இஸ்ரேலுடன் மோதும் ஹெஸ்பொலாவிடம் எத்தனை வீரர்கள், என்னென்ன ஆயுதங்கள் உள்ளன?

இஸ்ரேலுடன் மோதும் ஹெஸ்பொலாவிடம் எத்தனை வீரர்கள், என்னென்ன ஆயுதங்கள் உள்ளன?


லெபனானில் செப்டம்பர் 17 அன்று ஹெஸ்புலா அமைப்பினர் பயன்படுத்திய கையடக்க பேஜர் சாதனங்கள் வெடித்ததில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் என்றும், 3,000 பேர் காயமடைந்தனர் என்றும் அந்நாட்டின் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.

ஹெஸ்பொல்லா இந்த தாக்குதலுக்கு வெளிப்படையாக இஸ்ரேல் மீது குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இஸ்ரேலிய ராணுவம் இதுபற்றி கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டது.

இஸ்ரேலுக்கும் ஹெஸ்புலாவுக்கும் இடையிலான எல்லை தாண்டிய மோதல், கடந்த 11 மாதங்களில் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த மோதல் காஸாவில் நடந்துவரும் போரால் தூண்டப்பட்டது.

உள்நாட்டில் இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான குடிமக்களை லெபனானுடனான இஸ்ரேலின் வடக்கு எல்லைக்கு பாதுகாப்பாக திருப்பி அனுப்ப வேண்டும் என்பது தான் காஸா போரின் புதிய நோக்கம் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை கூறியது. இதையடுத்து சில மணி நேரங்களுக்கு பிறகு இந்த வெடிப்புகள் நிகழ்ந்தன.

ஹெஸ்பொலா என்றால் என்ன? எங்கு செயல்படுகிறது?

ஹெஸ்பொலா அரசியல் செல்வாக்கு மிக்க ஒரு ஷியா முஸ்லீம் அமைப்பு. இது லெபனானில் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதப்படையைக் கட்டுப்படுத்துகிறது.

இந்த அமைப்பு 1980-களின் முற்பகுதியில், இஸ்ரேலை எதிர்ப்பதற்காகப் பிராந்தியத்தின் மிகவும் மேலாதிக்க ஷியா சக்தியான இரானால் நிறுவப்பட்டது. அந்தச் சமயத்தில், லெபனானின் உள்நாட்டுப் போரின் போது இஸ்ரேலின் படைகள் தெற்கு லெபனானை ஆக்கிரமித்திருந்தன.

ஹெஸ்பொலா அமைப்பு 1992-ஆம் ஆண்டு முதல், தேசியத் தேர்தல்களில் பங்கேற்று ஒரு முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுத்தது. அதன் ஆயுதப் பிரிவு, லெபனானில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் மீது கொடிய தாக்குதல்களை நடத்தியது.

2000-ஆம் ஆண்டில் லெபனானில் இருந்து இஸ்ரேலை வெளியேற்றியதற்காக ஹெஸ்பொலா பாராட்டுகளைப் பெற்றது.

அப்போதிருந்து, தெற்கு லெபனானில் ஹெஸ்பொலா ஆயிரக்கணக்கான படையினருடன் ஒரு பெரிய ஏவுகணை உள்பட ஆயுதக் கிடங்கை பராமரித்து வருகிறது.

இஸ்ரேலால் முழுமையாக அழிக்கமுடியாத அமைப்பு

சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளில் இஸ்ரேலின் இருப்பை ஹெஸ்புலா தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

மேற்கத்திய நாடுகள், இஸ்ரேல், வளைகுடா அரபு நாடுகள், மற்றும் அரபு லீக் ஆகியவற்றால் ஹெஸ்பொலா, பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டுள்ளது.

2006-ஆம் ஆண்டில், ஹெஸ்பொலா எல்லை தாண்டிய தாக்குதல் மேற்கொண்டதை அடுத்து, ஹெஸ்பொலா மற்றும் இஸ்ரேலுக்கு இடையே ஒரு போர் சூழல் ஏற்பட்டது. அதன் பின்னர், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் படையெடுத்துச் சென்றது. ஹெஸ்பொலாவிடம் இருந்து வரும் அச்சுறுத்தலை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

இருப்பினும், அந்த அமைப்பு முழுமையாக அழிக்கப்படவில்லை. அது மீண்டும் உயிர் பெற்றது. அதன் படையினரின் எண்ணிக்கையை அதிகரித்து கொண்டு புதிய, மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களுடன் பரிணமித்தது.


ஹெஸ்பொலாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா யார்?

ஷேக் ஹசன் நஸ்ரல்லா ஒரு ஷியா மதகுரு. அவர் 1992 முதல் ஹெஸ்பொலாவை வழிநடத்தி வருகிறார். அதை ஒரு அரசியல் மற்றும் ராணுவ சக்தியாக மாற்றுவதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார். அவர் இரான் மற்றும் அதன் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளார்.

இஸ்ரேலால் படுகொலை செய்யப்படலாம் என்ற அச்சத்தில் நஸ்ரல்லா பல ஆண்டுகளாக பொது வெளியில் தோன்றுவதில்லை.

இருப்பினும், அவர் ஹெஸ்பொலா அமைப்பின் மதிப்புக்குரிய தலைவராக இருக்கிறார். ஒவ்வொரு வாரமும் தொலைக்காட்சி உரைகளை வழங்குகிறார்.

ஹெஸ்பொலாவிடம் எத்தனை வீரர்கள் உள்ளனர்?

ஹெஸ்பொலா உலகில் அதிக ஆயுதம் ஏந்திய, அரசு சாரா ராணுவப் படைகளில் ஒன்று. இது இரானிடமிருந்து நிதியுதவி மற்றும் ஆயுதங்களைப் பெறுகிறது.

இந்த அமைப்பில் ஒரு லட்சம் வீரர்கள் இருப்பதாக ஹசன் நஸ்ரல்லா கூறியிருக்கிறார். இருப்பினும் சுயாதீன மதிப்பீடுகள் 20,000 வீரர்கள் முதல் 50,000 வீரர்கள் வரை இருக்கலாம் என்று குறிப்பிடுகின்றன.

அவர்களில் பலர் நன்கு பயிற்சி பெற்றவர்கள். போரில் அனுபவம் உள்ளவர்கள். சிரியாவின் உள்நாட்டுப் போரில் பங்குபெற்றவர்கள்.

லெபனான் மற்றும் முழு பிராந்தியத்திற்கான அரணாகச் செயல்படுவதாக ஹெஸ்பொலா தன்னை முன்னிறுத்திக்கொள்கிறது.

ஹெஸ்பொலாவிடம் என்னென்ன ஆயுதங்கள் உள்ளன?

மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான சிந்தனைக் குழு (Center for Strategic and International Studies) கூற்றுபடி, ஹெஸ்பொலாவிடம் 1.2 லட்சம் முதல் 2 லட்சம் ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அதன் ஆயுதக் கிடங்கில் பெரும்பகுதி தரையில் இருந்து மற்றொரு தரை இலக்கை தாக்கும் சிறிய ரக ராக்கெட்டுகளைக் கொண்டுள்ளது. விமான எதிர்ப்பு, கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் இஸ்ரேலின் உள் பகுதி வரையிலும் சென்று தாக்கும் திறன் கொண்ட வழிகாட்டப்பட்ட ஏவுகணைகளைக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

காஸாவில் ஹமாஸ் வைத்திருக்கும் ஆயுதங்களை விட ஹெஸ்பொலா அதிநவீன ஆயுதங்களை அதன் வசம் கொண்டுள்ளது.

ஹெஸ்பொலா - இஸ்ரேல் போர் சாத்தியமா?

இஸ்ரேல் மீதான ஹமாஸின் முன்னறிவிப்பில்லா தாக்குதல் நிகழ்ந்து ஒரு நாள் கழித்து, அக்டோபர் 8 அன்று, பாலத்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேலிய ராணுவத் தளங்களை நோக்கி ஹெஸ்பொலா துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதனைத் தொடர்ந்து மோதல்கள் தீவிரமடைந்தன.

அப்போதிருந்து, வடக்கு இஸ்ரேல் மற்றும் கோலான் குன்றுகளில் இஸ்ரேலிய ராணுவத் தளங்கள் மீது ஹெஸ்பொலா 8,000-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவியது, கவச வாகனங்கள் மீது டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை (anti-tank missiles) வீசியது, மற்றும் வெடிக்கும் ஆளில்லா விமானங்கள் மூலம் ராணுவ இலக்குகளைத் தாக்கியது.

இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) லெபனானில் உள்ள ஹெஸ்பொலா நிலைகளுக்கு எதிராக விமானத் தாக்குதல்கள் மற்றும் டாங்கிகள் மற்றும் பீரங்கித் தாக்குதல்களைப் பயன்படுத்தி பதிலடி கொடுத்தன.

2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் குறைந்தது 589 பேர் கொல்லப்பட்டதாக லெபனானின் சுகாதார அமைச்சகம் கூறுகிறது. அவர்களில் பெரும்பாலோர் ஹெஸ்பொலா போராளிகள், ஆனால் குறைந்தது 137 பேர் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில், தாக்குதல்களின் நேரடி விளைவாக குறைந்தது 25 பொதுமக்கள் மற்றும் 21 வீரர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். எல்லையின் இருபுறமும் கிட்டத்தட்ட 2 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

மோதல்கள் இருந்தபோதிலும், இதுவரை இரு தரப்பும் முழு அளவிலான போரில் ஈடுபட, எல்லையைக் கடக்காமல் பகைமையை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டிருந்ததாக தாக்குதல்களை கண்காணித்து வருபவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் சமீபத்தில் நிகழ்ந்துள்ள கொடிய பேஜர் தாக்குதல் சம்பவம், மோதல்கள் கட்டுப்பாட்டை மீறிச் செல்ல கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜூலை 27 அன்று இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன் குன்றுகளில் ராக்கெட் தாக்குதலில் 12 குழந்தைகள் கொல்லப்பட்டதையடுத்து போர் மூளும் அச்சங்கள் அதிகரித்தன. ஹெஸ்பொலா இந்தத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் கூறியது, ஆனால் இந்தக் குற்றச்சாட்டை ஹெஸ்பொலா மறுத்தது.

ஜூலை 30 அன்று, பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதியில் வான்வழித் தாக்குதலில் மூத்த ஹெஸ்பொலா ராணுவத் தளபதி ஃபுவாட் ஷுக்ரைக் கொன்றதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவித்தது.

அடுத்த நாள், ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே இரானின் தலைநகரான தெஹ்ரானில் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் இஸ்ரேல் பொறுப்பேற்கவோ மறுக்கவோ இல்லை. இதனால் ஹெஸ்பொலா மற்றும் இரான் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுப்பதாக உறுதியேற்றனர்.

காஸாவில் போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதன் மூலம் பதட்டங்களைத் தணிக்க முடியும் என அமெரிக்கா நம்புகிறது, மேலும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் மீது அழுத்தம் கொடுக்கிறது.

காஸாவில் சண்டை முடிவுக்கு வந்தவுடன் தான் போர் நிறுத்தப்படும் என்று ஹெஸ்பொலா கூறியுள்ளது.

ஹெஸ்பொலா மீது நடத்தப்பட்ட பேஜர்கள் தாக்குதல்களுக்கு இஸ்ரேலை ‘முழு பொறுப்பு’ என்று கூறியது. மேலும் “இஸ்ரேல் இந்த பாவச்செயலுக்கு நியாயமான தண்டனையை நிச்சயமாக பெறும்," என்று ஹெஸ்பொலா கூறியது.

bbctamil



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post