லெஜெண்ட் மாதிரி விளையாடி இந்தியா ஜெயிச்சுட்டாங்க.. பாகிஸ்தானின் தோல்விக்கு இதான் காரணம்.. யூனிஸ் வருத்தம்

லெஜெண்ட் மாதிரி விளையாடி இந்தியா ஜெயிச்சுட்டாங்க.. பாகிஸ்தானின் தோல்விக்கு இதான் காரணம்.. யூனிஸ் வருத்தம்


உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் 2024  டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா சாம்பியன்ஸ் அணி கோப்பையை வென்றது. இங்கிலாந்தில் நடைபெற்ற அந்தத் தொடரில் யுவராஜ் சிங் தலைமையில் விளையாடிய இந்தியா சாம்பியன்ஸ் அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. பர்மிங்காம் நகரில் ஜூலை 13ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 156/6 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக சோயப் மாலிக் 41 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அனூரீத் சிங் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 157 ரன்களை துரத்திய இந்தியா சாம்பியன்ஸ் அணிக்கு அம்பத்தி ராயுடு 50 (30), யூசுப் பதான் 30 (16), குர்கீரத் சிங் 34 (33) ரன்கள் எடுத்தனர். அதனால் 19.1 ஓவரிலேயே வெற்றி பெற்ற இந்தியா 2007  டி20 உலகக் கோப்பை ஃபைனல் போலவே பாகிஸ்தானை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.

முன்னதாக 2024  டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக வெறும் 120 ரன்களை அடிக்க முடியாமல் பாகிஸ்தான் 6 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. அந்த சூழ்நிலையில் இந்தத் தொடரில் ஜூலை 6ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்கடித்தது.

அப்போது 2024 டி20 உலகக் கோப்பையில் சந்தித்த தோல்விக்கு இங்கே இந்தியாவை பழி தீர்த்ததாக பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி கேப்டன் யூனிஸ் கான் தெரிவித்தார். ஆனால் அப்போதெல்லாம் அமைதியாக இருந்த இந்தியா சாம்பியன்ஸ் முக்கியமான ஃபைனலில் பாகிஸ்தானை தோற்கடித்து உண்மையாக பழி தீர்த்தது. இந்நிலையில் ஃபைனலில் இந்திய வீரர்கள் லெஜெண்ட்ஸ் போல விளையாடி தங்களை தோற்கடித்ததாக யூனிஸ் கான் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும் ஃபைனலில் ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்கத் தவறியதே தங்களுடைய தோல்விக்கு காரணம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்தியா லெஜெண்ட்ஸ் போல விளையாடியது. மிகப்பெரிய ஃபைனலில் வெற்றி பெற ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அவசியம். அதை இப்போட்டியில் செய்யத் தவறியதே எங்களுக்கு தோல்வியை கொடுத்தது”

“இருப்பினும் இந்த தொடரில் நாங்கள் விளையாடி விதத்திற்காக எங்கள் வீரர்களை பாராட்டுகிறேன். இந்தத் தொடரில் விளையாடிய அனைத்து அணிகளுமே பெரிய சவாலையும் போட்டியையும் கொடுத்தன. இந்த தொடரை நடத்திய அணி நிர்வாகம் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்” எனக் கூறினார். மொத்தத்தில் இந்தியாவிடம் இங்கேயும் தோல்வியை சந்தித்ததால் பாகிஸ்தான் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

crictamil



 



Post a Comment

Previous Post Next Post