8 மணி நேரம் நடந்த இறுதி ஊர்வலம்... ஆம்ஸ்ட்ராங்கின் உடல் திருவள்ளூரில் நல்லடக்கம்

8 மணி நேரம் நடந்த இறுதி ஊர்வலம்... ஆம்ஸ்ட்ராங்கின் உடல் திருவள்ளூரில் நல்லடக்கம்


சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பவுத்த முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. 8 மணி நேரம் நடந்த இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவரான ஆம்ஸ்ட்ராங், கடந்த வெள்ளிக்கிழமை இரவு, சென்னை பெரம்பூரில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். உடற்கூராய்வுக்குப் பிறகு குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்ட நிலையில், பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சிப் பள்ளி மைதானத்தில் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது.

அங்கு, இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித், திரை பிரபலங்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், பகுஜன் சமாஜ் தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து அவரது உடல் எங்கு அடக்கம் செய்ய வேண்டும் என்ற வழக்கில், திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பொத்தூரில் அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள ஆம்ஸ்ட்ராங்கின் உறவினரின் இடத்திலேயே உடலை அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, பெரம்பூரில் இருந்து பொத்தூர் வரையிலான 21 கிலோ மீட்டர் தூரம் ஆம்ஸ்ட்ராங் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. வழிநெடுகிலும் அவரது ஆதரவாளர்கள் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தியதால், நேற்று மாலை 4.30 மணிக்கு தொடங்கிய ஊர்வலம் 8 மணி நேரத்திற்குப் பிறகு நள்ளிரவில் பொத்தூரை அடைந்தது.

அங்கு, சந்தனப் பேழையில் வைக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பவுத்த முறைப்படி இறுதிச்சடங்கு நடைபெற்றது. கர்நாடகாவில் இருந்து வந்திருந்த புத்த பிக்குகள் 7 பேர், பவுத்த முறைப்படி சடங்குகளை செய்தனர். 5 வாசனைத் திரவியங்களால் ஆம்ஸ்ட்ராங் உடலை தூய்மைப்படுத்தி, அவர் உடல் மீது வெண்மை நிற துணி போர்த்தப்பட்டது.

ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கோடி, தனது ஒன்றரை வயது குழந்தையுடன் கணவர் உடலுக்கு இறுதிச்சடங்குகளை செய்தார். தாக்குதலின் போது காயமடைந்த ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரரும் இறுதிச்சடங்கில் பங்கேற்றார். மெழுகுவர்த்தி ஏந்தி குடும்பத்தினர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து, ஜெய்பீம் என பொறிக்கப்பட்ட சந்தனப்பேழையில் வைக்கப்பட்டிருந்த ஆம்ஸ்ட்ராங்கின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் இறுதிசடங்கு முடியும் வரை உடன் இருந்தனர்.

news18



 



Post a Comment

Previous Post Next Post