ஹிட்லர் போர் வரலாறு: இரண்டாம் உலகப் போர் தொடங்கிய தருணம் எப்படியிருந்தது?

ஹிட்லர் போர் வரலாறு: இரண்டாம் உலகப் போர் தொடங்கிய தருணம் எப்படியிருந்தது?


அது 1939-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி அதிகாலை நேரம். ஜெர்மானியப் படைகள் போலாந்து நாட்டின் நகரமான வைலுன் மீது குண்டுகளை வீசின. அது ராணுவ முக்கியத்துவம் அற்ற நகரம். மக்கள் மீது அச்சத்தை விதைப்பதே அந்தக் குண்டு வீச்சின் நோக்கம்.

ஆயினும் அந்தத் தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. உயிர்பிழைத்த மக்கள் நாட்டை விட்டு வெளியேறினர். நாஜி ஜெர்மனி 62 ராணுவப் பிரிவுகள், 1300 விமானங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி போலாந்து மீது படையெடுத்தது.

போலந்து மீதான ஹிட்லரின் படையெடுப்பு ஒரு சூதாட்டம் என்றே இன்று வரையும் கருதப்படுகிறது. அப்போது ஜெர்மானிய ராணுவம் ஒரு போருக்குத் தயாராக இல்லை. பொருளாதாரமும் மந்த நிலையில் இருந்தது. ஹிட்லரின் சில தளபதிகள் இதை எடுத்துக் கூறி போரைத் தடுத்துவிட முயன்றனர். வேறு வழியில்லாமல் ஹிட்லரின் திட்டத்தை பிரிட்டனிடமும் பிரான்ஸிடமும் கசியவிட்டனர்.

ஆனால் ஹிட்லர் அதைப் பொருள்படுத்தவில்லை. தனது தளபதிகளிடம் அவர் கூடுதலாக விசுவாசத்தை எதிர்பார்த்தார். போலாந்து மீதான படையெடுப்பு மிகச் சுருக்கமாகவும் வெற்றிகரமாகவும் முடிவுக்கு வந்துவிடும் என்று ஹிட்லர் உறுதியாக நம்பினார். அவரது முதல் நம்பிக்கை தனது ராணுவத்தின் வலிமை. இரண்டாவது நம்பிக்கை, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாட்டின் தலைவர்கள் பலவீனமானவர்கள் என்பது. அவர்கள் போருக்கு வரமாட்டார்கள் என்றும் அமைதிப் பேச்சுவார்த்தையை மட்டுமே நம்புவார்கள் என்றும் ஹிட்லர் கருதினார்.

முதல் உலகப் போரின் இறுதியில் ஜெர்மனி சரணடைந்த பிறகு அந்த நாட்டைக் கட்டுப்படுத்துவதற்காகப் போடப்பட்ட வெர்சாய் உடன்பாடு 1935-க்கும் 1938-க்கும் இடையே திருத்தியமைக்கப்பட்டது. ஜெர்மனிக்கு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் கிடைத்தன. இது தனக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக ஹிட்லர் கருதினார். அந்தக் காலகட்டத்தில் மேற்கத்திய ஊடகங்களும் ஹிட்லருக்கு பெரிய எதிர்ப்பாக இல்லை.

இந்தச் சூழலால் துணிச்சல் பெற்ற ஹிட்லர் செக்கோஸ்லோவாக்கியாவை கைப்பற்ற உத்தரவிட்டார். அதை இணைப்பதற்கு சாலைகள் அமைக்க அனுமதி வழங்குமாறு போலாந்துக்கு அழுத்தம் கொடுத்தார். இது பிரிட்டனுக்கு அவர் அளித்த வாக்குறுதியை மீறுவதாக அமைந்தது. பிரிட்டன் தனது அதிருப்தியைத் தெரிவித்தது.

ஆனாலும் பிடிவாதமாக இருந்த ஹிட்லர் போலாந்தைக் கைப்பற்றுவதற்கு ஜெர்மானிய ராணுவத்துக்கு உத்தரவிட்டார். அதே நேரத்தில் இத்தகைய நடவடிக்கையால் சோவியத் ஒன்றியத்தின் ஸ்டாலினுக்கு கோபம் ஏற்படக்கூடாது என்பதிலும் ஹிட்லர் கவனமாக இருந்தார். ஸ்டாலினுக்கும் இதே போன்றதொரு எண்ணம் இருந்தது. இதனால் ஸ்டாலினும் ஹிட்லரும் 1939-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி உடன்பாடு செய்து கொண்டார்கள்.

1914 இல், முதல் உலகப் போர் வெடித்தபோது, ஜெர்மனியில் ​​அதிக உற்சாகம் இருந்தது ஆனால் இந்த முறை அப்படி இல்லை. 1918 இல் சரணடைந்த வலி, விதிக்கப்பட்ட தண்டனைகள் ஆகியவற்றை ஜெர்மானியர்கள் நினைவில் வைத்திருந்தார்கள். இருப்பினும், பெரும்பான்மையான ஜெர்மானியர்கள் தயக்கத்துடன் போரை ஆதரித்தனர்.

1939-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி அதிகாலை 4.40 மணிக்கு போர் தொடங்கியது. ஜெர்மானியப் படைகள் வைலூன் நகரைத் தாக்கி அழிக்கத் தொடங்கின. அப்போது அது ஒரு மாபெரும் போரின் தொடக்கம் என்பதைப் பலரும் அறிந்திருக்கவில்லை. ஆனால் போரின் போக்கு எதிர்பாராத பக்கமெல்லாம் திரும்பியது.

அந்தப் படையெடுப்புக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, பிரிட்டனும் பிரான்சும் ஜெர்மனி மீது போரை அறிவித்தன. இரண்டு வாரங்களுக்குப் பிறகு, போலாந்து இரண்டாவது படையெடுப்பை சந்தித்தது. இந்த முறை கிழக்கில் சோவியத் ஒன்றியத்தில் இருந்து தாக்குதல்கள் நடந்தன.

போலந்து மீதான ஜெர்மன் படையெடுப்பு மிகப் பெரும் ஆக்கிரமிப்புகளில் ஒன்றின் தொடக்கமாக அமைந்தது. இதில் ஜெர்மானிய படைகள் லட்சக்கணக்கான போலாந்து குடிமக்களை கொன்றன.

கொல்லப்பட்டோர் எண்ணிக்கையில், மதிப்பீடுகள் வேறுபடுகின்றன. ஆனால் போரின் போது ஐம்பது லட்சத்துக்கும் அதிகமான போலந்து மக்கள் கொல்லப்பட்டனர் என்பது நம்பகமான புள்ளி விவரம். அதாவது மக்கள் தொகையில் 17% வரை உயிரிழந்து விட்டனர். யூத இன அழிப்பில் கொல்லப்பட்ட 30 லட்சம் போலாந்து யூதர்களையும் உள்ளடக்கியது இந்தக் கணக்கு.

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணுகுண்டு வீசியதில் கொல்லப்பட்ட ஜப்பானியர்களை விட அதிகமான போலாந்து நாட்டு கொல்லப்பட்டனர். போலந்து தலைநகரை அழித்துவிட ஹிட்லர் உத்தரவிட்டார்.

இதன் பிறகு தொடங்கிய போர் உலகின் பல பகுதிகளிலும் 1945-ஆம் ஆண்டு வரை நீடித்தது. ரஷ்யாவின் செம்படை ஜெர்மானிய ஆக்கிரமிப்பாளர்களை வார்சா நகரில் இருந்து வெளியேற்றியபோது, ​​​​ஸ்டாலின் போலந்தில் ஒரு இணக்கமான கம்யூனிச ஆட்சியை நிறுவினார். அதுவே 1989 வரை நீடித்திருந்தது.

உண்மையில் போர் தொடங்கிய ஒரு மாதத்திற்குப் பிறகு, போலாந்து தோற்கடிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில், ஹிட்லர் பகிரங்கமாக மேற்கத்திய நட்பு நாடுகளுடன் சமாதானம் செய்ய முன்வந்தார். அதே நேரத்தில் அந்த குளிர்காலத்தில் பிரான்ஸ் மீது படையெடுப்பதற்குத் தயாராகுமாறு தனது தளபதிகளுக்கு ரகசியமாக உத்தரவிட்டார். பிரிட்டனும் பிரான்சும் ஹிட்லரை நம்ப மறுத்து போரைத் தொடர்ந்து நடத்தின. அது அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு நீடித்திருந்தது.

போலந்து மீதான படையெடுப்புடன் தொடங்கிய இரண்டாம் உலகப் போரில் எட்டு கோடிக்கும் அதிகமானோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் கொல்லப்பட்டனர். ஒரு நாட்டைக் கைப்பற்றும் முயற்சி பெரும் போராக உருவெடுக்கும் என்பதற்கான உதாரணமாக அந்தப் போர் அமைந்தது. அதன் வலிமிகுந்த வடுக்கள் இன்றும் உலகமெங்கும் உண்டு.

bbctamil



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post