அரசின்அதிரடி மாற்றங்கள்-8

அரசின்அதிரடி மாற்றங்கள்-8


பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு:

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மற்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு இடையில் விசேட சந்திப்பின்போது,

இலங்கையில் கல்வித்துறையில் நேரடி முதலீடு மற்றும் ஒத்துழைப்பு பற்றிய பல விடயங்கள் பற்றி விரிவாகக் கலந்துரையாடப்பட்டது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜப்பானிய தூதுவர்  சந்திப்பு:

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிதேயாகியை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியபோது,

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமைக்காக தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்த ஜப்பானிய தூதுவர், ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு ஜப்பான் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஊழலற்ற சிறந்த ஆட்சியை உருவாக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுக்கும்  வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிதேயாகி (Mizukoshi Hideaki) மேலும் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர ஆர்வமுள்ள துறைகள் குறித்து இதன் போது விரிவாக ஆராயப்பட்டதுடன், எதிர்காலத்தில் இரு நாடுகளும் நட்பு நாடுகளாக நெருக்கமாகப் பணியாற்றவும் உடன்பாடு காணப்பட்டது.

அதன்படி, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய  (BIA) விஸ்தரிப்பு மற்றும்   தொலைக்காட்சி ஒளிபரப்பு டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் போன்ற திட்டங்களை சீராக்கி நடைமுறைபடுத்தப்பட எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு:

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை (Santosh Jha) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியபோது, ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர், இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு சகல வழிகளிலும் ஆதரவளிக்க இந்தியா தயாராக இருப்பதாகவும், பிராந்தியத்தில் அமைதியான மற்றும் நிலையான நாடாக இலங்கை வெளிப்படுவதை காண்பதே தமது நாட்டின் எதிர்பார்ப்பு எனவும் குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான நீண்டகால நட்புறவையும் நெருக்கத்தையும் நினைவுகூர்ந்த இந்திய உயர்ஸ்தானிகர், அண்டைய சகோதர நாடுகள் என்றவகையில் இரு நாடுகளுக்குமிடையில் தொடர்ச்சியான மற்றும் நிலையான நட்பைப் பேணி முன்னேறுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

ஊழலுக்கு எதிராகத் திறம்பட போராடுவதற்கு அரசாங்க கட்டமைப்புகளை டிஜிட்டல் மயமாக்குவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய இந்திய உயர்ஸ்தானிகர், ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு திட்டத்தைப் பாராட்டியதோடு, அதற்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார்.

கனேடிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு:

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷை (Eric Walsh) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியபோது, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  பெற்ற வெற்றிக்கு தனதும் கனேடிய அரசாங்கத்தினதும் மக்களினதும் மனப்பூர்வமான வாழ்த்துத் தெரிவித்த கனேடியத் தூதுவர், ஊழலை ஒழித்து நாட்டில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அர்ப்பணிப்பையும் பாராட்டினார்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) இலங்கை தொடர்புபட்டிருப்பது மற்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கும் கனேடிய அரசாங்கத்தின் முழு ஆதரவை வழங்குவதாகவும் உயர்ஸ்தானிகர் உறுதியளித்தார்.

கௌரவப் பெயர் கொண்டு ஜனாதிபதியை விளிக்க வேண்டாம்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை மேன்மைதங்கிய, அதி மேதகு என கௌரவப் பெயர் கொண்டு விளிக்க வேண்டாமென தேசிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர் கே.டி. லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.

அநுராகுமார ஜனாதிபதியாகப் பதவி வகித்தாலும், அவரை தோழர் என அழைக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

மக்கள் இனி மதம், இனம் அல்லது குலத்தின் அடிப்படையில் மக்கள்வாக்களிக்கத் தயாரில்லை!

மதம், இனம் அல்லது குலத்தின் அடிப்படையில் மக்கள் இனி வாக்களிக்கத் தயாராக இல்லை என்பதை அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெளிப்படுத்தியதாக பௌத்த விவகார இணைப்பாளர் வண. கலாநிதி சஸ்த்ரபதி கலகம தம்மரன்சி நாயக்க தேரர் தெரிவித்தார். 

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாட்டில் நிலவும் இனவாதம், மத பிளவுகள், தொடர்ச்சியான இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளதாக தெரிவித்தார்.



 



Post a Comment

Previous Post Next Post