சம்பந்தனின் மறைவு... முழு இலங்கைக்கும் இழப்பு : சுமந்திரன் இரங்கல்

சம்பந்தனின் மறைவு... முழு இலங்கைக்கும் இழப்பு : சுமந்திரன் இரங்கல்


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா. சம்பந்தனின் (R.Sampanthan) மறைவு தமிழ் சமூகத்திற்கு மட்டுமல்ல முழு இலங்கைக்கும் இழப்பாக கருதப்படுவதாக  எம்.ஏ சுமந்திரன் (M.A.Sumanthiran) தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் அரசியல்வாதியுமான இரா. சம்பந்தனின் மறைவு குறித்து பலரும் இரங்கல் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சம்பந்தனின் மறைவு குறித்தும் இறுதிக் கிரியைகள் தொடர்பிலும் எம்.ஏ சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது ”இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் நேற்று இரவு 11 மணியளவில் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமாகியிருக்கின்றார்.

மரணமடையும் போது அவருக்கு 91 வயது, நீண்டகாலம் தமிழ் மக்களுக்கு இணையில்லாத தலைவராக, மக்களை வழிகாட்டியவராக வாழ்ந்திருக்கின்றார்.

அவருடைய இழப்பு தமிழ் சமூகத்திற்கு மட்டுமல்ல முழு இலங்கைக்கும் மிக மூத்த அரசியல்வாதியினுடைய இழப்பாக தான் கருதப்படுகின்றது.

இன்று காலை சிறிலங்கா அதிபர், பிரதம மந்திரி, சபாநாயகர் ஆகியோர் என்னோடு பேசினார்கள். இதேவேளை அவருடைய பூதவுடல் நாடாளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட வேண்டும் எனக் கேட்டிருக்கின்றார்கள்.

கொழும்பு (Colombo) - பொரளையிலுள்ள மலர்ச்சாலையில் நாளை காலை 9 மணியிலிருந்து மக்களுடைய அஞ்சலிக்காக அவருடைய பூதவுடல் வைக்கப்படும்.

அதன்பின்னர் நாளை மறுதினம் மதிய நேரமளவில் பூதவுடல் நாடாளுமன்றத்திற்கு (Sri Lanka Parliament) எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர் அங்கிருந்து அன்னாருடைய மாவட்டமான திருகோணமலைக்கு (Trincomalee) பூதவுடல் எடுத்துச் செல்லப்படும்.

இறுதி ஈமக்கிரியைகள் தொடர்பில் இன்னமும் குடும்பத்தினர் தீர்மானிக்கவில்லை என்றாலும் அனேகமாக ஞாயிற்றுக்கிழமை வைப்பதற்கு உத்தேசித்திருக்கின்றார்கள்.

அவருடைய பிரிவு நாளில் துயருற்றிருக்கும் அனைத்து மக்களுக்கும், எங்களுடன் சேர்ந்து அந்த துயரத்தில் பங்குகொள்கின்ற அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த அஞ்சலியை செலுத்துகின்றோம்.

ibctamil



 



Post a Comment

Previous Post Next Post