Ticker

6/recent/ticker-posts

19-ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை

(நபி வழியில் தொழுகை)



15.ஸுஜூதுக்கு செல்லுதல் :

ஸுஜூத் செய்வதற்காக குனியும் போது நிலத்தில் முதலாவதாக இரு கைகளை வைப்பதா ,முழங்கால்களை வைப்பதா என்பதில் அன்றிலிருந்து இன்று வரை அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.

1.நிலத்தில் முதலாவதாக இரு கைகளையே வைக்க வேண்டும் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

இந்நிலைப்பாட்டை இமாம் மாலிக் (ரஹிமஹுமல்லாஹ்) , இமாம் அவ்ஸாஈ (ரஹிமஹுமல்லாஹ்) போன்ற முற்கால அறிஞர்களும் ஷெய்க் அல்பானி (ரஹிமஹுமல்லாஹ்) போன்ற இந்நூற்றாண்டு அறிஞர்களும் கொண்டிருக்கின்றனர்.

இதற்கு பின்வரும் ஹதீஸை ஆதாரமாக காட்டுகின்றனர் :

“உங்களில் ஒருவர் ஸுஜூதுக்கு செல்லும் போது ஒட்டகம் நிலத்தில் சாய்வது போன்று செல்ல வேண்டாம். (மாறாக) தனது இரு முழங்கால்களை வைப்பதற்கு முன் இரு கைகளையும் (நிலத்தில்) வைக்கவும்.(அஹ்மத் , அபூதாவூத் , நஸாஈ).

2.இரண்டாவது தரப்பினர் : முதலாவதாக இரு முழங்கால்களையே வைக்க வேண்டும் என கூறுகின்றனர்.

இக்கருத்தை முற்கால அறிஞர்களான இமாம் அபூஹனீபா (ரஹிமஹுமல்லாஹ்) , இமாம் ஷாபிஈ (ரஹிமஹுமல்லாஹ்) , இமாம் அஹ்மத் (ரஹிமஹுமல்லாஹ்) , இமாம் ஸுப்யான் அத்தவ்ரீ (ரஹிமஹுமல்லாஹ்) , ஷெய்குல் இஸ்லாம் இப்னுதைமியா (ரஹிமஹுமல்லாஹ்) , இமாம் இப்னுல் கையிம் (ரஹிமஹுமல்லாஹ்) போன்ற பலரும் இந்த நூற்றாண்டு அறிஞர்களான ஷெய்க் பின் பாஸ் (ரஹிமஹுமல்லாஹ்) , ஷெய்க் உதைமீன் (ரஹிமஹுமல்லாஹ்) போன்றோரும் கொண்டிருக்கின்றனர்.

இமாம் திர்மிதி (ரஹிமஹுமல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : ‘ஸுஜூதுக்கு செல்லும் போது முதலில் முழங்கால்களை வைக்க வேண்டும் என்ற கருத்தையே மிக அதிகமான அறிஞர்கள்

கொண்டிருக்கின்றனர்” (பார்க்க : ‘ஸுனனுத் திர்மிதி” , 2ஃ57).

இத்தரப்பினர் பின்வரும் ஹதீஸை ஆதாரமாக காட்டுகின்றனர் :

‘நபியவர்கள் ஸுஜூதுக்கு செல்லும் போது தமது கைகளை வைப்பதற்கு முன் முழங்கால்களை (நிலத்தில்) வைப்பதை நான் கண்டேன்” என வாஇல் இப்னு ஹுஜ்ர் (றழி) கூறுகிறார்கள் (திர்மிதி ,அபூதாவூத் , நஸாஈ).

இமாம் திர்மிதி அவர்கள் உட்பட மற்றும் பலர் இதை ஆதாரபூர்வமான ஹதீஸ் என கூறுகின்றனர்.இது தொடர்பாக நீண்டதொரு ஆய்வை மேற்கொண்ட ஹி. 8ம் நூற்றாண்டின் தலைசிறந்த பேரறிஞர்களில் ஒருவரான இமாம் இப்னுல் கையிம் (ரஹிமஹுமல்லாஹ்) அவர்கள் முதல் தரப்பினர் முன் வைக்கின்ற ஹதீஸுக்கான விளக்கத்தை வழங்கும் போது ,

‘நபிகளார் ஒட்டகம் செல்வது போன்று ஸுஜூதுக்கு செல்ல வேண்டாம் என தடுத்துள்ளார்கள்.ஒட்டகமானது நிலத்தில் சாயும் போது முதலாவதாக தனது முன் கைகளையே நிலத்தில் வைக்கிறது. எனவே ஒட்டகத்துக்கு மாறாக செய்ய வேண்டுமாயின் ஒருவர் தனது முழங்கால்களையே முதலாவது நிலத்தில் வைக்க வேண்டும். ஆயினும் (முதல் தரப்பினர் முன்வைக்கும்) ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர் ‘இரு கைகளை வைப்பதற்கு முன் முழங்கால்களை வைக்கவும்” என்று நபியவர்கள் கூறியதை மாற்றி ‘இரு முழங்கால்களை வைப்பதற்கு முன் கைகளை வைக்கவும்” என்று கூறிவிட்டார்” என்று கூறுகிறார். (நூல் : ‘தஹ்தீபு

ஸுனனி அபீதாவூத் வஈழாஹு முஷ்கிலாதிஹீ ” ).
இக்கருத்தை மறுக்கும் முதல் தரப்பினர் , தாம் முன்வைக்கும் ஹதீஸின் அறிவிப்பாளர் நபியின் வார்த்தையை மாற்றிக் கூறியுள்ளார் என்பதற்கு ஆதாரமில்லை என்று கூறுகின்றனர்.

இவ்விரு கருத்துகளிலும் இரண்டாம் கருத்துக்கான ஆதாரங்கள் சற்று வலுவானவையாக காணப்படுகின்றன. ஆயினும் முதல் தரப்பினரின் ஆதாரங்களும் நிராகரிக்கப்படும் நிலையில் இல்லை.

இரு தரப்பினரும் மிகப் பெரும் அறிஞர்கள் என்பதோடு , இரு வகையான கருத்துகளும் ஹதீஸ்களை ஆய்வு செய்து பெறப்பட்ட முடிவுகள் என்பதும் கவனத்திற்கொள்ளப்பட வேண்டும். பிக்ஹ் சட்ட திட்டங்கள் சார்ந்த சில கிளை விடயங்களில் இத்தகைய கருத்து வேற்றுமைகள் இயல்பானவை.

நபியவர்கள் கூறினார்கள் : ‘ஓர் அறிஞர் (அல்குர்ஆனையும் ஹதீஸையும்) ஆய்வு செய்து சரியான முடிவை பெற்றால் அவருக்கு இரு கூலிகள் உண்டு. மற்றொருவர் ஆய்வு செய்து பிழையான முடிவை பெற்றால் (ஆய்வுசெய்தமைக்காக) அவருக்கு ஒரு கூலி உண்டு|| (புஹாரி , முஸ்லிம்).

எந்த ஆதாரமுமின்றி , அல்லது தெட்ட தெளிவான பலவீனமான ஆதாரங்களை வைத்து ஏற்படும் கருத்து வேற்றமைகளுக்கு மார்க்கத்தில் எந்தப் பெறுமானமும் இல்லை. அவை நிராகரிக்கப்பட வேண்டியவையுமாகும்.

இந்த தலைப்பு தொடர்பாக ஆய்வு செய்த தற்கால ஹதீஸ் மற்றும் பிக்ஹ் துறை ஆய்வாளரான ஷெய்க் ஸாலிஹ் அல்முனஜ்ஜித் அவர்கள் ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமியா (ரஹிமஹுமல்லாஹ்) அவர்களின் கூற்றோடு தனது ஆக்கத்தை நிறைவுசெய்கிறார் :

“ஸுஜூத் செய்யும் போது முதலில் முழங்கால்களை வைத்தாலும் அல்லது கைகளை வைத்தாலும் தொழுகை நிறைவேறும் என்பது அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாகும். இரண்டில் எது சிறந்தது என்பதிலேயே அறிஞர்களிடையே கருத்து வேற்றுமைகள் உள்ளன. ஒரு தொழுகையாளி இரண்டில் எதை கடைப்பிடித்தாலும் அவரது தொழுகை நிறைவேறும்.(பார்க்க : “மஜ்மூஉல் பதாவா| , 22ஃ449). 

(தொடரும்)

ARM. ரிஸ்வான் (ஷர்க்கி) 


 



Post a Comment

0 Comments