நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணியின் தோல்விக்கான 7 முக்கிய காரணங்கள்..!

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணியின் தோல்விக்கான 7 முக்கிய காரணங்கள்..!

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பெங்களூருவில் தொடங்கிய முதல் டெஸ்டில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது. இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் உடன் எளிதாக வெற்றிபெற்ற இந்திய அணி நியூசிலாந்தையும் எளிதில் வென்று விடலாம் என்று மனக்கோட்டை கட்டியது. ஆனால் நியூசிலாந்தின் வேகப்பந்து இந்திய பேட்ஸ்மேன்களை ஆட்டம் காண வைத்தது. முதல் நாள் முழுவதும் மழையின் காரணமாக ஆட்டம் தடைப்பட்டது. மற்ற நாட்களில் மழை குறுக்கீடு இருந்த போதும் நியூசிலாந்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியவில்லை. நியூசிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த தொடரில் முன்னிலையில் உள்ளது. பெங்களூரு டெஸ்டின் ஆட்ட நாயகனாக ரச்சின் ரவீந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உள்ளூர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி தொடர்ந்து 18 வெற்றிகளை குவித்து வந்த சாதனையை நியூசிலாந்து தொடர் முற்றுப்புள்ளி வைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 36 ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் நியூசிலாந்து டெஸ்ட் போட்டியை வென்றுள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்ட பின் இந்திய அணி பெறும் முதல் தோல்வி இதுவாகும். இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என்ன? நியூசிலாந்திடம் இந்திய அணி எங்கு சறுக்கியது? என்பதை தற்போது பார்க்கலாம்.

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

பெங்களூரு டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதுவே இந்திய அணியின் தோல்விக்கு முதல் படியாக அமைந்தது. முதல் நாள் முழுவதும் மழை பெய்ததால் பிட்ச் ஈரப்பதமாக இருக்கும், இதனால் பந்து ஸ்விங் ஆவதற்கு சற்று நேரமாகும். இதனை தனக்கு சாதகமாக மாற்ற யோசித்தார் ரோஹித். ஆனால் நடந்தது வேறு. நியூசிலாந்து வேகத்தில் இந்திய அணி வீரர்கள் திணற ஆரம்பித்தனர். திடீர் ஸ்விங், பவுன்சர், லென்த் பந்துகளை கொண்டு நியூசிலாந்து  வேகத்தை டாப் கியரில் ஏற்ற ஆரம்பித்தது. இதனால் டாப் ஆர்டர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். சவுதி, வில்லியம், ஹென்றி ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி இந்திய அணியை 46 ரன்களுக்கு சுருட்டியது.

சொதப்பிய இந்திய பவுலர்கள்

நியூசிலாந்து பவுலர்களுக்கே இப்படி என்றால் பும்ராவின் பந்துவீச்சுக்கு ஸ்டெம்ப் மைதானத்தில் இருக்குமோ அல்லது அந்தரத்தில் பறந்து கொண்டே இருக்குமோ என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிச்சம். இந்திய அணி பேட்டிங்கின் பவுண்டரிக்கு எட்டி பார்க்காத பந்து நியூசிலாந்து பேட்டிங்கின் போது, பந்து பவுண்டரியில் தஞ்சம் புகுந்து கொண்டே இருந்தது. வேகம் தான் ஸ்விங் ஆகவில்லை சுழற்பந்து வீச்சாவது ஜாலம் காட்டும் என்று பார்த்தால் அதுவுமில்லை. இந்திய அணியின் வேகம் மற்றும் சுழல் இரண்டுமே நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை பெரிதாக மிரட்டவில்லை.

ரச்சின் ரவீந்திரா அதிரடி

முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 233 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து இருந்தது. அப்போது டிம் சவுதியும் - ரச்சின் ரவீந்திரா இருவரும் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆரம்பத்திலேயே இவர்கள் அதிரடிக்கு கடிவாளம் போட்டு இருந்தால் 300 ரன்களுக்குள் நியூசிலாந்தை முடித்து இருக்கலாம். ஆனால் இருவரும் இந்திய மண்ணில் பல ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருந்ததால் பந்துவீச்சை ஊதித்தள்ளி பவுண்டரிகளை எளிதாக எடுத்தனர். இந்த ஜோடி 137 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இந்த போட்டியின் மிகப்பெரிய திருப்புமுனையாக இது இருந்தது. இதனால் நியூசிலாந்து 402 என்ற இமாலய ரன்களை பெற்றது.

ஓப்பனிங் டமால்

இந்திய அணி 356 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது ஆட்டத்தை தொடங்கியது. ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் ஆரம்பத்தில் அதிரடியாக விளையாட தொடங்கினர். டி20 பார்மேட்டில் விளையாடிய ஜெய்ஸ்வால் இறங்கி வந்து சிக்சர்களை பறக்கவிட நினைத்து ஸ்டெம்பிங் முறையில் அவுட்டாகி வெளியேறினார். ரோஹித் தனது பங்கிற்கு 52 ரன்கள் எடுத்திருந்த போது தனது விக்கெட் பறிகொடுத்தார். ஓப்பனிங்கில் 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் வைத்து இருந்தால் இந்திய அணியின் நிலை மாறி இருக்கும்.

ஏமாற்றம் தந்த பின்வரிசை

இரண்டாம் இன்னிங்ஸில் சர்பராஸ் கான் மற்றும் ரிஷப் பந்த் மிகப்பெரிய அதிரடியை கொடுத்து நியூசிலாந்து பந்துவீச்சை நொறுக்கினார்கள். குறிப்பாக சர்பராஸ் கான் இந்திய அணியில் தனது நீண்ட நாள் ஏக்கத்தை ஒரே போட்டியில் தணித்தார். 150 ரன்களில் அவுட்டாகி சர்பராஸ் கான் பெவிலியன் திரும்பிய போது நியூசிலாந்து வீரர்கள் கைகொடத்தும் ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி அவருக்கு மரியாதை செலுத்தினர். பந்த் 99 ரன்களில் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். 408 ரன்களுக்கு 4 விக்கெட்களை எடுத்திருந்த இந்திய அணி 462 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

தடுமாறும் கே.எல்.ராகுல்

இந்திய அணி போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு கே.எல்.ராகுலுக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறது. கொடுக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் வீணடித்து கொண்டே வரும் கே.எல்.ராகுல் இந்த டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டும் இரண்டாவது இன்னிங்ஸில் 12 ரன்களிலும் அவுட்டானார். கே.எல்.ராகுலுக்கு பதிலாக பெஞ்சில் காத்திருக்கும் வேறொரு சிறந்த வீரருக்கு வாய்ப்பு வழங்கலாம். ஒரு நாள், டி20 மற்றும் டெஸ்ட் என அனைத்திலும் தனக்கு அளித்த வாய்ப்பை வீணடித்துள்ளார் கே.எல்.ராகுல்.

3 சுழற்பந்துகள்

வங்கதேச தொடரின் போது இந்திய அணி பும்ரா, சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் என்று 3 வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு மிரட்டியது. அதே வேகத்தில் பெங்களூரு டெஸ்டில் விளையாடி இருந்தால் நியூசிலாந்து அணிக்கு கூடுதல் நெருக்கடியை கொடுத்திருக்கலாம். ஆனால் பெங்களூரு டெஸ்டில் 3 சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தும் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அனுபவ வீரர் மற்றும் டெஸ்டில் நம்பர் 1 சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தார். ஆகாஷ் தீப் வங்கதேச தொடரில் சிறந்த ஃபார்மில் இருந்தும் அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போனதும் வெற்றி கைநழுவியதுக்கு ஒரு காரணமாக அமைந்தது.

News18



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post