அரசின் அதிரடி மாற்றங்கள்-14

அரசின் அதிரடி மாற்றங்கள்-14


முத்திரைகள் ரத்து!

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்காக வருடத்திற்கு 10,000 ரூபா முத்திரைகள் வழங்கப்படுவதுடன் இவற்றிற்காக 500,000 ரூபா செலவிடப்படுவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. வழங்கப்பட்டுள்ள அனைத்து முத்திரைகளையும் பாராளுமன்ற தபால் அலுவலகத்திடம் ஒப்படைக்குமாறு தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திட்டங்கள் இரத்து

கடந்த அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட பல திட்டங்களை இரத்து செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

காத்தான்குடியில் களமிறங்கும் அஷ்ஷெக் பிர்தௌஸ்!

2024 பாராளுமன்ற தேர்தலில், தேசிய மக்கள் சக்தி சார்பில் மட்டக்களப்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுவில் கையெழுத்துடும் நிகழ்வு 2024.10.8 அன்று மட்டக்களப்பு Bridge View Hotelல் இடம் பெற்றபோது, காத்தான்குடியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அஷ்ஷேக் பிர்தௌஸ் (நளீமி) தனது வேட்புமனுவை உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டு சமர்ப்பித்தார். 

ஏலத்தில் திறைசேரி முறி!

185,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறிகளை 2024.10. 09 அன்று ஏலத்தில் விடுவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

பிரதமருடன் 20 பேர் வேட்பு மனுத் தாக்கல்!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் NPP சார்பில் போட்டியிடுவதற்காக பிரதமர் ஹரினி உள்ளிட்ட 20 பேர்  வேட்புமனுக்களில் கையொப்பமிட்டனர்!

விருப்பு வாக்குக் கொள்கை மீதான கூற்றுக்களை மறுக்கும் பிமல்!

தேசிய மக்கள் சக்தியின் மூத்த உறுப்பினரான பிமல் ரத்நாயக்க, தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்கள் விருப்பு வாக்குகளைப் பெறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஊடகச் செய்தியை மறுத்துள்ளார்.

கட்சி அத்தகைய கட்டுப்பாட்டை விதிக்கவில்லை என்றும், தமது வேட்பாளர்கள் விருப்பு வாக்குகளுக்காக உள்ளக போட்டியில் ஈடுபடமாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதிலும் தகுதியான வேட்பாளர்களைக் களமிறக்கி முன்மாதிரியான தேர்தல் பிரச்சாரத்தை நடத்துவதில் தேசிய மக்கள் சக்தி கவனம் செலுத்தி வருகின்றது என்றும் அவர் கூறினார்.

கிரியெல்ல இளைப்பாறுகின்றார்!

எதிர்கட்சியின் மூத்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல (வயது 76) தனது 36 ஆண்டுகால பாராளுமன்ற வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

ஐக்கிய ஜனநாயகக் குரல் ரஞ்சன் ராமநாயக்க

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க இன்று கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஐக்கிய ஜனநாயக குரல் என்ற புதிய அரசியல் கட்சியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

மைக் சின்னத்தில் போட்டியிடும் அக்கட்சி, வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக தனது தேர்தல் அறிக்கையை வெளியிடவுள்ளதாகக் கூறுகின்றது.

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் பாராளுமன்ற தேர்தலில் ரஞ்சன் ராமநாயக்க கட்சியில் போட்டியிடவுள்ளதோடு, கட்சியின் தேசிய அமைப்பாளராக அவரே நியமனம் பெற்றுள்ளார். அத்துடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷும் இக்கட்சியில் இடம்பெற்றுள்ளார்.

தென்கொரிய தூதுவர் மியோன் லீயை ஜனாதிபதி சந்தித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் 2024. 10.09 முற்பகல் இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் மியோன் லீயை   (Miyon Lee) ஜனாதிபதி சந்தித்தார்.

இதன்போது அவர் எமது புதிய ஆட்சிக்கு  வாழ்த்து தெரிவித்ததுடன், தென்கொரிய அரசாங்கத்தின் வாழ்த்துச் செய்தியையும் கையளித்தார்.

இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு தென் கொரியாவின் அர்ப்பணிப்பை அவர்   உறுதிப்படுத்தியதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவு குறித்தும்  நினைவுகூரப்பட்டன. இலங்கைக்கு அந்நியச் செலாவணி அனுப்புவதில் தென் கொரியா ஆறாவது இடத்தில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தென் கொரியாவில் உள்ள இலங்கையர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கி, நாட்டுக்கு பணம் அனுப்பும் தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். மேலும், கொரிய சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா செல்வதற்கு  ஈர்ப்புள்ள நாடாக இலங்கையை ஊக்குவிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு பொருளாதார ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் உறுதியளித்த அவர், தென்கொரியாவும் கடந்த காலங்களில் இவ்வாறான பொருளாதார சவால்களை எதிர்கொண்டதாகவும், கொரியா பெற்ற அனுபவத்தை இலங்கையும் பயன்படுத்தி வெற்றிகொள்ள முடியும் எனவும் தெரிவித்தார். கொரியா எக்ஸிம் வங்கியின் முதலீட்டை அபிவிருத்தியின் முக்கிய அங்கமாகக் கருதி இலங்கையின் கிராமப்புற வறுமையை ஒழிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், சுகாதாரப் பாதுகாப்பு, ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்தல் ஆகிய துறைகளில் கொரியாவின் ஆதரவை உறுதி செய்த அவர், தென் கொரியாவில் தொழில்வாய்ப்பை எதிர்பார்க்கும் இலங்கையர்களை சிறந்த முறையில் தயார்படுத்தும் வகையில், கொரிய மொழியை இலங்கையில் விரிவுபடுத்துவதற்கு தென் கொரியாவின் விருப்பத்தை அவர் மேலும் வலியுறுத்தினார்.





 



Post a Comment

Previous Post Next Post