2024ல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமா?

2024ல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமா?


இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கான காலப்பகுதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது!

2024 ஆண்டிற்கான தேர்தல் செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 16 வரை எப்போதாவது ஒரு நாளில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்வரும் புதன்கிழமை (17.7.2024) ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான திகதிகளை அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அரசியலமைப்பு ரீதியாக அதிகாரம் வழங்கப்பட்டுள்ள போதிலும், அன்றைய தினம் திகதி அறிவிக்கப்படாது எனவும்,   தேர்தல்கள் ஆணைக்குழு கூடி, எதிர்வரும்   31ம் திகதிக்கு முன்னர் உரிய திகதிகளை அறிவிக்கும் எனவும் தேர்தல் ஆணைக்குழுவின்  தலைவர் ஆர்.எம்.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த திகதியிலிருந்து 16 முதல் 21 நாட்களுக்குள் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 4 முதல் 6 வாரங்களுக்குள் வாக்களிப்பு நடைபெறும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

தேர்தல் நடத்துவதற்கான அடிப்படை நடிவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், 18 வயது பூர்த்தியான பத்து இலட்சம் புதிய வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ள நிலையில்,  இந்தத் தேர்தலில் சுமார் ஒரு கோடியே எழுபது இலட்சம் பேர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருப்பதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களிலிருந்து சுமார் பத்து வேட்பாளர்கள் போட்டியிடலாம்!

எத்தனை பேர் போட்டியிட்டாலும் மும்முனைத் தாக்கம் ஒன்றுதான் இம்முறை தேர்தலை ஆதிக்கம் செலுத்தப் போகின்றது!

75 வயதான, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, 2020 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்ட நிலையில், கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பி.யாக  2021 ஜூன் 23 அன்று மீண்டும் நாடாளுமன்றத்துக்குள் நுழைய வரம் பெற்று, மே 2022ல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் பிரதமரானார். 

ரணில் விக்ரமசிங்க 2022 ஜூலை 14 அன்று, அவரது முன்னோடி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிய பிறகு, பதில் ஜனாதிபதியானார். பின்னர், கோட்டாபய ராஜபக்ஷ தனது ஜனாதிபதிப் பதவியை இராஜினாமாச் செய்ததும்,  2022 ஜூலை 20 அன்று இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2022 ஜூலை 21 அன்று, ஒன்பதாவது ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

தோல்வி கண்டு, மக்கள் மனதில் இடம்பிடியாது இருந்தபோதிலும் கூட, சிறிதும் துவண்டு விடாமல் தனது அரசியல் வாழ்க்கையில் நம்பிக்கை மிகக் கொண்டிருந்த அவர்,  தூர்ந்துவிடும் நிலையிலிருந்த இலங்கை நாட்டை ஒரு நல்ல நிலைக்கு இப்போது கொண்டு வந்துள்ளார். பொருளாதாரத்தில் வீழ்ச்சிகண்டு, அதலபாதாளத்தில் தள்ளப்பட்டுள்ள ஒரு நாட்டை நிமிர்த்தி எடுக்க வேண்டுமென்றால், கடன் படாமல் அதனைச் செய்வதென்பது  முடியாத காரியமாகும். அதனையே அவர் இப்போது செய்து வருகின்றார்.

அந்த வகையில் இலங்கை 2024 மார்ச் வரை 100 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாளி ஆகியுள்ளதென Ministry of Finance -  Economic Stabilization and National Pilicies குறிப்பிடுகின்றது. இதில் 37.0 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுக் கடன்கள் என்றும், 57.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உள்நாட்டுக் கடன்கள் எனவும் மேலும் அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது!
நீண்ட காலமாகவே ஜனாதிபதிக் கனவைத் தன் இதயத்தில் சுமந்து, மக்கள் சேவையில் ஈடுபட்டு வரும் 57 வயதான, ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதச மற்றும் இலங்கையைப் புதிய அரசியல் கொள்கை ஒன்றின் மூலம் சுபீட்சங்காணத் துடித்துக் கொண்டிருக்கும், தேசிய மக்கள் சக்திக் கட்சியிலிருந்து களமிறங்கியிருக்கும் 55 வயதான அனுர குமார திஸானாயக;

இவர்கள் மூவரைத் தவிர, இலங்கை சுதந்திர கட்சியிலிருந்து விஜேயதாச ராஜபக்சே,          மௌபிம கட்சித் தலைவர் திலித் ஜயவர்தன,  சுயேட்சையாக ஜனக ரத்னாயக,  ரொசான் ரணசிங்க ஆகியோருடன் தொழிலதிபர் தம்மிக்க பெரேராவையும் வேட்பாளராகக் களமிறக்க கட்சி ஒன்று விருப்பம் வெளியிட்டு வருவதாகவும் அறிய முடிகின்றது.

தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற ஒரு விடயத்தை ஆரம்பத்தில் தமிழ் அரசியல்வாதிகளிடமிருந்து முன்வைக்கப் பட்டபோதிலும்,  தமிழ் அரசியல் கட்சிகள் இப்போது மாறுபட்ட நிலைப்பாட்டில் இருப்பதால், இறுதி நேரத்தில் அவர்கள் தமக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தி ஒரு நிலைப்பாட்டுக்கு வரலாம் என்று கூட எதிர் பார்க்கலாம்!

தீர்மானமிக்க இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் எடுக்கப்படும் முடிவு சரியானதாக இருக்க வேண்டுமே தவிர, இனங்களுக் கிடையிலான ஒற்றுமையைக் குலைத்து நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்வதாக இருந்துவிடக் கூடாது என்பதே தமிழ் மக்களின் ஏகோபித்த குரலாக இருக்கின்றது!

கடந்த 2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் 1360026 மேலதிக வாக்குகள் பெற்று  அமோக வெற்றி பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, அநுராதபுரம் - ருவன் வெளிசாய புனித பிரதேசத்தில் உத்தியோக பூர்வமாகப் பதவியேற்றார்.
1949 ஜூன் 20ம் திகதி, தான் பிறந்தது முதல்  இலங்கையராகவே இருந்து 2003ல் அமெரிக்க குடியுரிமையைப் பெற்றுக் கொண்டார்; 2005ல் அமெரிக்க-இலங்கை இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருந்த இவர், 2019ல் மீண்டும் தனி இலங்கைக் குடியுரிமையுடன், ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராகக் களமிறக்கப் பட்டார்!

2019 நவம்பர் 18ல் இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ஷ, பத்து வருடங்களாக பாதுகாப்பை சிறப்பாகக் கையாண்டதால், இலங்கையின் முழுமையான அபிவிருத்திக்கும், பாதுகாப்புக்கும் உத்தரவாதமளிப்பார் என்ற நம்பிக்கையில் அவரை அரசியல் மேடையில் ஜனாதிபதி வேட்பாளராக ஏற்றிய வாக்காளர்கள் அவரை அமோக வெற்றி பெறச் செய்தபோதிலும், இலங்கை மக்கள் எதிர்பார்த்தது நிறைவேறாமற்போய், நாடு வங்கலோத்து நிலைக்குத் தள்ளப்பட்டது! 

தொடர்ந்து வந்த பொருளாதார-நிதிப் பிரச்சினைகளால் வேறும் பல பிரச்சினைகள் தோன்றியதால் பாதிப்புக்குள்ளாகி, நிர்க்கதியான மக்கள் ஜனாதிபதிக்கும்,  அரசாங்கத்திற்கும் எதிராகப் போராட்டம் செய்து 2022ம் ஆண்டு ஜூலை 14ம் திகதி  அவரைப் பதவியிலிருந்து விலக வைத்தனர்!

கோட்டாபய ராஜபக்ஷ 2019 நவம்பர் 18 முதல் 2022 ஜூலை 14 ல், தான் பதவிவிலகும் வரை,2 வருடங்கள், 7 மாதங்கள், 26 நாட்களுமாக ஜனாதிபதிப் பதவியில் இருந்தார்.


அதன் பிறகு இடைக்கால ஜனாதிபதியாக 2022 ஜூலை 14ல் பதவியேற்ற  ரணில் விக்கிரமசிங்க, 2 வருடங்கள், 4 மாதங்கள், 4 நாட்கள் ஆட்சி செய்தால், அவரது பதவிக்காலம் 2024 நவம்பர் 18ம் திகதி முடிவுறும்!

இடைக்கால ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு மாதத்திற்கு குறையாத மற்றும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும்; அதன்படி, 2024 ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 16 வரை நடைபெறலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்பார்க்கின்றது!

ஜனாதிபதி தேர்தலுக்காக ஆயிரம் கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, இந்த வருட இறுதிக்குள் கட்டாயம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால் தேர்தலுக்கான காகிதாதிப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு நிதி அல்லது தொழில்நுட்பத் தடையேதுமில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தமக்கு அறிவித்ததாக PAFFREL அமைப்பின் ஊடகச் செய்தியும் குறிப்பிடுகின்றது!

செம்மைத்துளியான்




 



Post a Comment

Previous Post Next Post