வள்ளுவரும் வாழும் குறளும் (பன்முக ஆய்வு)-9

வள்ளுவரும் வாழும் குறளும் (பன்முக ஆய்வு)-9


இந்த நிகழ்ச்சியை நான் எதற்காகக் குறிப்பிடுகிறேன் என்று சொன்னால் இந்த விழாவிலே, அப்போதைய இலங்கை அரசன் "கயவாகு" என்பவனும் கலந்து கொண்டிருந்தான். இவனது காலம் சிங்கள சரித்திர நூல்களான "மகாவம்சம்", தீபவம்சம்" என்பவற்றின் மூலம் தெரிய வருகிறது. அதாவது "கயவாகு" என்னும் இலங்கை அரசன் கி.பி. 113 வது ஆண்டு முதல் கி.பி. 125 - வது ஆண்டுவரை, இலங்கையைச் செங்கோல் ஓச்சினான் என்பது நாம் பெறப் படுகின்ற செய்தி.

-உலக மன்னவன் நின்றோன் முன்னர் அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும், பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும், குடகக் கொங்கரும், மாளுவ வேந்தரும். கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும், எந்நாட் டாங்கண் இமைய வரம்பனின் நன்னாட் செய்த நாளணி வேள்வியுள் வந்தீ கென்றே வணங்கினர் வேண்ட" சிலப்பதிகாரத்தின் வரந்தரு காதையில் இளங்கோவடிகள் தாமே தெரிவிக்கின்றார். 

இலங்கையில், இங்கு சொன்ன சுயவாகுக்குப் பிறகு, இரண்டாம் கயவாகு என்னும் மன்னன் இருந்தான். இவனது காலம் கி.பி. 12-ஆம் நூற்றாண்டு என்பதால், முதலாம் கயவாகு வாழ்ந்த காலமே. இளங்கோவடிகள் மற்றும் சேரன் செங்குட்டுவனின் காலம் என்பதை நாம் உணர வேண்டும்.

இச்சேரன் செங்குட்டுவன். ஐம்பத்தைந்தாண்டு அரசோச்சினான் என்ற செய்தியை, பதிற்றுப் பத்தின், பரணரால் அருளிச் செய்த ஐந்தாம் பத்தின் செய்தியில் "கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் ஐம்பத்தையாண்டு வீற்றிருந்தான்" என்பதால் நாம் அறிய முடிகிறது.

எட்டுத் தொகை நூல்களுள் பதிற்றுப்பத்தும், புறநானூறும், புறப்பொருள் பற்றிய தொகை நூல்கள். இவை இரண்டும் அகவற்பாக்களால் இயற்றப்பட்டவை. எனினும், இவ்விரண்டிற்கும் வேறுபாடு ஒன்று உண்டு. அதாவது, புறநானூறு என்பது சேர, சோழ பாண்டியர்கள் மூவரையும், வேளிர் முதலிய பிறரையும் பற்றி எழுதிய தொகுப்பின் நூலாகும்.

ஆனால் பதிற்றுப்பத்தோ, சேர மன்னர்களையே விளக்கிக் கூறப்படும் பாடல்களின் தொகுப்பாகும். பத்துப் பத்து அசுவற்பாக்களால் அமைந்த பத்துப் பகுதிகளைக் கொண்ட நூல் இதுவாதலின், இது 'பதிற்றுப்பத்து' என்று பெயர் பெறலாயிற்று. ஒவ்வொரு சேரமன்னரைக் குறித்துப் பாடப் பெற்றமையால் இந்நூல் பத்துப் பகுதியாகக் கொள்ளத்தக்கது. இதிலுள்ள பத்துப் பத்துகளும் 'முதற்பத்து' 'இரண்டாம் பத்து' என்று எண்ணிட்டுப் பெயர் பெற்றுள்ளன. இதனைத் தொகுத்தார். தொகுப்பித்தார் யார் என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை. மேலும், முதற்பத்தும், பத்தாம் பத்தும் இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை என்பதும் வேதனைக்கு உரிய செய்தி. 

இது நிற்க.இப்பதிற்றுப் பத்தால், சேர மன்னர்களின் காலம் அறிய முடிகிறது. இக்காலம், நாம் நமது திருவள்ளுவரின் காலத்தை உணர ஏதுவாக இருப்பதால், பதிற்றுப் பத்தின் மூலமே வள்ளுவரின் காலத்தைக் கணக்கிடுவோம்.

(தொடரும்)



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post