும் இடத்திற்குச் சென்றதும் கடவுச்சீட்டு பரீட்சிக்கப்பட்டதும் சற்றுத்தூரம் நடந்து சென்று விமானத்தில் ஏறி எனக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டேன்.

பயணிகள் ஆசனங்கள் துரித கெதியில் நிறைவானதும் ஆசனப்பட்டிகளைக் கட்டிக்கொள்ளுமாறு பணிப்புரை கிடைத்தது. 

இடுப்பைச் சுற்றி ஆசனப்பட்டியைக் கட்டிக் கொண்டதும் 180 பயணிகளை ஏற்றிக் கொண்டு ”எயார் ஏசியா” விமானம் தரையில் மெதுமெதுவாக ஓடி நேர்கோட்டில் நகர்ந்து - திடீர் குலுக்கலொன்றுடன் உயரப்பறந்து கொஞ்சங்கொஞ்சமாக மேகத்துக்குள் நுழையத் தொடங்கியது.

விமானம் பறந்து கொண்டிருந்தபோது  கண்களை மூடிக்கொண்டவனாக சிந்தனையில் அமிழ்ந்து போனேன்.

(தொடரும்)
 

ஐ. ஏ. ஸத்தார்   


Post a Comment

Previous Post Next Post