ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி புலவாயோ நகரில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை அடுத்து பேட்டிங் செய்த அந்த அணி முதல் இன்னிங்ஸில் 586 ரன்கள் குவித்தது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் சதம் அடித்து 154, கேப்டன் கிரைக் எர்வின் 104, பிரையன் பெனட் 110 ரன்கள் அடித்து அசத்தினார்கள். அவர்களுடன் இங்கிலாந்து வீரர் சாம் கரண் தம்பி பென் கரண் 68 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து ஜிம்பாப்வே சாதனை படைத்தது.
இதற்கு முன் கடந்த 2001ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 563-9 ரன்கள் அடித்ததே அந்த அணியின் முந்தைய அதிகபட்ச ஸ்கோர் ஆகும். ஆப்கானிஸ்தான் அணிக்கு அதிகபட்சமாக அல்லா ஃகன்சபர் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக பேட் செய்த ஆப்கானிஸ்தான் உங்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்ற வகையில் முரட்டுத்தனமாக பேட்டிங் செய்தது.
ஏனெனில் அந்த அணியின் துவக்க வீரர்கள் செதுகுல்லா அட்டல் 3, அப்துல் மாலிக் 23 ரன்களில் அவுட்டானார்கள். ஆனால் அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் சாஹிதி – ரஹ்மத் சா ஆகியோர் ஜிம்பாப்வே போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு நாள் முழுவதும் பேட்டிங் செய்து சதங்களை அடித்தனர். அதற்கடுத்த நாளும் அபாரமாக விளையாடிய அவர்கள் மூன்றாவது விக்கெட்டுக்கு 364 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பிரிந்தனர்.
அதன் வாயிலாக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 3வது விக்கெட்டுக்கு அதிக பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற சச்சின் – டிராவிட் சாதனையை அவர்கள் உடைத்தனர். இதற்கு முன் 2000 நாக்பூர் போட்டியில் சச்சின் – டிராவிட் 249 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. அதில் ரஹமத் ஷா இரட்டை சதம் அடித்து 234, கேப்டன் சாகிதி 246 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக விளையாடிய அப்சர் சாசாய் தம்முடைய பங்கிற்கு சதத்தை அடித்து 113 ரன்கள் குவித்த உதவியுடன் ஆப்கானிஸ்தான் 699 ரன்கள் எடுத்தது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து ஆப்கானிஸ்தானும் சாதனை படைத்தது. இதற்கு முன் 2021இல் ஜிம்பாப்வேவுக்கு எதிராக 545-4 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனை ஸ்கோர்.
ஜிம்பாப்வேவுக்கு அதிகபட்சமாக பிரையன் பெனட் 5 விக்கெட்டுகளை எடுத்து ஒரு டெஸ்ட் போட்டியில் சதத்தையும் 5 விக்கெட்டுகளும் எடுத்த இளம் வீரர் (21 வருடம் 46 நாட்கள்) என்ற உலக சாதனை படைத்தார். இதற்கு முன் கொல்கத்தாவில் இந்தியாவுக்கு எதிராக ப்ரூஸ் டெய்லர் 21 வருடம் 236 நாட்களில் அந்த சாதனையை படைத்திருந்தார். அடுத்ததாக பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 142-4 ரன்கள் எடுத்த போது இப்போட்டி டிராவில் முடிந்தது. மொத்தத்தில் இரு அணிகளும் சேர்ந்து 1427 ரன்கள் மாறி மாறி அடித்துக்கொண்ட இப்போட்டி கடைசியில் டிராவில் முடிந்தது.
crictamil
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments