
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 21ஆம் தேதி ராவில்பிண்டி நகரில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் 448-6 ரன்கள் குவித்து வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தி விடலாம் என்று குறைத்து மதிப்பிட்டு முன்கூட்டியே டிக்ளர் செய்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 171*, சௌட் ஷாக்கீல் 141 ரன்கள் எடுத்தனர். வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக சோரிஃபுல் இஸ்லாம் மற்றும் ஹசன் மஹமுத் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
ஆனால் அதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் ஆரம்ப முதலே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாகிஸ்தான் பவுலர்களை அபாரமாக எதிர்கொண்டு 565 ரன்கள் குவித்தது. அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக தங்களது அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து வங்கதேசம் வரலாறு படைத்தது. அதிகபட்சமாக அனுபவ வீரர் முஸ்பிகர் ரஹீம் 191, சத்மன் இஸ்லாம் 93, மெஹதி ஹசன் 77, மோனிமுள் ஹைக் 50, லிட்டன் தாஸ் 55 ரன்கள் எடுத்தனர்.
பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக நாசீம் ஷா 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதன் பின் 117 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய பாகிஸ்தான் 5வது நாளில் போராடி டிரா செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நாளில் சுழலுக்கு சாதகமாக மாறிய பிட்ச்சில் கேப்டன் ஷான் மசூட், பாபர் அசாம் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் வங்கதேச பவுலர்களின் தரமான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.
அதனால் வெறும் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டான பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக தங்களுடைய குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 50, சாய்ன் ஆயுப் 37 ரன்கள் அடுத்த நிலையில் வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக மெஹதி ஹசன் 4, ஷாகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
இறுதியில் 30 ரன்களை துரத்திய வங்கதேசத்துக்கு ஜாகிர் ஹாசன் 15*, சத்மன் இஸ்லாம் 9* ரன்கள் அடித்து எளிதாக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக ஒரு வெற்றியை பதிவு செய்து வங்கதேசம் புதிய சரித்திரம் படைத்துள்ளது. கடந்த 2001 முதல் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய அந்த அணி இதற்கு முன் 13 போட்டிகளில் 12 தோல்வி 1 டிராவை சந்தித்திருந்தது.
ஆனால் தற்போது அந்த தோல்வி சரித்திரத்தை மாற்றி எழுதிய வங்கதேச அணி பாகிஸ்தானை அதனுடைய சொந்த மண்ணிலேயே மண்ணைக் வைத்து வரலாற்று வெற்றியைப் பெற்று 1 – 0* (2) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அது போக பாகிஸ்தானுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற முதல் அணியாகவும் வங்கதேசம் உலக சாதனை படைத்துள்ளது.
மறுபுறம் ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், அயர்லாந்து போன்ற கத்துக்குட்டிகளிடம் சமீப காலங்களில் தோற்ற பாகிஸ்தான் 2024 டி20 உலகக் கோப்பையில் அமெரிக்காவிடம் தோற்றது. அதன் பின் களமிறங்கிய இப்போட்டியிலும் எந்த மாற்றத்தையும் சந்திக்காத பாகிஸ்தான் சொந்த மண்ணில் மற்றொரு கத்துக்குட்டியான வங்கதேசத்திலும் அவமானத் தோல்வியை பரிதாபமாக பெற்றுள்ளது.
crictamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments