
செரோக்கி உந்துருளி பழகவென்று வந்ததால் வேறெந்தப் பேச்சுமின்றி, அவனை வண்டியில் அமரவைத்த இர்வின், தன் இரு கைகளாலும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு பெடலை மிதிக்கும்படி செரோக்கியிடத்தில் கூறினான்.
வண்டியியில் சிரமப்பட்டு ஏறிக்கொண்ட செரோக்கி, பெடலை மிதித்தான். ஆரம்பத்தில் சிறிது சிரமப்பட்டாலும் போகப்போக சரியாகிவிடும் - பழகிவிடலாம் என்ற நம்பிக்கையை அவன் தன்னுள் வரவழைத்துக் கொண்டான்!
செரோக்கி பெடலை மிதிப்பதும், இர்வின் பின் கரியரைப் பிடித்தவாறு தள்ளுவதுமாக உந்துளி இரு சக்கரங்களில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது!
அவ்வப்போது வண்டியின் முன் சக்கரம் இடதுக்கும், வலதுக்குமாகத் திரும்பியது!
செரோக்கி அதனை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து நேராகச் செலுத்துவதில் அதிக கரிசனை எடுத்துக் கொண்டான்!
சிறிது தூரம் செல்ல முன் சக்கரத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதை அவனால் உணரமுடிந்தது!
இப்பொழுது வண்டியின் முன் சக்கரம் இடம், வலம் திரும்பாமல் நேராகச் சென்று கொண்டிருந்தது!
வண்டி நேராகச் செல்ல ஆரம்பித்ததைக் காவனித்த இர்வின், கரியரைப் பிடித்தவாறு தள்ளிக் கொண்டிருந்த தனது கரங்களை விடுதலையாக்கியவனாக வண்டிக்குப் பின்னால் ஓட்டமும் நடையுமாக நகர்ந்து கொண்டிருந்தான்!
நண்பன் தள்ளிக்கொண்டு வருகின்றான் என்ற நினைப்பில், செரோக்கி பெடலை தன் பலங்கொண்ட மட்டும் மிதித்தான்!
தொடர்ந்து மிதித்துக் கொண்டிருந்தபோது.... வண்டி தள்ளப்படவில்லை என்பதை அவனால் உணரமுடிந்தது!
திரும்பிப் பார்க்க முற்பட்டான்! அவ்வேளை வண்டியோடு சேர்ந்து அவனும் பாதையோரமாக சாய்ந்து விட்டான்!
செரோக்கியின் கால்களிலும் கைகளிலும் கீறல்கள்! இரத்தம் வேறு கசிந்தது! எதிர்பாராத இந்த நிகழ்வு இர்வினைக் கவலைப்பட வைத்தது!
செரோக்கியைப் பொறுத்தவரையில் காயம் ஏற்படுவது, இரத்தம் வருவது என்பதெல்லாம் ஒரு பெரிய விடயமே யல்ல!
வனத்துக்குள் செல்கின்ற ஒவ்வொரு நாளிலும் முட்கள் குத்தி, அவனது உடம்பு பதப்பட்டிருப்பதை இர்வின் அறிய மாட்டான்!
இருவரும் சேர்ந்து வண்டியை நிமிர்த்தினார்கள்!
செரோக்கி உராய்வுகளைச் சிறிது தடவி விட்டபின் மறுபடியும் வண்டியில் ஏறிக் கொண்டான்!
இர்வின் தள்ளினான்! செரோக்கி பெடலை மிதித்தான்! வண்டி நகர்ந்தது!
கைகால்களில் ஏற்பட்ட கீறல்களை மறந்தவனாக, செரோக்கி தன் வேலையில் தீவிரமானான்! தொடர்ந்து நீண்ட தூரமாகத் தள்ளிக் கொண்டிருந்த இர்வின் - மறுபடியும் தள்ளுவதை நிறுத்திவிட்டு, வண்டியின் பின்னால் ஓட்டமும் நடையுமாகச் சென்றான்.
இப்பொழுது செரோக்கி தன்னை அறியாமலேயே தனியாக வண்டியை நகர்த்திக் கொண்டிருந்தான். வண்டியைத் தனியாகக் கட்டுப்படுத்திச் செல்லும் நிலைக்கு வந்துவிட்டதால், அவன் திரும்பிப் பார்க்காமல் புல்வெளி வரைக்கும் வண்டியைச் செலுத்திச் சென்றான்!
வண்டியைத் திருப்புவதில் சிறிது சிரமப்பட்ட அவன் - தன் சமயோசித புத்தியை உபயோகித்தான். வண்டியிலிருந்து கீழே இறங்கி - அதனைத் தூக்கி எடுத்து, மறு பக்கம் திருப்பி வைத்து மறுபடியும் அதில் ஏறியவனாகப் பெடலை மிதித்து வந்து இர்வினின் எதிரில் நிறுத்த முற்பட்டான்!
அது அவனால் முடியாமற் போய்விட்டது!
நகர்ந்து கொண்டிருந்த வண்டியை நிறுத்திக் கொள்ள முடியாமல் செரோக்கி தவிப்பதைப் பார்த்த இர்வின், வண்டியின் கைப்பிடியைப் பிடித்து நிறுத்தி, செரோக்கி வண்டியிலிருந்து இறங்கிக் கொள்ள உதவினான்!
அங்கிருந்த மரநிழல் ஒன்றில் இருவரும் சற்று நேரம் இளைப்பாறினர்.
மேலதிக சிரமம் எடுத்துக் கொண்டால் இன்னும் இரண்டொரு நாட்களில் - பயம் தெளிந்துவிடும்!
வண்டியைத் தனியே ஓட்டிச்செல்லும் நிலைக்கு செரோக்கி வந்துவிடுவான் என்ற நம்பிக்கை இர்வினுக்கு இப்போது வந்துவிட்டது! இந்த நேரத்தில் இர்வினிடத்தில் வெளிப்படுத்த வேண்டிய அடுத்த விடயம் செரோக்கியின் நினைவில் வந்துபோனது!
(தொடரும்)
செம்மைத்துளியான்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments