3.சிங்கப்பூர் - மலேசியா நினைவுகள்!

3.சிங்கப்பூர் - மலேசியா நினைவுகள்!


கிழக்கு மேற்காகச் செல்லும் ரயிலிலிருந்து அவுட்ரேம் நிலையத்தில் இறங்கிய நான் வடக்கு கிழக்காகச் செல்லும் (NE) ரயிலில் ஏறியதும் - அங்கே அதிகமான பிரயாணிகள் இந்திய நாட்டவர் போல் இருப்பதைக் கண்டேன். ஒருவரை அணுகி விசாரித்தபோது இந்த ரயில் புங்கோல் என்ற இடத்திற்குச் செல்வதாகவும்  நான் இறங்கவேண்டிய இடம் பொர்ரர் பார்க் என்றும் குறிப்பிட்டார்.  பொர்ரர் பார்க் வரும் வரைக்கும் சைனா டவுன்   - கிளாக் கியூ  - டோபிகோட்  - லிட்டில் இந்தியா போன்ற ரயில்  தரிப்பிடங்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது.

சிங்கப்பூரில்  லிட்டில் இந்தியா என்ற பகுதி அதிகமான இந்திய வர்த்தகத் தலங்களைக் கொண்டதாகும். இப்பகுதி வீதிகள்  கட்டடங்கள் யாவும் பல வர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.



பொர்ரர் பார்க்கில் ரயிலை விட்டிறங்கிய நான்  -  டிக்கட்டை வெளியேறு பீடத்தில் பல முறைகளில் ஸ்கேன் செய்தபோதிலும்  கேட் திற படவில்லை.  

அருகிலிருந்த ரயில் அதிகாரியிடம் விசாரித்தபோது  -  3.10 டொலருக்கான பிரயாணத்தூரத்திற்கு 2.90 டொலருக்கே டிக்கட் பெறப்பட்டமையால் கேட் திறபடவில்லை என்பதாக அவர் குறிப்பிட்டார்.  0.20 சதத்தைக்  கொடுத்து டிக்கட்டை சரி செய்து கொண்டு  -  டிக்கட்டை ஸ்கேன் பண்ணியதும் கேட் திறந்து கொண்டதானது.  நவீன தொழில் நுட்பத்திலிருந்து எவரும் தப்பிக்கொள்ள முடியாதென்பதை எனக்கு உணரவைத்தது.

ரயில் நிலையத்தை விட்டும் வெளியேறிய நான் சிறிது தூரம் நடந்து வானுயரிந்த கட்டிடங்களைத் தாண்டிச் சென்று தங்கவேண்டிய ஹோட்டலை அடைந்தேன்.

சரவணபவன்  -  தலைப்பாக்கட்டு போன்ற பிரசித்திபெற்ற  உணவகங்களுக்குஅடுத்து அமைந்திருந்த ஐந்து மாடிகள் கொண்ட  அஸ்பினல்ஸ் ஹோட்டல் நான் தரித்துச் செல்ல வேண்டிய இடமாகும்.  

சரவணபவன் சைவ சாப்பாட்டிற்கும்  -  தலைப்பாக்கட்டு பிரியாணிக்கும் உலகில் பெயர்போன உணவகங்களாகும். 

இப்பகுதியும் இந்தியர்களும்  - தமிழ்பேசும் மக்களும் அதிகமாக வர்த்தகம்செய்கின்ற இடமாகவும்   நடமாடும் இடமாகவும் காணப்பட்டதானது மன ஆறுதல் தரக்கூடியதாக இருந்தது. 
 
முஸ்தபா சென்றர் என்ற பெயரில் இங்குள்ள வர்த்தக நிலையமானது 24 மணிநேரமும் திறந்திருப்பதோடு - தேவையான சகல பொருட்களையும் ஒரே குடையின் கீழ் வாங்கிக்கொள்ளக் கூடிய வாய்ப்பையும் தந்தது.

முஸ்தபா சென்றரில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதையும் - விடியும்வரை எவ்வித களைப்புமின்றி அவர்கள் பொருட்கள் வாங்கிக் கொண்டிருப்பதையும்காணக்கூடியதாக இருந்தது.

பல்வேறு வகைப்பட்ட உணவகங்கள், சர்வதேசப் பணம் மாற்றுமிடம் என்பன இங்கு நல்லிரவு வரை திறந்திருப்பதானது -  வெளிநாட்டுப் பயணிகளுக்குமாத்திரமன்றி   உள்நாட்டவருக்கும் அதிக சௌகரியத்தைக் கொடுக்கின்றதொன்றெனலாம்.

சிங்கப்பூர் பெருந்தீவின் மத்தியில் 166 மீற்றரிகள் வரை உயரமான  சிகரங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் உயர்ந்தது புகிட் டிமாஸ் ஆகும்.

சிங்கப்பூர் பூமத்திய ரேகைக்கு வடக்கே 137 கிலோ மீற்றர்  தூரத்தில் அமைந்திருப்பதால் வெப்பநிலைக் காலநிலையைக் கொண்டுள்ளது. வெப்பநிலை 22 பாகை முதல் 34 பாகை  செல்சியஸ் வரை மாறிச்செல்கின்றது.

வருடத்தில் டிஸம்பர் முதல் மார்ச் வரை சிங்கப்பரின் மழை வீழ்ச்சிக் காலமாகும். இரவு நேரத்தில் நைட் சபாரி சென்றபோது மழை தூறிக் கொண்டிருந்தந்தது.

புவியியலாளர்களின் காலநிலை பாகுபாட்டின் அடிப்படையில் சிங்கப்பூர்  அயனமண்டல மழைக்காட்டு காலநிலைக்குட்பட்ட நாடாகும். 

சிங்கப்பூரின் சராசரி ஈரத்தன்மையானது காலை வேளைகளில் 90 வீதமாகவும் இரவில் 60 வீதமாகவும் கணிக்கப்படுகின்றது.
13ம் நூற்றாண்டளவில் "ஸங் நிலா உதாமா" என்ற இளவரசன் இத்தீவிற்குள் கால்பதித்தபோது சிங்கத்தை ஒத்த ஒருவகை மிருகத்தைச் சந்திக்க நேர்ந்தமையால் அவ்விடத்தை "சிங்கபுர" என்று அழைத்ததாக மலேய மரபுக்கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கபுர என்ற சமஸ்கிருத மொழியின் பொருள் "சிங்க நகரம்" என்பதாகும். இருந்தபோதிலும் இப்பகுதி வனங்களில் சிங்கத்தைப் பார்ப்பதென்பது அபூர்வமானதாகும். 

ஆனாலும் “நைட்சபாரி” (Night Safari) யின்போது  சோம்பேறித்தனமாக உறங்கிக் கொண்டிருந்த சிங்கமொன்றைக் காணக்கூடியதாக இருந்தது. 

இளவரசர் ஸங் நிலா உதாமா கண்டது புலியாகக் கூட இருந்திருக்கலாம். சிங்கப்பூர் அரச இலட்சணையில் சிங்கமும் புலியும் பொறிக்கப்பட்டுள்ளமை இக்குழப்பத்திலிருந்து விடுபடும் நோக்கிலாகக்கூட இருக்கலாம்.

இத்தீவில் "தெமாசெக்" என்ற பெயரில் நகரொன்று இருந்ததாக சீனப்புராணங்களிலும் மலேசியா மரபுக் கதைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

தெமாசெக்  என்றால் "கடற்பட்டணம்" என்பது பொருளாகும்.

சிங்கப்பூரின் நவீன வரலாறு 1819 ஜனவரி 29ம் திகதி ஸர் தோமஸ் ஸ்டாம்போர்ட் ரப்ல்ஸ (Sir Thomas Stamford Raffles ) என்ற ஆங்கிலேயர் இத்தீவை ஜொஹோர்சுல்தானிடமிருந்து  பொறுப்பேற்றுக் கொண்டதுடன்  ஆரம்பமாகின்றது.  
 
தோமஸ் ஸ்டாம்போர்ட் ரப்ல்ஸ்  தூரதிருஷ்டியுடன் செயல்பட்டு இத்தீவை  நவீன நகராக மாற்றியமைப்பதற்கான முதல் முக்கிய காரியகர்த்தராகக் கருதப்படுகின்றார்.

வனாந்திரமாகவும்  சேரும் சகதியுமாகவும் காணப்பட்ட மீன்பிடிக்கிராமம் சுதந்திர வர்த்தகவலயமாக மாற்றம் பெறுவதற்கு இவர்தான் முன்னோடி.அதனால்தான் இவர் சிங்கப்பூரின் சிருஷ்டிகர்த்தா என மதிக்கப்படுகின்றார். 

தோமஸ் வூல்னர்  (Thomas Woolner)  என்பவரால் புடீரோன்ஸினால் உருவாக்கப்பட்ட அவரது சிலை விக்டோரியா தியேட்டருக்கு அருகில் நிறுவப்பட்டுள்ளது. அதே சிலையின் பளிங்குக் கற்களால் செய்யப்பப்பட்ட பிரதியொன்று  வடக்கு படகுத்துறையிலும் (North Boat Quay) வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கிந்தியக் கம்பனியின் வசமிருந்த சிங்கப்பூர் 1858ல் பிரித்தானியர் வசமாகியதும் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டு கிழக்கு - மேற்கு வர்த்தகத்தின் முக்கிய கப்பல் போக்குவரத்து மையமாகியது. 

1869ல் சுயஸ்கால்வாய் திறக்கப்பட்டதும்  கப்பல் போக்குவரத்தின் அதிகரிப்பானது சிங்கப்பூர் சுதந்திர வர்த்தகத்துறையின் அபிவிருத்திக்கு வழிவகுத்ததெனலாம்.

(தொடரும்)

ஐ. ஏ. ஸத்தார்
 


 



Post a Comment

Previous Post Next Post