தமிழ் மக்கள் பொதுச்சபை சார்பாக ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கும் திருவாளர் அரியநேந்திரன்!

தமிழ் மக்கள் பொதுச்சபை சார்பாக ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கும் திருவாளர் அரியநேந்திரன்!


ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் யார் என்ற இறுதித் தீர்மானம் எட்டப்பட்டுவிட்ட நிலையில், தெரிவு செய்யப்பட்ட இறுதி இரு வேட்பாளர்களுள் ஒருவரின் பெயரை தெரிவு செய்வதில் நீண்ட விவாதங்கள் இடம்பெற்று வருவந்ததாக அறிய முடிந்தது.

இலங்கைத்தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பா. அரியநேந்திரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே. வி. தவராசா. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் ஆகிய மூவரது பெயர்களே இறுதிப் பட்டியலில் இருந்ததாகத் தெரிவிக்கப் படுகின்றது.

இறுதியாக இரண்டு வேட்பாளர்கள் தெரிவானதும்,  ஒருவரை இன்று அறிவிப்பதாக தமிழ் மக்கள் பொதுச்சபையின் பிரதிநிதிகள் கருத்துத் தெரிவித்த நிலையில், இறுதி முடிவில் சிக்கல் எதுவுமின்றி யாழ்ப்பாணத்தில் வைத்து அறிவிக்கப்பட்டதாக ஊடகச் செய்தி ஒன்றில்  குறிப்பிடப்படுகின்றது.

கடந்த மாதம் ஏழு தமிழ் கட்சிகளும் ஏழு சிவில் அமைப்புகளும் இணைந்து பொதுக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி, தமிழ்ப் பொதுவேட்பாளர் தொடர்பான தெரிவை முன்னெடுப்பதற்கான உப குழுக்கள் அமைக்கப்பட்ட நிலையில், தமிழ்ப் பொதுவேட்பாளராக தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசா மற்றும் கிழக்கு மாகாண தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் ஆகியோரின் பெயர்கள் இறுதி முடிவுக்காக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது,  கிழக்கு மாகாண தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரனே தமிழ் மக்கள் சார்பில் களமிறங்கும் ஜனாதிபதி வேட்பாளர் என்று தமிழ் மக்கள் பொதுச்சபை அறிவித்துள்ளது!

இலங்கைத் தமிழரசுக் கட்சி, இலங்கைத் தமிழரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியற் கட்சியாகும். இது,1949ம் ஆண்டில் இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சியில் இருந்து பிரிந்த எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் உருவாக்கப்பட்டது.

1972ம் ஆண்டில் இக்கட்சி தமிழ்க் காங்கிரசு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணியை அமைத்த கட்சியாகும்.

பின்னர், இக்கூட்டணியின் பெயர் தமிழர் விடுதலைக் கூட்டணி என மாற்றப்பட்டு, 2004ம் ஆண்டில் கூட்டணியில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் அப்போதைய தலைவராக இருந்த வீ. ஆனந்தசங்கரி பிரிந்து சென்றதையடுத்து இலங்கைத் தமிழரசுக் கட்சி மீண்டும் புதுப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்களைக் கொண்ட கட்சிக் கொடியைக் கொண்ட இக்கட்சி, தற்போது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலமான ஓர் அரசியல் கட்சியாக விளங்கி வருகின்றது. 

இக்கட்சியைப் பிரதிநிதித்துவப் படுத்தும் திருவாளர் பா. அரியநேந்திரனே தமிழ் மக்கள் பொதுச்சபை சார்பாக, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கப்படுகின்றார். 

தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் களமிறக்கப் படுவதால், தென்னிலங்கையின் மும்முனைப் போட்டியாளர்களின் வாக்கு வங்கிகளில் பாரிய மாற்றங்கள் ஏற்படலாம். 

இலங்கையில் வடக்கு, கிழக்கு, மலைநாடு, தலைநகர் என்ற நான்கு பிரதேசங்களில் தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்றனர். இவர்கள் ஒருவருக்கொருவர் வித்தியாசமான சிந்தனைப் போக்கு உடையோராகவும் உள்ளனர். தலைநகரத்து வர்த்தக சமூகம் சிந்திப்பதற்கும் மற்ற மூன்று பிரதேசத்தவர்களின் சிந்தனைப் போக்குக்கும் நிறையவே வேறுபாடு காணப்படுவதை எவரும் நன்கு புரிந்து கொள்வர்.
 
தமிழ் மக்கள் பொதுச்சபையானது, இவ்வாறு ஒன்றுக்கொன்று முரண்பட்ட சிந்தனைப் போக்குக் கொண்ட குறித்த நான்கு பிரதேசத்துத் தமிழ் மக்களையும் ஒன்றிணைப்பதில் வெற்றி காண்பார்களேயானால், களமிறக்கப்படும் தமிழ் வேட்பாளர் ஜனாதிபதியாகும் அளவுக்கு இல்லாவிட்டாலும் கூட, கணிசமான தொகை வாக்குகளையாவது பெறலாம் என்பதில் ஐயமில்லை!

தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் களமிறக்கப் படுவற்கு முன்னர் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் வாக்குகள் ரணில், சஜித், அநுர ஆகியோருக்கும் பிரிந்துபோகவிருந்தது.  இந்நிலையில், இது  மும்முனைப் போட்டியாளர்களின் வாக்கு வங்கிகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை!

செம்மைத்துளியான்




 



Post a Comment

Previous Post Next Post