2024 ஹஜ்- ஒரு கண்ணோட்டம்!

2024 ஹஜ்- ஒரு கண்ணோட்டம்!


இஸ்லாத்தில் ஹஜ் புனிதக் கடமை முகம்மது நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஏழாம் நூற்றாண்டில் ஆரம்பித்ததாகும்.

ஆனால் அதற்கு முன்பாகவே இப்ராஹீம் (அலை) அவர்கள் காலத்தில் மக்கா நகருக்கு ஆயிரக்கணக்கானோர் பயணித்து, கஃபாவை ஏழு முறை வலம் வந்தும், அல்-ஸஃபா மற்றும் அல்-மர்வாஹ் குன்றுகளின் நடுவே ஓடியும், அறபா மலையிற் தங்கியும், ஸம்ஸம் கிணற்றுப் புனித நீரைப்பருகியும், சைத்தான் மீது கல்லெறிந்தும் வழிபட்டனர்.

அதன் பின்னர், தங்கள் தலையை மொட்டை அடித்து, ஒரு கால்நடை விலங்கை அறுத்துப் பலியிட்டு ஈதுல் அழ்ஹா எனும் தியாகத் திருநாளைக் கொண்டாடினர். இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாக மனப்பாங்கை நினைவு கூருவது இதன் கருப் பொருளாகும்.

முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஹஜ், ஆண்டு தோறும் மக்கா நகருக்கு மேற்கொள்ளும் புனிதப் பயணமாகும். 
உடல் நலமும் பணவசதியும் உள்ள இஸ்லாமியர் ஒவ்வொருவரும் தன் ஆயுளின்போது ஒரு முறையேனும் ஹஜ் செய்வது கடமையாகும்.

இப்புனிதப் பயணத்தில் மக்கமா நகர் சென்று ஹஜ்ஜின் கடமைகளை நிறைவேற்றுவதன் மூலம்,  தியாக சிந்தனை உணர்வோடு ஒரு மனிதன் தன்னை இறைவனிடம் அர்ப்பணிக்கின்றான்.

துல்ஹஜ் மாதத்தின் 8 முதல் 12ம் நாள் வரை  மினா, அறஃபாத், முஸ்தலிஃபா ஆகிய இடங்களில் தங்குவதும், அந்நாட்களில் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவதும், மக்கமா நகரிலுள்ள புனித கஃபாவைத் தவாஃப் செய்வதும் ஹஜ்ஜின் முக்கிய அம்சங்களாகும்.

அந்தவகையில், 2024ம் ஆண்டு புனித ஹஜ் கிரியைகள் அனைத்தும் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும்  நிறைவு பெற்றது.

உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் யாத்ரீகர்களாகச் சென்று, குறிப்பிட்ட சில தினங்களில் ஒன்று சேர்ந்து ஹஜ் கடமையை  இனிதே நிறைவேற்ற அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்தும், நிம்மதியான வணக்க வழிபாடுகளில் ஈடுபடத் தேவையான பாதுகாப்பு சூழலை ஏற்படுத்திக் கொடுத்தும்,  மருத்துவம் உட்பட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளை செய்துகொடுத்தும்,  வழமைபோல் ஸுஊதி அரேபியா அரசாங்கம் செய்துவரும் பணியானது அவர்களது பாரம்பரிய கடமை உணர்வையே வெளிப்படுத்துகின்றது. 

GASTAD தரும் தகவலின்படி, இம்முறை 221854 பெண்கள் உட்பட, 1833164 யாத்ரீகர்கள் ஹஜ் கடமையை நிறை வேற்றியுள்ளனர்.
ஹஜ் கடமையை நிறைவேற்றியவர்களுள் 63.3 வீதமானோர் அராபியரல்லாத ஆசிய நாடுகளைச் சேர்ந்தோராவர். அராபியரல்லாத ஆபிரிக்க நாட்டவர் 11.3 வீதமானவர்களும், ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 3.2 வீதமானோரும், 22.3 வீதமான அராபிய நாடுகளைச் சேர்ந்தவர்களும்  இம்முறை ஹஜ்ஜுக்காக மக்கமா நகர் வந்துள்ளனர். 

70 வயது மதிக்கத்தக்க ஒரு எகிப்தியப் பெண்மணி பாலைவனம் கடந்து, நடந்து வந்து  ஹஜ் கடமையை நிறைவேற்றியுள்ளதாக சமூகவலைத் தளங்களில் காணமுடிகின்றது.

4714 யாத்ரீகர்கள் கப்பல்களில் வந்து ஹஜ் கடமையை நிறைவேற்றியுள்ளதோடு, விமான மூலமாக 1546345 பேர்களும், தரைமார்க்கமாக வாகனங்களில் 60251 பேர்களும் ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்கா வந்துள்ளனர்.

AFP தரும் தகவலின்படி, இம்முறை ஹஜ்ஜின்போது 577 பேர் வபாத்தானதாகவும், அவர்களுள் 323 பேர் எகிப்தியர் என்றும், 60 பேர் ஜோர்யானியர் என்றும் அறிய முடிகின்றது.

யாத்திரையின்போது வபாத்தானவர்களுள் பெரும்பாலானோர் வெப்பப் பாதிப்பு காரணமாகவே இறந்துள்ளதாக அறிய முடிகின்றது.

அல்லாஹ் அன்னார்களுக்கு நல்லருள்பாலிப்பானாக!

செம்மைத்துளியான்


 



Post a Comment

Previous Post Next Post