Ticker

6/recent/ticker-posts

ஐசிசி மகளிர் டி20 உ.கோ: 3க்கு 3.. பாகிஸ்தான் கையில் இந்தியாவின் கனவு.. செமி ஃபைனலுக்கான வழி இதோ

ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறும் 2024 மகளிர் டி20 உலகக் கோப்பையில் தங்களுடைய முதல் கோப்பையை வெல்லும் கனவுடன் ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி களமிறங்கியது. ஆனால் முதல் போட்டியிலேயே இந்திய அணி நியூசிலாந்திடம் படுதோல்வியை சந்தித்தது. 2வது போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானிடம் போராடி இந்தியா வெற்றி பெற்றது.

அத்துடன் மூன்றாவது போட்டியில் இலங்கைக்கு எதிராக அபாரமாக விளையாடிய இந்தியா 82 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பெற்று செமி ஃபைனல் செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. அதனால் அக்டோபர் 13ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் வென்றால் செமி ஃபைனல் செல்லலாம் என்ற நிலைக்கு இந்தியா போராடி வந்தது.

இருப்பினும் சார்ஜாவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் இந்தியா 9 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. குறிப்பாக ஆஸ்திரேலியா நிர்ணயித்த 152 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ஷபாலி 20, மந்தனா 6, ஜெமிமா 16 என டாப் ஆர்டர் வீராங்கனைகள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி அழுத்தத்தை உண்டாக்கினர். அதே போல மிடில் ஆர்டரில் தீப்தி சர்மா 29 ரிச்சா கோஸ் 1 ரன்களில் அவுட்டானார்கள். 

அதனால் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 54* (47) ரன்கள் எடுத்து போராடியும் 20 ஓவரில் 142-9 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா தோற்றது. குறிப்பாக கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் பந்தில் ஹர்மன்ப்ரீத் சிங்கிள் எடுத்தார். ஆனால் கடைசி 5 பந்துகளில் பூஜா, அருந்ததி, ஷ்ரேயங்கா, ராதா ஆகிய 4 வீராங்கனைகள் சிங்கிள் எடுத்து அவருக்கு ஸ்ட்ரைக்கை கொடுக்காமல் அவுட்டாகி தோல்விக்கு காரணமானார்கள்.

இந்த சூழ்நிலையில் இந்தியா தங்களுடைய 4 லீக் போட்டிகளின் முடிவில் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளை பெற்று குரூப் ஏ பிரிவில் 2வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா ஏற்கனவே செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. எனவே இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி பெற அதே 4 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கும் நியூசிலாந்தை அக்டோபர் 14ஆம் தேதி(இன்று) நடைபெறும் கடைசிப் போட்டியில் பாகிஸ்தான் தோற்கடிக்க வேண்டும்.

அதனால் இந்தியாவின் செமி ஃபைனல் கனவு பாகிஸ்தான் கையில் உள்ளது. இருப்பினும் ஏற்கனவே பாகிஸ்தான் 3 போட்டிகளில் 1 வெற்றி மட்டுமே பெற்று இத்தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. அத்துடன் நியூசிலாந்துக்கு எதிராக மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 3 போட்டிகளிலும் பாகிஸ்தான் 3 தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் அப்போட்டியில் நியூசிலாந்து அணியை பாகிஸ்தான் வீழ்த்துவது கடினம் என்பதால் இந்தியா இத்தொடரிலிருந்து வெளியேறுவது 90% உறுதியாகியுள்ளது.

crictamil



 



Post a Comment

0 Comments