4.சிங்கப்பூர் - மலேசியா நினைவுகள்!

4.சிங்கப்பூர் - மலேசியா நினைவுகள்!


எந்தவொரு நாட்டினதும் அபிவிருத்திக்குத் துறைமுகங்களே முக்கிய காரணமாக அமைகின்றன. 

அந்த வகையில் நமது இலங்கைத் தீவும்  சீன தேசத்தின்  அனுசரனையில் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதானது  இலங்கை சிங்கப்பூராக மாறும் என்ற கனவின் முதற்படி என்று கூடக்கருதமுடிகின்றது.

1819 முதல் பிரித்தானியா சிங்கப்பூரில் இராணுவக் கடற்படைத் தலங்களை அமைத்துக் கொள்ளத் தலைப்பட்டதுடன் -  தனது கிழக்கத்திய சாம்ராஜ்யத்தின் பாதுகாப்பு அரணாகவும் இத்தீவை ஆக்கிக் கொண்டது.

இவ்வாறான இராணுவத் தலங்கள் இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானியப் படைகளால் முற்றுகையிடப்பட்டன.

இறுதியில் 1942 பெப்ரவரி 15ம் திகதி ஜப்பானியத் தளபதி "யமாசிதா தொமொயூகி "சிங்கப்பூரைக் கைப்பற்றியபோதிலும் - சீறுகொண்ட கூட்டுப்படைகளின் கடுந்தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல்  உலகப்போரில் ஜப்பான் தோல்வியுற்று, மீண்டும் சிங்கப்பூர்  பிரித்தானியர் வசமாகியது. 

அதன் பின்னர் 1946ல் சிங்கப்பூர்  தனித்துவமிக்க முடிக்குரிய காலனியாகியது. சிங்கப்பூர்  வரலாற்றில் 1959ல் நடைபெற்ற முதலாவது தேர்தலில் Peoples Action Party (PAP) பெரும்பான்மை வெற்றியீட்டவே   லீ குவான் யூ பிரதமரானார்.

அரசுத்தலைவராயிருந்த யூஸுப் பின் இஷாக் ஜனாதிபதியாக்கப்பட்டார்.

1965ல் பதவியேற்ற யூஸுப் பின் இஷாக்   மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதல் ஜனாதிபதியாவார்.   
   
பூரண சுதந்திரம் பெற்ற சிங்கப்பூர் - 1962ல் நடைபெற்ற மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பின் பின்னர் - 1963ல் மலேசியாவின் சமஷ்டி ஆட்சியுடன் இணைந்தது.  உட்பூசல்கள் காரணமாக 1965 ஒகஸ்ட் 9ம் திகதி மலேசியாவிலிருந்தும் சிங்கப்பூர் வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 

தற்போதைய சிங்கப்பூர் ஒற்றை சட்டசபையைக் கொண்ட நாடாளுமன்றக் குடியரசாகத் திகழ்கின்றது. பிரித்தானிய சட்டமூலங்களைப் பின்பற்றும் நாடாகக்கருதப்படும் சிங்கப்பூரின் எதிர்க்கட்சியாக சிங்கப்பூர் தொழிலாளர் கட்சி உள்ளது. 

1959 முதல் 1990 வரையில் பிரதமராகவிருந்த லீ குவான் யூ (16.09.1923-23.03.2015) தனது ஆட்சியின்போதே வேலையில்லாப் பிரச்சினை வதிவிடப்பிரச்சினை  -  இயற்கை அனர்த்தங்கள் ஆகியவற்றுக்கு முகம்கொடுத்து அவற்றிலிருந்துசிங்கப்பூரை மீளச்செய்து வளம் மிக்க நாடாக்கினார்.
1990ல் லீ குவான் யூ இராஜினாமாச் செய்யவே  லீ அடுதாக் கோ சோக் துங் பதவியேற்றார். அதன் பின்னர்  2004ல் பதவியேற்ற லீ குவான் யூவின் இளைய மகனான லீ ஹ்சின் டோங் தற்போதும் பதவி வகித்து வருகின்றார். 
 
1999ல் பதவிக்கு வந்த எஸ். ஆர்.  நாதன்  இரண்டாவது முறையும்  ஜனாதிபதியாகி, 2015 வரை ஜனாதிபதியாக  இருந்து, 2016ல்  காலமானார்.

தற்போதைய சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யாகூப் ஆவர்.

ஜனாதிபதி டோனி டான் கெங்யாமின் பதவிக் காலம் நிறைவடைந்ததை அடுத்து, அடுத்த ஜனாதிபதியாக  ஹலீமா யாகூப் தெரிவானார். நான்கு முறை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஹலீமா யாகூப்.
தொடர்ச்சியாக 5 முறை எந்த மொழி அல்லது இனப் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஜனாதிபதிப் பதவி வகிக்கவில்லையோ, அந்த மொழி அல்லது இனப்பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் ஜனாதிபதி பதவிக்கு முன்னிறுத்தப்பட வேண்டும் என்று அந்நாட்டுச் சட்டம் தெரிவிக்கிறது.

சுழற்சி முறையில் அனைத்துப் பிரிவினருக்கும் உயர் பதவி கிடைக்கும் என்பது அந்தச் சட்டத்தின் நோக்கம். அந்த வகையில், சிங்கப்பூரின் அடுத்த அதிபர் மலாயா இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

சிங்கப்பூர்  பல்லின மக்கள் கொண்ட நாடாகும். சீன - மலேசியா -  இந்தியா  - இந்தோனேசியா –ஐரோப்பிய நாடுகளின் காலாசாரங்கள் நாட்டில் எல்லாப் பகுதிகளிலுமே காணப்படுகின்றன.

இங்கு வாழும் மக்களில்  சீனர் 76.8% மலேயர்  13.9% இந்தியர்  7.9% காணப்படுகின்றனர். இதில் பௌத்தர் 42.5% முஸ்லிம்கள் 14.9% கத்தோலிக்கர்  5%  கிறிஸ்தவர் 10% தாவோயிஸம் 8.5% இந்துக்கள் 4% மாகும். மதங்களைப் பின்பற்றாதோர் 14.8% என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூரின் சனத்தொகை 2010ம் வருடக் கணக்கெடுப்பின்படி ஐந்து  மில்லியன்களைத் தாண்டியுள்ளது.

சிங்கப்பூரின் தேசிய மலராக ஓர்கிட்டும், தேசிய மிருகமாக சிங்கமும், தேசியப் பறவையாக கிரிம்ஸன் ஸன்பர்ட்டும் (Crimson Sunbird) கொள்ளப்படுகின்றன.

சிங்கப்பூரில் செப்பனிடப்பட்ட பெருந்தெருக்கள் 3066 கிலோ மீற்றர்களாகும். இதில் அதிவேகப்பாதை 150 கிலோ மீற்றர்களாகும்.   இங்குள்ள புகையிரதப் பாதையின் நீளம் 39 கிலோ மீற்றர்களெனக் கணக்கிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் கடல்வழி விமானவழிப் போக்குவரத்தின் கேந்திர நிலையமாகக் காணப்படுகின்றது. ஜுராங் துறைமுகமானது கப்பலிலிருந்து பொருட்களை மிகச்சுறுசுறுப்பாக ஏற்றியிறக்கும் துறைமுகமாகக் கொள்ளப்படுகின்றது.  மீன்பிடி - ஆழ்கடல்துறையே முக்கிய தொழிற்றுறையாகக் கொள்ளப்படுகின்றது. மீன் உற்பத்திகள் - மருந்துப் பொருட்கள் - இறப்பர் உற்பத்திப் பொருட்கள் என்பன சிங்கப்பூரின் முக்கிய உற்பத்திப் பொருட்களாகும்.

சிங்கப்பூரின் பிரசித்திபெற்றதும், உள்ளுர் - வெளியூர் சுற்றுலாப்பயணிகள் செல்லும் இடங்களாக ஜூரோங் பறவைகள் பூங்கா, ஸென்டோசா நீர்ப்பூங்கா, இரவில் ஜொலிக்கும் சிங்கப்பூர் உயிரியல் பூங்க (Night Safari) - முதலைகள் காப்பகம் - மண்டேய் ஓர்கிட் பூங்கா - மிண்ட் நாணயக் காட்சியகம் -மாரியம்மன் கோவில் - சுல்தான் பள்ளிவாசல் - மேர்லயன் சிலை என்பனவற்றைக் கொள்ளலாம். உல்லாசப் பயணிகளைக் கவரும் இடங்களாக இவை காணப்படுவதால் -  உல்லாசப் பயணத்துறைக்கு  அதிமுக்கியத்துவம் கொடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

(தொடரும்)
ஐ. ஏ. ஸத்தார்
 


 



Post a Comment

Previous Post Next Post