Ticker

6/recent/ticker-posts

15 வருடம் 15 வெற்றி.. அசுரன் ஆஸியை நாக் அவுட் செய்த தெ.ஆ சிங்கப்பெண்கள்.. சரித்திரம் காணாத சாதனை வெற்றி

ஐக்கிய அரபு நாடுகளில் 2024 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. அதில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. இருப்பினும் லீக் சுற்றில் அசத்திய நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிகள் மோதிய முதல் அரையிறுதிப் போட்டி அக்டோபர் 17ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு துபாயில் நடைபெற்றது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா தடுமாற்றமாக விளையாடி 20 ஓவரில் போராடி 134-5 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பெத் மூனி 43, கேப்டன் தஹிலா மெக்ராத் 27, எலிஸ் பெரி 31 ரணகள் எடுத்தனர். தென்னாபிரிக்காவுக்கு அதிகபட்சமாக அயாபாங்கோ காகா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதைத் தொடர்ந்து 135 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு டஸ்மின் பிரிட்ஸ் 15 ரன்களில் லீச்பீல்ட் வேகத்தில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் கேப்டன் லாரா வோல்வர்ட் நங்கூரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த அன்னேக்கே போஸ் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலிய பவுலர்களை பந்தாடினார்.

அந்த வகையில் மிடில் ஓவர்களில் அதிரடியாக விளையாடிய அந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தென்னாபிரிக்காவை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தது. அப்போது கேப்டன் லாரா 42 ரன்களில் லீச்பீல்ட் வேகத்தில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் தொடர்ந்து அட்டகாசமாக விளையாடிய போஸ் 8 பவுண்டரி ஒரு சிக்சருடன் 74* (48) ரன்கள் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார்.

அதனால் 17.2 ஓவரிலேயே 135-2 ரன்கள் எடுத்த தென்னாபிரிக்கா 8 விக்கெட் விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் வாயிலாக மகளிர் டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் முறையாக வெற்றியை பதிவு செய்து தென்னாபிரிக்கா வரலாறு காணாத சாதனை படைத்தது. அதுபோக மகளிர் டி20 உலகக் கோப்பையில் கடைசியாக விளையாடிய 15 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்தது.

ஆனால் இன்று அதை உடைத்துள்ள தென்னாபிரிக்கா இந்த உலகக் கோப்பையிலிருந்து நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை நாக் அவுட் செய்து வீட்டுக்கு அனுப்பியது. கடைசியாக 2009 செமி ஃபைனலில் ஆஸ்திரேலியா தோற்றது. அதன் பின் தொடர்ச்சியாக செமி ஃபைனலில் வென்று ஃபைனலுக்கும் தகுதி பெற்ற ஆஸ்திரேலியா 6 முறை கோப்பையை வென்று மகளிர் கிரிக்கெட்டின் அசுரனாக சாதனை படைத்தது.

ஆனால் அப்படிப்பட்ட ஆஸ்திரேலியா 15 வருடங்கள் கழித்து முதல் முறையாக நாக் அவுட் செய்யப்பட்டுள்ளது. இது போக ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவை 1999, 2000, 2007, 2022, 2023 ஆகிய ஐசிசி உலகக் கோப்பைகளில் ஆஸ்திரேலியா நாக் அவுட் செய்தது. ஆனால் வரலாற்றில் தற்போது முதல் முறையாக ஆஸ்திரேலியாவை நாக் அவுட் செய்து தென் ஆப்பிரிக்கா கொஞ்சம் பழி தீர்த்து அசத்தியுள்ளது.

crictamil



 



Post a Comment

0 Comments