25 ஆண்டுகளில் 250 கோடி பேருக்கு காது கேளாமல் போகக்கூடும் - எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்

25 ஆண்டுகளில் 250 கோடி பேருக்கு காது கேளாமல் போகக்கூடும் - எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்


உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று, 2050-ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் 250 கோடி நபர்கள் ஏதோ ஒரு வகையில் கேட்கும் திறனில் பாதிப்பைச் சந்திப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

2050-ஆம் ஆண்டில் 10-இல் ஒரு நபருக்கு கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளது உலக சுகாதார நிறுவனம்.

தற்போதைய சூழலில் உலக மக்கள் தொகையில் 5% நபர்களுக்கு, அதாவது 43 கோடி மக்கள் கேட்கும் திறனில் பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர். இதில் 3.4 கோடி குழந்தைகளும் அடங்குவார்கள்.

இந்த பிரச்னைகளால் பாதிக்கப்படும் நபர்களில் 80% பேர் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வசித்து வருகின்றனர்.

ஒருவருக்கும் கேட்கும் திறனில் பிரச்னை இருப்பதை எப்படி கண்டறிவது? யாருக்கெல்லாம் அதிக பாதிப்புகள் இருக்கும்? கேட்கும் திறன் குறைவது, காது முழுமையாக கேளாமல் போவதற்கான காரணங்கள் என்ன? அதனை எப்படி சரி செய்வது? விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.

கேட்கும் திறனில் குறை உள்ளவர்கள் யார்?

பொதுவாக காது கேளாமை பிரச்னை ஒரு காது அல்லது இரண்டு காதுகளிலும் ஏற்படலாம். சில நேரங்களில் கேட்கும் திறன் குறைபாடு மிகவும் குறைவாக இருக்கலாம் அல்லது அது தீவிரமாகவும் இருக்கலாம்.

கேட்கும் திறனில் பிரச்னை உள்ளவர்கள் மற்றவர்களுடன் உரையாடுவதில் பெரிய அளவில் பிரச்னை இருக்காது. கருவிகள் மற்றும் இதர தொழில்நுட்ப உதவிகளுடன் அவர்கள் மற்றவர்களுடன் உரையாடவும், அவர்கள் உரையாடுவதைக் கேட்கவும் இயலும்.

ஆனால், காது கேட்கும் திறனை முழுமையாக இழந்தவர்களால் மற்றவர்கள் பேசுவதைக் கேட்க இயலாது. அவர்கள் மற்றவர்களுடன் உரையாடுவதற்கு அதிகமாக சைகை மொழியை பயன்படுத்துகின்றனர்.

யார் ஒருவரால் 20 டெசிபல் என்ற அளவில் எழுப்பப்படும் ஒலியைக் கேட்பதில் பிரச்னை இருக்கிறதோ அவர்களின் கேட்கும் திறன் குறைந்து வருகிறது என்று பொருள்.

இது, மரபு ரீதியாக இருக்கலாம். இளம் வயதில் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட ஆரோக்கிய பிரச்னைகள் காரணமாகவும் கேட்கும் திறன் குறையலாம். சத்தமான சூழலில் வாழ்வதும் கூட இந்த குறைபாடுகளுக்கு வழி வகுக்கும் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை.

கேட்கும் திறனில் பிரச்னை எதனால் ஏற்படுகிறது?

சிலருக்கு மரபு ரீதியாகவே பிரச்னைகள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் குழந்தைகள் பிறக்கும் போது ஏற்படும் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் ஹைபர்பிலிரூபினேமியா எனப்படும் மஞ்சள் காமாலை நோய்த் தொற்று போன்றவற்றாலும் சிறு வயதிலேயே காது முழுமையாகக் கேட்காமல் போவது மற்றும் கேட்கும் திறனில் பிரச்னைகள் ஏற்படுவது போன்றவை நிகழும் என்று கூறுகிறது உலக சுகாதார நிறுவனம்.

காதுகளில் நோய் தொற்று ஏற்படுதல், காதுகளில் நீர் கோர்த்தல் போன்றவையும் குழந்தைப் பருவத்தில் காது கேளாமையைத் தூண்டுகிறது. புகைப்பிடித்தல், நாள்பட்ட நோய்கள் போன்றவை காரணமாகவும் காது கேளாமை ஏற்படுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

கேட்கும் திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு எவ்வாறு உதவ இயலும்?

உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின் படி தற்போது, 4.3 கோடி குழந்தைகள் கேட்டல் திறன் குறைபாட்டால் அவதியுற்று வருகின்றனர். ஆரம்ப காலத்திலேயே அதனைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகள் வழங்கினால், அவர்களது இயல்பு வாழ்க்கையில் பெரிய பாதிப்புகள் இருக்காது என்று தெரிவிக்கின்றனர் நிபுணர்கள்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய இயன்முறை மருத்துவரான சனம் நாயர், "எவ்வளவு விரைவாக குழந்தைகளுக்கு காது கேளும் திறனில் பிரச்னை இருக்கிறது என்று பெற்றோர்கள் அறிந்து கொள்கிறார்களோ, அவ்வளவு விரைவில் குழந்தைகளுக்கு மாற்று முறையில் பேச, கல்வி கற்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலும். இதனால் அவர்கள் தனித்து இருப்பதாக உணரமாட்டார்கள்," என்று தெரிவித்தார்.

இயன்முறை மருத்துவரான (Physiotherapist) சனம், 46 வருடங்களாக மாற்றுத்திறனாளிகளின் நலன்களுக்காக செயல்பட்டு வரும் சென்னையை தலைமையகமாக கொண்ட ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆஃப் தமிழ்நாடு (Spastic Society of Tamil Nadu) என்ற அரசு சாரா நிறுவனத்தின் பிராந்திய ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார்.

பார்வை-செவி திறன் குறைபாடால் அவதிப்படும் குழந்தைகளுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்கி வரும் பிரிவில் பணியாற்றி வருகிறார்.

"கேட்கும் திறன் குறைபாட்டால் பாதிக்கப்படும் குழந்தைகள் தங்களைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகள் குறித்து அறிந்து கொள்வதிலும் கற்றுக் கொள்வதிலும் சிரமத்தைச் சந்திப்பார்கள். கற்றல் மட்டுமின்றி, வெவ்வேறு இடங்களுக்குச் செல்வது, மற்றவர்களுடன் உரையாடுவது போன்றவற்றிலும் அவர்களுக்குச் சிரமம் ஏற்படும். இதனை விரைவில் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கும் பட்சத்தில் சமூகத்தில் மற்ற நபர்களை போல அவர்களும் செயல்பட முடியும்," என்று கூறுகிறார்.

குழந்தைகளின் ஆரம்ப கால மூளை வளர்ச்சிப் பருவமான 1 முதல் 3 வயதுக்குள் இந்தக் குறைபாட்டினைக் கண்டறியும் பட்சத்தில் அவர்களுக்குத் தேவையான வகையில் அவர்களது வீடு, பள்ளிகளில் மாற்றங்கள் கொண்டு வர இயலும். இந்த மாற்றத்திற்கு பெற்றோர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தயாராகும் வகையில் அவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்குவதும் அவசியம் என்று கூறுகிறார் சனம்.

"சிறப்புக் கல்வியோடு மட்டுமின்றி, ஆக்குபேஷனல் தெரபி, பிசியோதெரபி போன்றவற்றோடு பேச்சுக்கான சிகிச்சை ஆகியவற்றைக் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.

"சிறந்த அறிவாற்றல் திறன் கொண்ட குழந்தைகளால் கற்றலில் இருக்கும் தடைகளைக் களைந்து படிக்க இயலும். பிறகு அவர்கள் பொதுப்பள்ளியில் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து படிக்கச் செல்வார்கள். அவர்களது இயல்பு வாழ்க்கையில் எந்தச் சிரமும் இருக்காது," என்றும் கூறுகிறார் சனம்.

இளமையில் செவித்திறன் குறைபாட்டை தவிர்ப்பது எப்படி?

குழந்தை வளர்ப்பில் இருந்தே இதற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். அதிக சத்தமான சூழலுக்கு அவர்களைப் பழக்கப்படுத்தக் கூடாது என்று கூறுகிறார் சனம்.

60% கேட்டல் குறைபாடுகளை மனிதர்கள் தங்களின் அன்றாட செயல்பாடுகளின் மூலம் தவிர்க்க இயலும் என்று கூறுகிறது உலக சுகாதார நிறுவனம். பொதுச் சுகாதார நடவடிக்கைகள் இதில் முக்கியப் பங்காற்றுகின்றன என்றும் கூறுகிறது உலக சுகாதார நிறுவனம்.

குழந்தைகளுக்கு டி.வி போன்றவற்றை அதிகமாகப் பழக்கப்படுத்தக் கூடாது என்கிறார் சனம். மேலும் வீட்டில் இருக்கும் நபர்கள் சத்தமாகப் பேசும் பழக்கத்தைக் கைவிட வேண்டும், என்கிறார்.

ஹெட்போன்கள் போன்றவற்றை அவர்களுக்குக் கொடுத்துப் பழக்குவதை நிறுத்த வேண்டும். மக்கள் அதிகமாகப் புழங்கும் பகுதிகள், வெடிச் சத்தங்கள், கோவில் திருவிழாக்கள் போன்றவற்றைத் தவிர்ப்பது அவர்களுக்கு வெகுகாலம் பயனளிக்கும் என்றும் தெரிவிக்கிறார் சனம்.

முறையாக கண்டறியப்படாத குறைபாட்டால் ஏற்படும் தாக்கங்கள் என்ன?
கேட்டல் திறன் குறைவாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் முறையாக பேசுவதிலும், தகவல் பரிமாற்றத்திலும் தடுமாறுவார்கள். அறிவாற்றல் வளர்ச்சியில் தடை ஏற்படும். மற்றவர்களிடம் இருந்து விலகி, தனிமையிலேயே இருப்பார்கள்.

வளர்ந்து வரும் நாடுகளில் கேட்கும் திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு முறையான கல்வி கிடைப்பதில்லை. அவர்கள் பெரியவர்களாக வளர்ந்த பிறகு அவர்களைப் பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. அதையும் மீறி பணியில் அமர்த்தப்படும் பட்சத்தில் அவர்களுக்குக் குறைவான ஊதியமே வழங்கப்படும் என்று குறிப்பிடுகிறது உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை.

"கற்றல் திறன் இருக்கும் குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்கின்றனர். மேற்கொண்டு கல்லூரிகளுக்குச் செல்கின்றனர். ஆனால் அனைத்து குழந்தைகளுக்கும் கற்றல் திறன் சிறப்பாக இருக்கும் என்று கூற இயலாது. அவர்களுக்கு முறையாக தொழில்சார் பயிற்சிகள் வழங்கப்படும். இந்த மையத்தில் இந்த பயிற்சிகளில் ஈடுபட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் சென்னையில் உள்ள பிரபல உணவகத்தில் சமைத்தல், உணவு பரிமாறல் போன்ற பணிகளில் மற்றவர்களுக்கு நிகராக பணியாற்றி வருகின்றனர்," என்று கூறுகிறார் சனம்.

ஆரம்பத்திலேயே குறையை கண்டறியும் போது தான் இத்தகைய மாற்றத்திற்கு வழி பிறக்கிறது, என்றும் அவர் தெரிவித்தார்.

bbc

 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post