Ticker

6/recent/ticker-posts

25-ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை

(நபி வழியில் தொழுகை)

23. முதலாவது மற்றும் இரண்டாவது அத்தஹிய்யாத்தின் போதான நடைமுறைகள் :

1- இரு கைகளையும் வைக்கும் முறை :

இரு அத்தஹிய்யாத்துகளுக்கு உட்காரும் போது தமது கைகளை இரு முறைகளில் வைத்துக் கொள்வார்கள்:

1.”நபியவர்கள் அத்தஹிய்யாத்துக்காக அமர்ந்தால் தமது வலது உள்ளங்கையை வலது தொடையிலும் (மற்றுமொரு ஹதீஸின் படி வலது முழங்காலில்) இடது உள்ளங்கையை இடது தொடையிலும் (மற்றொரு ஹதீஸின் படி இடது முழங்காலில்) வைப்பார்கள்” (முஸ்லிம், அபூஅவானா).

2.”நபியவர்கள் தமது முழங்கையின் ஓரத்தை தமது தொடைக்கு மேலே வைத்துக் கொள்வார்கள்”(அதாவது தமது முழங்கையை விலாவை விட்டும் விலக்கி வைக்காமல் விலாவுக்கு நெருக்கமாக வைப்பார்கள்) – (அபூதாவூத், நஸாஈ).

இரு ஸுஜூதுகளுக்கிடையிலான நடு இருப்பின் போதும் இவ்வாறே தமது இரு கைகளையும் வைத்துக் கொள்வார்கள் என்பதும் கவனத்திற்கொள்ளத்தக்கதாகும்.

2- வலது கைவிரல்களை வைக்கும் முறை :

இரு அத்தஹிய்யாத்துகளின் போதும் நபிகளார் இரு முறைகளில் வலது கைவிரல்களை வைத்திருக்கிறார்கள் :

1.விரல்கள் அனைத்தையும் பொத்தி சுட்டு விரலை நீட்டிவைப்பார்கள் (முஸ்லிம்)

2.பெருவிரலை நடுவிரல் நுனியில் வைத்து வளையம் போன்றாக்கி, சுட்டு விரலை நீட்டிவைப்பார்கள்(அபூதாவூத், நஸாஈ).

3- வலது கை சுட்டு விரலை வைத்திருக்கும் முறை :

இரு அத்தஹிய்யாத் இருப்புகளிலும் வலது கை சுட்டு விரலை வைத்திருக்கும் முறை தொடர்பில் அறிஞர்களிடையே முக்கியமாக மூன்று நிலைப்பாடுகள் காணப்படுகின்றன :

முதல் நிலைப்பாடு :

சுட்டு விரலை அசைத்துக்கொண்டிருக்க வேண்டும். இக்கருத்தை மாலிக் மத்ஹப், ஹம்பலி மத்ஹப் அறிஞர்கள், மற்றும் சில ஷாபிஈ மத்ஹப் அறிஞர்கள், இமாம் இப்னுல் கையிம், ஷெய்க் அல்பானி,ஷெய்க் பின் பாஸ், ஷெய்க் இப்னு உஸைமீன் உள்ளிட்ட பலர் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் இதற்கான ஆதாரமாக பின்வரும் ஹதீஸை குறிப்பிடுகின்றனர் :

‘நபியவர்கள் அத்தஹிய்யாத்தின் போது சுட்டுவிரலை உயர்த்தி அசைத்துக் கொண்டிருப்பதை நான் கண்டேன்” என வாஇல் இப்னு ஹுஜ்ர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (அபூதாவூத், நஸாஈ,அஹ்மத்).

இரண்டாவது நிலைப்பாடு :

சுட்டு விரலை அசைக்காமல் நீட்டி வைத்திருக்க வேண்டும். இக்கருத்தை ஹனபி மத்ஹப் அறிஞர்கள், பெரும்பாலான ஷாபிஈ மத்ஹப் அறிஞர்கள், சில மாலிக் மத்ஹப் அறிஞர்கள் மற்றும் இமாம் இப்னு ஹஸ்ம் ஆகியோர் கொண்டிருக்கின்றனர். இதற்கான ஆதாரமாக பின்வரும் ஹதீஸை குறிப்பிடுகின்றனர் :

‘நபியவர்கள் அத்தஹிய்யாத்தில் அமர்ந்தால் தனது இடது கையை இடது தொடையில் வைத்து,வலது கையை வலது தொடையில் வைத்து சுட்டு விரலினால் சுட்டிக்காட்டுவார்கள்” (முஸ்லிம்).

இந்த ஹதீஸில் ‘அசைத்தல்” என்பது வரவில்லை என்பதால் அசைக்காமல் விரலை நீட்டி சுட்டிக்காட்டுவது போல் வைத்திருக்க வேண்டும் என்பது இரண்டாம் தரப்பினரின் கருத்தாகும்.

முதல் தரப்பினர் முன்வைக்கின்ற ‘நபியவர்கள் அசைத்துக்கொண்டிருந்தார்கள்” என்ற ஹதீஸுக்கு இரண்டாம் தரப்பினர் விளக்கமளிக்கும் போது, அந்த ஹதீஸை அறிவிப்பவர்கள் பலர் இருந்த போதும் ஸாஇதா என்ற அறிவிப்பாளர் மாத்திரமே நபியவர்கள் விரலை அசைத்ததாக குறிப்பிடுகிறார், மற்ற யாரும் அவ்வாறு குறிப்பிடவில்லை என்பதால் ஹதீஸ்கலை விதிகளின் அடிப்படையில் அந்த ஹதீஸ் பலவீனமானது, ஆதாரமாக கொள்ள முடியாது என்று குறிப்பிடுகின்றனர்.

இதற்கு பதிலளிக்கும் முதல் தரப்பினர், ஸாஇதா என்பவர் மாத்திரம் நபியவர்கள் விரல் அசைத்தார்கள் என்று அறிவித்தாலும் அவர் நம்பகமானவர் என ஹாபிழ் இப்னு ஹஜர் (நூல் :’அத்தக்ரீப்”) போன்ற ஹதீஸ் கலை மேதைகள் குறிப்பிடுவதால் அது ஆதாரபூர்வமான ஹதீஸே என நிறுவுகின்றனர்.

மூன்றாவது நிலைப்பாடு :

அத்தஹிய்யாத்தில் விரல் அசைப்பதும் அசைக்காமல் இருப்பதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதே,

ஏனெனில் இரண்டுக்கும் ஆதாரங்கள் உள்ளன என்று குறிப்பிடுகின்றனர். இந்நிலைப்பாட்டை இமாம் குர்துபி (நூல் :”அல்ஜாமிஉ லிஅஹ்காமில் குர்ஆன்” , 1ஃ361), இமாம் ஸன்ஆனி (நூல் :”ஸுபுலுஸ் ஸலாம்” , 1ஃ368) ஆகியோர் கொண்டிருக்கின்றனர்.

(பார்க்க : ஷெய்க் அப்துல்லாஹ் ஸாலிஹ் அல்பவ்ஸான்,”மின்ஹதுல் அல்லாம்”, 4ஃ151

இம்மூன்று கருத்துகளுள் மூன்றாவது கருத்தே சரியானதாக தெரிகிறது. ஏனெனில் விரலை அசைத்தல் அல்லது அசைக்காமல் நீட்டி வைத்திருத்தல் ஆகிய இரண்டு செயற்பாடுகளுக்கும் மேற்கூறப்பட்டவாறு ஸுன்னாவில் ஆதாரங்கள் உள்ளதால் இரண்டையும் ஏற்றுக் கொள்வதுதான் ஸுன்னா பற்றிய சரியான புரிதலாக அமையும். பலமான ஆதாரங்களின் அடிப்படையில் ஏற்படும் இத்தகைய கருத்து வேற்றுமைகளின் போது ஒரு தரப்பினரை மறு தரப்பினர் விமர்சிக்காமல் விட்டுகொடுப்புடன் நடந்துகொள்வதே நமது முன்னோர்களான ஸஹாபாக்கள், நன்மக்களின் நடைமுறையாக இருந்து வந்திருக்கிறது.

அதே நேரம், எந்த ஆதாரமும் இல்லாமல் அல்லது பலவீனமான ஆதாரங்களின் அடிப்படையில் ஏற்படும் கருத்து வேற்றுமைகள் மார்க்கத்தில் நிராகரிக்கப்பட்டவையாகும் என்பதும் கவனத்திற் கொள்ளத் தக்கதாகும்.அல்லாஹு அஃலம்.

4- சுட்டு விரலை நீட்டுவது அல்லது அசைப்பது எப்போது?

அத்தஹிய்யாத் ஓதும் போது ‘அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற இடத்தில்தான் வலது கை சுட்டுவிரலை நீட்ட வேண்டும் என சில அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் இதற்கு ஆதாரம் எதுவும் இல்லை.

நபியவர்கள் அத்தஹிய்யாத்துக்காக அமர்ந்தவுடன் இடது கையை இடது தொடையிலும் (அல்லது இடது முழங்காலில்) வலது கையை வலது தொடையிலும் (அல்லது வலது முழங்காலில்) வைத்து வலது கை சுட்டு விரலை நீட்டி வைப்பார்கள் அல்லது அசைப்பார்கள் என்றே அனைத்து ஹதீஸ்களும் குறிப்பிடுகின்றன (முஸ்லிம், அபூதாவூத், நஸாஈ).

எனவே, அத்தஹிய்யாத்துக்காக அமர்ந்ததிலிருந்து ஸலாம் கொடுக்கும் வரை வலது சுட்டுவிரலை நீட்டி வைத்திருப்பது அல்லது அசைத்து கொண்டிருப்பதே நபியவர்களின் நடைமுறையாகும்.

அத்தஹிய்யாத் இருப்பில் பார்வையை எங்கே செலுத்துவது?

தொழுகையின் ஏனைய நிலைகளில் ஸுஜூத் செய்யும் இடத்தை நோக்கி பார்வையை தாழ்த்த வேண்டும் என்பது போல் அத்தஹிய்யாத் இருப்பில் வலது கை சுட்டு விரலை நோக்கி பார்வையை செலுத்த வேண்டும்.

‘நபியவர்கள் அத்தஹிய்யாத்தின் போது நீட்டப்பட்டிருக்கும் சுட்டு விரலை நோக்கி தமது பார்வையை செலுத்துவார்கள்” (நஸாஈ, இப்னு ஹுஸைமா ).

தொடரும்)

ARM. ரிஸ்வான் (ஷர்க்கி) 


 



Post a Comment

0 Comments