பங்களாதேசத்திலும் 'அரகலை' வெடித்ததால், தப்பி ஓடினார் ஹஷீனா!

பங்களாதேசத்திலும் 'அரகலை' வெடித்ததால், தப்பி ஓடினார் ஹஷீனா!


பங்களாதேசத்தில் மாணவர் போராட்டத்தால் உருவாகியுள்ள அசாதாரண சூழல் காரணமாக பிரதமர் ஷேக் ஹஷீனா ராஜினாமா செய்திருப்பதுடன், அந்த நாட்டை விட்டே 
அவருடைய சகோதரி ஷேக் ரெஹானாவுடன் வெளியேறியுள்ளார்.

அவர்கள் பயணம் செய்த ஹெலிகாப்டர் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவின் தலைநகர் அகர்தலாவை நோக்கிச் செல்வதாக பிபிசி பங்களாதேஷ் செய்தி வெளியிட்டுள்ளது.

மாணவர் போராட்டம் காரணமாக,  90க்கும் மேற்பட்டோர் இரண்டு நாட்களில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நிலைமை மோசமாகி, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள்  டாக்காவிலுள்ள அதிகாரப்பூர்வ பிரதமர் இல்லத்திற்குள் நுழைந்துவிட்டமையே பிரதமர் ஹஷீனாவின் இராஜினாமாவும், வெளியேற்றத்துக்கும் காரணமாகும்.

பங்களாதேசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான 1971ம் ஆண்டு சுதந்திர போரில் பங்கேற்று உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறையை அமுலுக்கு கொண்டு வந்ததால் மாணவர்களிடையே பெரும் போராட்டம் வெடித்தது.

இதனை  இரத்துச் செய்ய வேண்டும் என்று கோரியே மாணவர்கள் நாடுதழுவிய ரீதியாக தொடர் போராட்டத்தில் ஈடுபடலாயினர்.
பெரிய பிரச்னைகள் ஏற்பட்ட போதிலும் பிரதமர் ஹஷீனாவை எவராலும் அசைக்க முடியாதிருந்த நிலையில்  அவரின் பலத்தை இந்த மாணவர் சக்தி அசைத்துக் காண்பித்து விட்டது!

கடந்த மாதம் சர்ச்சைக்குரிய இந்த ஒதுக்கீட்டு முறையை உயர்நீதிமன்றம் மீண்டும் நடைமுறைப்படுத்தியபோதே  மாணவர் எதிர்ப்புக்கள் அதிகரிக்கலாயின, ஆளும் கட்சிக் கும்பல் மாணவர்களாகிய போராட்டக்காரர்களைத் தாக்கியபோது,  போராட்டம் வன்முறையாக மாறி, அடுத்த 72 மணி நேரத்தில், பங்களாதேசத்தின் பல இடங்களில் வன்முறைகளும் மோதல்களும் வெடிக்கலாயின. தேசிய தொலைக்காட்சி கட்டிடம் தீ வைக்கப்பட்டது. சிறைச்சாலை ஒன்றின் வாயில் உடைக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான கைதிகள் தப்பியோடினர்; இதனால், நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

பங்களாதேசத்துப் பிரதமர் ஷேக் ஹசீனாவை  பதவி விலக வலியுறுத்தி மாணவ அமைப்பினர் நேற்று நடத்திய போராட்டத்தில் 98  பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பங்களாதேஷ அரசாங்கத்தின் நிறைவேற்று உத்தரவின் பேரில் இன்று முதல் மூன்று நாட்கள் பொது விடுமுறையை அறிவித்துள்ளதுடன், வன்முறை மோசமடைந்து வருவதைக் கருத்திற் கொண்டு தலைநகர் டாக்காவில் தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப் பட்டுள்ளதுடன், இன்று காலை 6 மணி முதல் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் முழுவதும் பரவலான வன்முறைகளுக்கு மத்தியில், மாணவர்களுக்கும், ஆளுங்கட்சியினர், மற்றும் காவல்துறையினருக்குமிடையே கடந்த மாதம் நடைபெற்ற வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததுடன், 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மாணவர்கள் அமைப்பினால் மேற்கொள்ளப்படும் இந்த போராட்டத்திற்கு முன்னாள் இராணுவ அதிகாரிகள், திரைப்பட நட்சத்திரங்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் உட்பட பெரும்பாலானோர் ஆதரவு வழங்கினர்.
பங்களாதேசத்தின் நிறுவனரும் முதல் ஜனாதிபதியுமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மூத்த மகளாக, 1947ல் பிறந்துள்ள ஷேக் ஹஷீனா, 1960 களில் தக்கா பல்கலைக்கழகத்தில் படித்துகொண்டே தீவிரமாக  அரசியலில் ஈடுபட்டவராவார். லண்டனில் இருந்த ஷேக் ஹஷீனா, அவாமி லீக் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.   1980 -களில் ஜெனரல் ஹுசைன் முஹம்மது இர்ஷாத் அரசுக்கு எதிராக போராட்டங்களைத் தீவிரமாக நடத்தி, 1996ம் ஆண்டில் பங்களாதேசத்தின் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டார்.2001ம் ஆண்டில் மட்டும் காலித் ஷியாவிடம் தோல்வி கண்டார். 2006-2008 பங்களாதேசத்தில் நெருக்கடி ஏற்பட்டபோது மிரட்டிப் பணம் பறித்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டார்.

அதன்பிறகு நடைபெற்ற தேர்தலில் ஷேக் ஹஷீனா மீண்டும் அரியணை ஏறினார். அது முதல், தொடர்ந்து அவருக்கு வெற்றியே கிட்டி பதவியில்  இருந்து வந்த அவர்,  2024 ஜனவரி 7ம் திகதி ஐந்தாவது முறையாகவும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது!

 செம்மைத்துளியான்




 



Post a Comment

Previous Post Next Post