(நபி வழியில் தொழுகை)

21. முதலாவது அத்தஹிய்யாத் (தஷஹ்ஹுத்) :
இரண்டாவது றக்அத்தின் முடிவில் முதலாவது அத்தஹிய்யாத்துக்காக அமர்ந்து அத்தஹிய்யாத் ஓத வேண்டும்.
முதல் அத்தஹிய்யாத்துக்காக அமரும் போது பின்வருமாறு நபிகளார் அமர்வார்கள் :
‘இடது பாதத்தை விரித்து அதன் மீது உட்காருவார்கள். வலது பாதத்தை நேராக நட்டிவைப்பார்கள்.வலது கால்விரல்களை (மடக்கி) கிப்லாவை முன்னோக்கிவைப்பார்கள்” (புஹாரி, நஸாஈ).
(இந்த இருப்புக்கு அரபியில் ‘இப்திராஷ்’ எனப்படும்).
முதல் அத்தஹிய்யாத்தில் உட்கார மறந்து விட்டால்…
‘நபியவர்கள் முதல் அத்தஹிய்யாத்தில் அமர மறந்து விட்டால் (தொழுகையின் இறுதியில்) மறதிக்கான ஸுஜூத் செய்வார்கள்”“ (புஹாரி, முஸ்லிம்).
22. இரண்டாவது அத்தஹிய்யாத் :
இரண்டாவது அத்தஹிய்யாத்துக்காக அமரும் போது மூன்று முறைகளில் நபியவர்கள் அமர்ந்திருக்கிறார்கள் :
1.இடது காலை வலப்புறமாக வெளியாக்கி விரித்து வைப்பதோடு, வலது காலை நட்டி வைத்தல். (புஹாரி)
2.இரு பாதங்களையும் வலப்புறமாக வெளியாக்கி இரண்டையும் விரித்து வைத்தல் (அபூதாவூத்)
3.வலது பாதத்தை விரித்து வைத்து இடது பாதத்தை தொடைக்கும் கெண்டைக்காலுக்குமிடையில் வைத்தல் (முஸ்லிம்)
(பார்க்க : ஆதில் பின் யூஸுப் :”தமாமுல் மின்னா பீ பிக்ஹில் கிதாபி வஸஹீஹிஸ் ஸுன்னா”,1ஃ270).
குறிப்பு :
ஒரு அத்தஹிய்யாத்தை மாத்திரம் கொண்ட இரண்டு றக்அத்துகள் கொண்ட தொழுகையில் (உ-ம் :ஸுப்ஹ், ஜும்ஆ தொழுகை, பெருநாள் தொழுகை, முன் பின் ஸுன்னத் தொழுகை போன்றவை)
அத்தஹிய்யாத்தில் அமரும் போது முதல் அத்தஹிய்யாத்தில் அமர்வது போன்று அமர்வதா,இரண்டாவது அத்தஹிய்யாத்தில் அமர்வது போன்று அமர்வதா என்பதில் அறிஞர்களிடையயே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.
முதலாவது கருத்து :
முதலாவது அத்தஹிய்யாத்தில் அமர்வது போன்று அமர வேண்டும்.
இரண்டாவது கருத்து :
இரண்டாவது அத்தஹிய்யாத்தில் அமர்வது போன்று அமர வேண்டும்.
இவ்விரு கருத்துகளுள் முதலாவது கருத்தே ஆதார வலுக் கூடிய கருத்தாக காணப்படுகிறது. என்பதாக இந் நூற்றாண்டின் பிரபல அறிஞர்களான ஷெய்க் அல்பானி, ஷெய்க் இப்னு பாஸ்,ஷெய்க் இப்னு உதைமீன், ஷெய்க் பின் சௌத் உட்பட பலர் கூறுகிறார்கள். இதற்கு பின்வரும் ஆதாரங்களை முன்வைக்கின்றனர் :
1. அபூ ஹுமைத் அஸ்ஸாது (றழி அல்லாஹு அன்ஹு ) அவர்கள் கூறுகிறார்கள் : நபியவர்கள் தொழுகையில் இரண்டு றக்அத்துகளின் முடிவில் முதல் அத்தஹிய்யாத்தில் அமர்வது போல் அமர்வார்கள் (புஹாரி).
2. ஆயிஷா (றழி அல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறுகிறார்கள் : நபியவர்கள் ஒவ்வொரு இரண்டு றக்அத்துகள் முடிவிலும் அத்தஹிய்யாத் ஓதுவார்கள். அப்போது முதல் அத்தஹிய்யாத்தில் அமர்வது போல் அமர்வார்கள் (முஸ்லிம்).
மேற்படி இரு ஹதீஸ்களிலும் கூறப்பட்டதன் படி, இரண்டு றக்அத்தோ, மூன்று றக்அத்தோ, நான்கு றக்அத்தோ எத்தனை றக்அத்துகள் கொண்ட தொழுகையாயினும் இரண்டு றக்அத்துகளின் முடிவில் முதல் அத்தஹிய்யாத்தில் அமர்வது போல் அமர்வதே அடிப்படையானது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
எனவேதான் இரண்டு றக்அத்துகள் உள்ள, ஒரு அத்தஹிய்யாத்தை மாத்திரம் கொண்ட தொழுகையில் அத்தஹிய்யாத்துக்காக அமரும் போது முதல் அத்தஹிய்யாத்தில் அமர்வது போல் அமர்வதே வலுவான ஆதாரம் கொண்டது என மேற்கூறப்பட்ட சமகால அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
இரண்டாவது கருத்தானது ஆதார வலுக் குறைந்ததாயினும், இவ்விடயம் மார்க்கத்தில் அனுமதிக்கத்தக்க கருத்து வேற்றுமை சார்ந்த ஒரு விடயம் என்பதால் சர்ச்சைக்குரிய விடயமாக பார்க்கத் தேவையில்லை. அல்லாஹு அஃலம்.
அவற்றுள் நபியவர்களின் ஸுன்னாவுக்கு மிகவும் நெருக்கமான கருத்து யாதெனில், ஒரு அத்தஹிய்யாத் கொண்ட, இரண்டு றக்அத்துகள் உள்ள தொழுகைகளில் முதல் அத்தஹிய்யாத்துக்கு அமர்வது போன்று அமர வேண்டும் என்பதாகும்.ஏனெனில் இரண்டு றக்அத்துகளின் முடிவில் (அது எத்தனை றக்அத்துகள் கொண்ட தொழுகையாயினும் ) நபியவர்களின் பொதுவான நடைமுறை முதல் அத்தஹிய்யாத்தில் அவர்வது போன்றே அமர்வதாகும் என்பதை பல ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன. (பார்க்க : ‘அஸ்லு ஸிபதி ஸலாதிந் நபி”, 3ஃ984).
குறிப்பு :
இரு அத்தஹிய்யாத்துகளுக்காக அமரும் போதும் நடு இருப்பின் போதும் இரு வகையான இருப்புகளை நபியவர்கள் தடுத்துள்ளார்கள் :1. நாய் உட்காருவது போன்று உட்காருதல் :
“நாய் உட்காருவது போன்று உட்காருவதை எனது நேசரான நபிகளார் தடுத்தார்கள்” என அபூஹுரைரா (றழி அல்லாஹு அன்ஹு அல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள் (அஹ்மத், அத்தயாலிஸி).
” ஒருவர் தனது பின்பகுதியை நிலத்தில் வைத்து இரு கெண்டைக்கால்களையும் நட்டி, இரு கைகளையும் நிலத்தில் ஊன்றியவாறு அமர்மதே நாய் இருப்பு” என முற்கால பிரபல ஹதீஸ் துறை அறிஞரான இமாம் இப்னுஸ் ஸலாஹ் (ரஹ்) தெளிவுபடுத்துகிறார்கள் (பார்க்க :”அல்மஜ்மூஃ” , 3ஃ439).
2. யூதர்களின் இருப்பு :
இடது கையை நிலத்தில் ஊன்றியவாறு அமர்வதை யூதர்களின் இருப்பு எனக் கூறி அல்லாஹ்வின் தூதர் அவ்வாறு இருப்பதை தடுத்தார்கள்.
ஒரு மனிதர் தொழுகையின் போது தரையில் இடது கையை ஊன்றிய வண்ணம் அமர்ந்திருந்ததை நபியவர்கள் கண்டபோது,”இவ்வாறு இருக்க வேண்டாம், இது யூதர்களின் இருப்பு” என குறிப்பிட்டார்கள் (அஹ்மத், ஹாகிம், பைஹகி).
(தொடரும்)
ARM. ரிஸ்வான் (ஷர்க்கி)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments