தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழர்கள் ஜனாதிபதி அநுர குமாரவிடம் எதிர்பார்ப்பது என்ன?

தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழர்கள் ஜனாதிபதி அநுர குமாரவிடம் எதிர்பார்ப்பது என்ன?


இலங்கையின் புதிய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள அநுர குமார திஸாநாயக்கவின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும், என்று தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள இலங்கைத் தமிழர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இலங்கை பொருளாதார நெருக்கடியால் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள இலங்கை தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், "பொருளாதார நெருக்கடியின்போது தமிழ்நாட்டிற்கு வந்த அகதிகளைத் திருப்பி அனுப்புவது பற்றி இலங்கைத் தூதரகம் மூலம் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்," என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, புதிதாகப் பதவியேற்றுள்ள அநுர குமார திஸாநாயக்க மீது இந்திய மீனவர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவர் இரு நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக நீடிக்கும் மீனவர் பிரச்னைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக இந்திய மீனவர்கள் கூறுகின்றனர்.

இலங்கையில் கடந்த 21ஆம் தேதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்று, இலங்கையின் 9வது ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டார்.

பின்னர் மக்கள் மத்தியில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவேண்டிய அவசியம் உள்ளதாகப் பேசினார்.

இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி முதல் வாழ வழியின்றி ஆண்கள், பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் முதியவர்கள் என 307 இலங்கைத் தமிழர்கள் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அந்தக் காலகட்டதில் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்தவர்களின் எண்ணிக்கையை மண்டபம் இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தங்களை மன்னித்து மீண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென பொருளாதார நெருக்கடியின்போது தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை தமிழர்களுக்கு நல்லது செய்வாரா என்பது கேள்விக்குறி?

இதுகுறித்து மூன்று தலைமுறையாக மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தஞ்டமடைந்துள்ள மாசிலாமணி பிபிசி தமிழிடம் பேசுகையில், "நான் 33 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இருந்து அகதியாக ராமேஸ்வரம் வந்து தற்போது மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ளேன்.

நாங்கள் மூன்று தலைமுறையாக இந்தியாவில் வாழ்ந்து வருகிறோம். இலங்கையில் பிரச்னைகள் தீர்ந்து அமைதி திரும்பும் என எதிர்பார்த்திருந்த நிலையில் அதற்கான வாய்ப்பு இல்லை எனத் தோன்றுகிறது," என்கிறார்.

புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க "அனுர சேகுவேரா அமைப்பில் இருந்தவர் அந்த அமைப்பினர் தமிழர்களுக்கு எதிராகப் பல்வேறு கொடுமைகளைச் செய்துள்ளனர். தமிழர்களுக்கு எதிரான கருத்துகளை முன்வைத்து இனவாத அரசியல் செய்த அமைப்பு என்பதால், அந்த அமைப்பில் இருந்தவர் புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டது இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு நல்லது நடக்குமா என்பது கேள்விக்குறிதான்," என்கிறார் மாசிலாமணி.

இருப்பினும், "இலங்கைப் பொருளாதாரம் வளர்ச்சியடைய நடவடிக்கை எடுப்பது, பல்வேறு நாடுகளில் சிதறிக் கிடக்கும் இலங்கைத் தமிழர்களை ஒன்றிணைத்து, இலங்கையில் மீண்டும் வாழ நடவடிக்கை எடுப்பது ஆகியவற்றை மேற்கொண்டால், அநுர குமார தேர்ந்தெடுக்கப்பட்டதில் ஒரு பயன் இருக்கும்" என்கிறார் அவர்.

மீண்டும் இலங்கைக்கு அழைத்துக் கொள்வீர்களா?

பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழர் ரசீன் பிபிசி தமிழிடம் பேசுகையில், பொருளாதார நெருக்கடி காரணமாக குடும்பத்துடன் கடல் வழியாக கள்ளத் தோணியில் தமிழ்நாட்டிற்கு வந்து மண்டபம் முகாமில் தங்கியிருப்பதாகத் தெரிவித்தார்.

பத்து மாதங்களுக்கு முன்பு கணவரை இழந்த ரசீன், இந்தச் சூழ்நிலையில் இந்தியாவில் தனியாக வாழ முடியாது எனவும், தனது பெற்றோர் இலங்கையில் இருப்பதால், இரண்டு குழந்தைகளுடன் மீண்டும் இலங்கை செல்ல முயன்றதாகக் கூறுகிறார்.

அதற்காக, சென்னை பாஸ்போர்ட் அலுவலகம், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு அலுவலகம் உள்ளிட்டவற்றில் ஆறு மாதங்களாக மனு கொடுத்துள்ளதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இந்திய அரசும், தமிழக அரசும், தங்களை அரவணைத்து, உணவளித்துப் பார்த்துக் கொண்டாலும், "பொருளாதார நெருக்கடியால் தஞ்சமடைந்தவர்கள், இலங்கைக்குத் திரும்ப முயலும்போது, மீண்டும் அழைத்துக்கொள்ள வேண்டுமென்று" ஜனாதிபதி அநுர குமாரவிற்கு ரசீன் கோரிக்கையும் விடுத்தார்.

'மன்னித்து மீண்டும் ஏற்று கொள்ளுங்கள்'

பொருளாதார நெருக்கடியில் சிக்கி, உணவின்றித் தவித்தபோது இந்தியாவில் இருந்த உறவினர்கள், தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு உள்ளதாகவும், விலைவாசி இலங்கையைவிடக் குறைவு எனவும் கூறி அழைத்ததால் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்ததாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார் ரஜினி.

ஆரம்பத்தில் போதுமான வசதிகள் கிடைத்தாலும், வேலையின்மை, குழந்தைகளைப் படிக்க வைக்க முடியாத சூழ்நிலை ஆகியவற்றால் இலங்கையைப் போலவே தமிழ்நாட்டிலும் முடங்கியிருப்பதாகக் கூறுகிறார் அவர்.

ஆகவே, "புதிய ஜனாதிபதி தங்களை மன்னித்து மீண்டும் இலங்கைக்கு வர ஆவண செய்யவெண்டுமென்று" ரஜினி தனது கோரிக்கையை முன்வைத்தார்.

'குழந்தைகள் கல்வி கற்க வழி இல்லை'

கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் முதல், பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழ்நாட்டில் தஞ்சமடைந்து வாழ்ந்து வருகிறார் இலங்கைத் தமிழர் ஜீவிதா.

தமிழ்நாடு வந்த சில நாட்களிலேயே இலங்கைக்குத் திரும்ப முயன்றதாக அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

"பொருளாதார நெருக்கடியால் தஞ்சமடைந்தவர்களை இந்திய அரசு அகதிகளாகப் பதிவு செய்யவில்லை. ஆதார் அட்டை வழங்கப்படாததால், குழந்தைகளைப் படிக்க வைக்க முடியவில்லை. ஆகவே, எங்கள் தாயகத்திற்கே திருப்பி அழைத்துக் கொள்ளுமாறு புதிய ஜனாதிபதியிடம் இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்," என்று கூறுகிறார் ஜீவிதா.

இலங்கையில் இருந்து நாங்கள் வந்த போது இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகமாக இருந்தது. தற்போது நிலைமை சற்று சரியாகி அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு இலங்கை இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால், புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இலங்கையை வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் செல்வார் என்ற நம்பிக்கையில் எங்களை மீண்டும் இலங்கைக்கு வர அனுமதிக்க வேண்டும் என இலங்கை தமிழர் ஜீவிதா கேட்டுக்கொண்டார்.

இதுகுறித்து வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், "இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது தமிழ்நாட்டிற்கு வந்த அகதிகளை திருப்பி அனுப்புவது பற்றி இலங்கை தூதரகம் மூலமே நடவடிக்கை எடுக்க முடியும்," என்று தெரிவித்தார்.

மேலும், மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்கள் இது தொடர்பாக இலங்கை தூதரக அலுவலகத்தைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கைக்குத் திரும்ப என்ன வழி?

மேலும், தமிழ்நாடு சார்பில் செய்ய வேண்டிய அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆறு மாத காலம் வாழ்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்கான பரிசீலனை மாநில அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிபிசி தமிழிடம் தெரிவித்தார், வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறையைச் சேர்ந்த அதிகாரி.

தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள இலங்கை தமிழர்களுக்காக பல ஆண்டுகளாக தமிழகம் மற்றும் இலங்கையில் பணியாற்றி வரும் ஈழ அகதிகள் புனர்வாழ்வு அமைப்பின் செயற்பாட்டாளர் லோகநாதன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில் அரசால் பதிவு செய்யப்பட்டு, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் இலங்கைக்கு மீண்டும் செல்ல விரும்பினால், முகாம் தனித்துணை ஆட்சியர் பரிந்துரையின் பெயரில் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் (UNHCR) மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது," எனத் தெரிவித்தார்.

மேலும், இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழர்கள் மீண்டும் திரும்பிச் செல்ல விருப்பம் தெரிவித்து ஐ.நா ஆணையத்தின் மூலம் இலங்கைக்குத் திரும்பிச் சென்றுள்ளதாகவும் மேற்கோள் காட்டுகிறார் லோகநாதன்.

அப்படிச் செல்பவர்களுக்கு பயணச் சீட்டு உள்ளிட்டவற்றை ஐ.நா ஆணையம் வாயிலாகவே வழங்கி, விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

மேற்கொண்டு பேசிய லோகநாதன், "பொருளாதார நெருக்கடியால் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த 307 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகப் பதிவு செய்யப்படவில்லை," எனக் கூறினார்.

ஆகையால், "ஈழத்தமிழர் நல சங்கம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் அவர்கள் இலங்கை திரும்பிச் செல்ல உதவ முடியவில்லை. இருப்பினும் அரசு இதுகுறித்து தொடர்ந்து முயன்று வருவதாகவும்" லோகநாதன் கூறினார்.

இரு நாட்டு மீனவர்கள் பிரச்சனைக்குத் தீர்வு எட்டப்படுமா?

இரு நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக உள்ள மீனவர் பிரச்னைக்கு புதிய ஜனாதிபதி உரிய தீர்வு காண்பார் என நம்புவதாகக் கூறுகிறார் பாரம்பரிய இந்திய மீனவர் நல சங்கத் தலைவர் ஜேசுராஜா.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்ததில் இருந்து கடந்த 40 ஆண்டுகளாக இருநாட்டு மீனவர்களுக்கு இடையிலும் கடலில் பிரச்னை நிலவி வருகிறது.

சமீப காலமாக இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையால் தமிழக மீனவர்கள் பலரும் மீன்பிடித் தொழிலைக் கைவிட்டு, மாற்று தொழில் தேடிச் சென்றுவிட்டனர்," என்று தெரிவித்தார்.

அதேபோல், "இலங்கை மீனவர்களும் நடுக்கடலில் மீன்பிடிக்க முடியாமல் சிரமப்படுவதால், இலங்கை மீன்வளத்துறை அலுவலர்கள் மற்றும் அமைச்சரிடம் பேசி, இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டும்," எனக் கூறினார்.

மேலும், இருநாட்டு மீனவர் பேச்சுவார்த்தையை விரைவில் நடத்தி, நல்ல தீர்வு அமைய ஜனாதிபதி அநுர குமார நடவடிக்கை எடுக்க வேண்டும்." இது நடக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கிறார் ஜேசுராஜா.

bbctamil



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post