Ticker

6/recent/ticker-posts

ஃபாலோ ஆன் 143க்கு அவுட்.. 10 வருடங்கள்.. வங்கதேசத்தை ஓடவிட்ட தெ.ஆ.. இரட்டை சாதனை வெற்றி


வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்ற அத்தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி அக்டோபர் 29ஆம் தேதி சட்டோகிராம் நகரில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி முதல் இன்னிங்ஸில் வங்கதேசத்தை போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு அடித்து நொறுக்கி 575-6 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக டோனி டீ ஜோர்சி சதமடித்து 177, ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் 106 சதமடித்து அசத்தினார்கள். அதே போல ஏழாவது இடத்தில் களமிறங்கிய வியன் முல்தார் தம்முடைய பங்கிற்கு சதமடித்து 105* ரன்கள் விளாசினார்.

அவர்களுடன் எட்டாவது இடத்தில் களமிறங்கிய சேனுரான் முத்துசாமி 68* ரன்களும் டேவிட் பேட்டிங்கம் 59 ரன்களும் குவித்து அசத்தினார்கள். வங்கதேச அணிக்கு அதிகபட்சமாக டைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்களை எடுத்தார். பின்னர் பேட்டிங் செய்த வங்கதேசம் ஆரம்பம் முதலே தென்னாப்பிரிக்காவின் தரமான பந்து வீச்சில் மோசமாக விளையாடி 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக மோனிமுல் ஹைக் 82 ரன்கள் எடுத்த நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக ககிஸோ ரபாடா 5 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் 416 ரன்கள் முன்னிலை பெற்ற தென்னாப்பிரிக்கா மீண்டும் வங்கதேசத்தை பேட்டிங் செய்யுமாறு ஃபாலோ ஆன் கொடுத்தது. அதை தொடர்ந்து விளையாடிய வங்கதேசம் முன்பை விட மோசமாக பேட்டிங் செய்து வெறும் 143 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக கேப்டன் நஜ்முல் சாண்டோ 36, ஹசன் மஹ்முத் 38* ரன்கள் எடுத்த நிலையில் தென்னாபிரிக்காவுக்கு அதிகபட்சமாக கேசவ் மகாராஜ் 5, சேனுரான் முத்துசாமி 4 விக்கெட்டுகளை எடுத்தனர். அதனால் இன்னிங்ஸ் மற்றும் 273 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்னாபிரிக்கா தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து வரலாற்றுச் சாதனையும் படைத்தது.

இதற்கு முன் கடந்த 2017ஆம் ஆண்டு ப்ளூம்போய்ட்டன் மைதானத்தில் இதே வங்கதேசத்துக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 254 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே தென்னாப்பிரிக்காவின் முந்தைய பெரிய வெற்றியாகும். மேலும் 2014க்குப்பின் ஆசிய கண்டத்தில் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் தென்னாப்பிரிக்கா தொடர்ந்து 5 டெஸ்ட் தொடர்களில் தோற்றது. அதை உடைத்துள்ள தென்னாப்பிரிக்கா தற்போது 10 வருடங்கள் கழித்து ஆசிய கண்டத்தில் ஒரு டெஸ்ட் தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் வென்று மற்றொரு சாதனையும் படைத்துள்ளது.

crictamil




 Ai SONGS

 



Post a Comment

0 Comments