கருமலையூற்று மக்களை மீளக் குடியேற்றுவதும், பள்ளிவாயிலை கட்டியெழுப்புதலும்!

கருமலையூற்று மக்களை மீளக் குடியேற்றுவதும், பள்ளிவாயிலை கட்டியெழுப்புதலும்!


கருமலையூற்று,  திருகோணமலைப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வெள்ளைமணல் கிராம உத்தியோகத்தர் பகுதியில் அமைந்துள்ளது.

இயற்கைத் துறை முகத்தை அண்டிய பகுதியில் இருக்கும் திருக்கைக்குடா  ஒரு கடற்கரைப் பிரதேசமாகும். இது  மீன்பிடிக் கிராமமாகவும், ஒரு காலத்தில் மீன் வர்த்தகத்திற்குப் பேர்போன இடமாகவும்  இருந்து வந்துள்ளது.

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் 

இப்பிரதேசத்திலிருந்த பலர் கிண்ணியா, கந்தளாய், நாச்சிக்குடா, வேப்பங்குடா, மகிழூற்று, வெள்ளைமணல், நீரோட்டுமுனை, சின்னம்பிள்ளைச்சேனை, முள்ளிப்பொத்தானை  உட்பட கருமலையூற்றுப் பிரதேசத்திலும் குடியேறியுள்ளனர். கருமலையூற்று சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட பாரிய பிரதேசமாகும்.

'மஸ்ஜிதுல் ராபியா’பள்ளிவாயில்

முஸ்லிம்கள் செறிந்து வாழும் இடங்களிலெல்லாம் தொழுகைக்காக ஒன்றுகூடும் இடமாக பள்ளிவாயில்கள் இருப்பது முக்கியமானதொரு அம்சமாகும். இஸ்லாமியர்களுக்கு, சமூக மற்றும் சமய முக்கியத்துவமுள்ள இடங்களாகவும் பள்ளிவாயில்கள் விளங்குவது மட்டுமன்றி, அவற்றின் வரலாற்று மற்றும் கட்டிடக்கலை அம்சங்களுக்காக அவை உலக அளவில்  சிறப்புப் பெறுகின்றன.
1827-1836ம் ஆண்டு காலப்பகுதியில் கட்டப்பட்டு, கம்பீரமாய் நின்றிருந்த. 'மஸ்ஜிதுல் ராபியா’ என அழைக்கப்பட்டுவந்த,  40 அடி அகலமும்  52 அடி நீளமும் கொண்டு 2080 சதுர அடி பரப்பிலிருந்த கருமலையூற்றுப் ஜும்ஆப் பள்ளிவாயிலைச் சுற்றி அக்காலை  43 குடியிருப்புக்கள் இருந்துள்ளதோடு, முழுக் கிராமத்திலும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வந்துள்ளனர். 

இந்தப் பகு­தி­க் காடுகளில் இயற்கையாகவே  

விளைகின்ற இலந்தைப் பழங்கள், விளாம் பழங்கள், நாவற்பழங்கள் ஆகியவற்றைப் பறித்து விற்றும், மீன்பிடி வியாபாரம் செய்தும் இங்கு வாழ்ந்துவந்த குடும்பங்கள் தமது ஜீவபனோபாயத்தைத் தேடிக்கொண்டனர்.

1923ம் ஆண்டு 139 பேர்ச்சஸ் பள்ளிவாசலுக்காகவும், 20 பேர்ச்சஸ் காணி சியாரம் ஒன்றிற்காகவும்  'கசெட்' பண்ணப்பட்டு, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இதற்கு 'விக்டோரியா' எனும் உறுதி வழங்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிவாசல் இருப்பதை தொல்பொருள் திணைக்களம் உறுதிசெய்துள்ளதாகவும் பள்ளிவாசல் நிர்வாகம் குறிப்பிடுகின்றது. 

அதனால், கிழக்கு மாகாணத்தில் நீண்டகால வரலாற்றைக் கொண்ட கருமலையூற்றுக் கிராமமும், பள்ளிவாயிலும் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்து வந்துள்ளன.

Dead man’s Cave

பிரித்தானியரின் வரைபடத்தில் “Dead man’s Cave” என்று குறிக்கப்பட்டுள்ள   இந்தக் கருமலையூற்று மலைத்தொடரைச் சுற்றி இறைநேசர்களின் அடக்கஸ்தலங்கள் நான்கும் இருந்துள்ளன. 

கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகள் பழைமையான  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கருமலையூற்று ஜும்ஆப் பள்ளிவாசல்  2014ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம்  
15ம் திகதி உடைத்து, சிதைத்து, தரைமட்டமாக்கப்பட்டது. இதுபற்றி சீனன்குடா பொலிஸ் நிலையத்தில், 2014 ஓகஸ்ட் 16ம் திகதியன்று முறைப்பாடொன்றும் பதிவு செய்யப் பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

நீண்டகாலமாக இயல்பு வாழ்க்கை இழந்த மக்கள்

யுத்தம் மூர்க்கமடைந்திருந்த கால கட்டத்தில் முதலில் இங்கு வாழ்ந்த மக்களின் நடமாடும் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் இவர்களின் வாழ்விடங்களைப் படையினர் கைப்பற்றிக் கொண்டனர். பின்னர், பள்ளிவாயிலுக்குச் சென்று வணக்க வழிபாடுகளில் ஈடுபட முடியாதவாறு தடுக்கப்பட்டதுடன், அந்தப் பள்ளிவாயிலையும் இருந்த இடம் இல்லாமல் செய்து விட்டனர்.

இதனால் இங்கு வாழ்ந்த மக்கள் தமது இயல்பு வாழ்க்கையை நீண்டகாலமாகவே இழந்து அங்குமிங்குமாகச் சிதறி வாழ்ந்து வருகின்றனர். 

1998ம் ஆண்டு முதல் இப்பகுதி கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டபோது, படையினரின் அனுமதியில்லாமல் கடற்தொழிலுக்குச் செல்ல முடியாத நிலைமை வந்தது. 2003ம் ஆண்டு கடற்படையினர் கொட்டியாரக்­ குடாக்கரையோரம் முழுவதையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். 2004ல் சுனாமி கடற்பேரலைத் தாக்கம் ஏற்பட்டபோது,  பல குடும்பங்கள் அங்கிருந்த மைதானத்தில் முகாம் அமைத்துத் தங்கினர்.

2009ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்ததும் கடற்படையினர் இப்பகுதியிலிருந்து  விலகியதும், இராணுவத்தினர் தமது கவச வாகனங்களைக் கொண்டு வந்து பள்ளிவாயில்  நிலம் உட்பட முழு இடத்தையும் கைப்பற்றிக் கொண்டனர்.

வற்றாத நந்நீரூற்று

கடற் கரையிலிருந்து சுமார் 5 அல்லது 6 மீற்றர் தூரத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 150 அடி உயரத்தில் அமைந்திருக்கும் கருமலையூற்றுப் பள்ளிவாசல் நிலத்தடியிலிருந்து வற்றாத நந்நீரூற்று பீறிட்டு வருகின்றது.
மக்கள் அங்கு குடி­யி­ருந்தபோது இந்த நீரூற்­றில்
இருந்துதான் தங்களுக்குத் தேவையான நீரைப் பெற்றுக் கொண்டனர். இந்த அதி­சய நீரூற்றி­ல் இருந்துதான் இப்பொழுதும் சூழவுள்ள படை முகாம்களுக்கும் குடிநீர் விநியோகிக்கப்படுகின்றது.

பள்ளிவாசலுக்கான அம்சமில்லாத அறை

40 அடி அகலமும்  52 அடி நீளமும் கொண்டு 2080 சதுர அடி பரப்பில்;  இருந்த பள்ளிவாசலை இடித்தழித்த இராணுவம் பழைய பள்ளிவாசலின் மையப்பகுதியில், 11.5 அடி அகலமும் 12 அடி நீளமும் 

கொண்டு 138 சதுர அடிப் பரப்பில் அதாவது முன்பிருந்த பள்ளிவாசலின் பரப்பளவில்  15 ல் ஒரு பங்கு, தாம் புனரமைத்ததாகக் கூறி, பள்ளிவாசலுக்குரிய எத்தகைய அம்சத்தையும் கொண்டிராத ஒரு அறையை அமைத்து வைத்திருப்பதை இந்த இடத்துக்குப் போய்ப் பார்த்தால் எவராலும் நன்கு புரிந்துகொள்ள முடியும். 

2009ம் ஆண்­டி­லி­ருந்து அதி­யுயர் பாது­காப்பு வலயம் என்ற கட்டுப்பாட்டுப் பகு­திக்குள் கொண்­டு­வ­ரப்­பட்டு முஸ்­லிம்கள் எவரும் தமது வணக்க வழி­பா­டு­களை மேற்­கொள்ள முடியாதவாறு தடை செய்யப்பட்டிருந்த கருமலையூற்று ஜும்ஆப் பள்ளிவாயிலின் திடலில்  2014. 12.19 அன்று ஜும்ஆத் தொழுகை இடம் பெற்றுள்ளது!

கிண்ணியா ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எம். ஹிதாயதுல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற ஜும்ஆ தொழுகையில் கருமலையூற்று ஜும்ஆப்பள்ளி நிருவாகத்தில் அப்போதிருந்த நிர்வாகத்தினரும், உறுப்பினர்களும் சுற்றுச் சூழலில் இருந்து வந்த மற்றும் பலரும்  கலந்து கொண்டுள்ளனர்.

சமுதாயப் பணி

சுமார் இரண்டு நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த, தகர்க்கப்பட்ட பள்ளிவாசலை மீண்டும்  நிர்மாணித்துக் கொள்வதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், முஸ்லிம் சமய 

விவகார அமைச்சும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது காலத்தின் தேவையாகும். இதனை மறுபடி புணர்நிர்மானம் செய்து, கட்டியெழுப்புவது எமது சமுதாயத்தின் முக்கியமானதொரு பணியாகும்.
கருமலையூற்றிலுள்ள பள்ளிவாலுக்குரிய முழுக் காணியும் மீளப்பெற்றுக் கொள்ளப்படுவதோடு, இடித்தழிக்கப்பட்ட தொன்மையான பள்ளிவாசலைப் பிரதிபலிக்கக் கூடியவாறு புதிதாக பள்ளிவாயில் ஒன்றும் இங்கு அமைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் பள்ளிவாசலுக்கு அண்டி வாழ்ந்த முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணியை உரியவர்களிடம் ஒப்படைத்து அவர்களை மீளக்குடியேறுதற்கு வகை செய்தல் வேண்டும். அப்போதுதான்  ஐவேளை தொழுகைக்காக மக்கள் வந்துபோவதன் மூலம் பள்ளிவாயிலின் தாத்பரியம் பாதுகாக்கப்படுவதற்கு வாய்ப்பேற்படும்.

அவ்வாறில்லாமல் பள்ளிவாயிலை மட்டும் அழகாக  அமைப்பதனால் பள்ளிவாயில் அமைக்கப் பட்டதற்கான நோக்கம் நிறைவேறிவிடாது. சுற்றுப்புறத்தில் முஸ்லிம்கள் குடியமர்த்தப்படாது பள்ளிவாயில் மட்டும் அமைக்கப்படுமாக இருந்தால் அது ஒரு நினைவுச் சின்னமாகவே இருக்கும்.

எனவே கருமலையூற்றுக் கிராமத்து முஸ்லிம்கள்  மீளக் குடியேற்றப்படுவதுடன், பள்ளிவாயிலைக் கட்டியெழுப்புவதுமே  பள்ளிவாயிலின் இருப்பை 

உறுதிப்படுத்துவதாக அமையும்!

விவரங்கள்: 
மூதூர் முறாசில், ஏ.எச்.ஏ.ஹுஸைன். 
படங்கள்: இணையம்


செம்மைத்துளியான் 



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post