ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இயற்பியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், 20 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த அறிவியல் அறிஞராக போற்றப்படுகிறார். இவருக்கு பயன்பாட்டுக் கணிதத் திறமைகளும் உண்டு. கணிதம் மற்றும் அறிவியலில் புலமைப் பெற்ற ஐன்ஸ்டீன், உலகத்தின் எட்டாவது அதிசயம் பற்றியும் ஒரு கருத்தை உலகுக்கு எடுத்துரைத்துள்ளார். ஆனால் நிச்சயம் அது அறிவியல் சார்ந்தது அல்ல. அப்படியென்றால் அந்த அதிசயம் எதுவாக இருக்கும்! அறிந்து கொள்ள உங்களுக்கு ஆர்வமாக இருக்கிறதா! அதனை அறிந்த பின்பும் இதே ஆர்வம் உங்களிடத்தில் இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
உலகின் அதிசயங்கள் ஏழு. எட்டாவது அதிசயம் உண்டென்றால், அதற்கு போட்டியாக பற்பல இடங்கள் பட்டியலில் இடம் பெறும். ஆனால், கணிதத்தில் ஒரு குறிப்பிடத்தக்க தலைப்பு உலகின் எட்டாவது அதிசயமாக இருந்தால் எப்படி இருக்கும். ஆம், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 8வது அதிசயம் என்று சொன்னது கணிதத்துறையைச் சேர்ந்த ஒன்றைத் தான். மேலும் இது இன்றைய காலகட்டத்தில் மக்களோடு தொடர்புடையதும் கூட. அதுதான் கூட்டு வட்டி.
கூட்டு வட்டியை ஏன் எட்டாவது அதிசயம் என ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொல்கிறார் என்று பலருக்கும் குழப்பம் ஏற்படலாம். ஆனால், இன்றைய பொருளாதார உலகை ஆட்டி வைப்பதே இந்த கூட்டு வட்டி தான் என்பதை நாம் மறக்க வேண்டாம். ஆம், கூட்டு வட்டியால் தான் இன்று பல முதலீட்டாளர்கள் இலாபம் பார்க்கின்றனர். இருப்பினும் இதே கூட்டு வட்டியால் தான் பலரும் கடனைத் திருப்பி செலுத்த முடியாமல் வாழ்க்கையைத் தொலைக்கின்றனர். இதனை அப்போதே தனது கூற்றின் மூலம் உணர்த்தி விட்டார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூற்றுப்படி, “உலகின் 8வது அதிசயம் கூட்டு வட்டி. இதனை யாரெல்லாம் புரிந்து கொள்கிறார்களோ, அவர்கள் பணத்தை சம்பாதிக்கிறார்கள்; யாரெல்லாம் புரிந்து கொள்ளவில்லையோ, அவர்கள் பணத்தை வட்டியாக செலுத்துகிறார்கள்.” இதிலிருந்து கூட்டு வட்டியின் அவசியத்தை நம்மால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. இருப்பினும், நடுத்தர வர்க்கத்தினர் பலரும் இதன் தன்மையை அறியாமல் தான், கடன் வாங்கிவிட்டு பின்பு பல வருடங்களுக்கு வட்டியை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
கூட்டு வட்டி பலருக்கும் சாதாரணமாகத் தெரியலாம். இருப்பினும் பல ஆண்டுகளாக பொருளாதாரத்தில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பது இந்த கூட்டு வட்டி தான். பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்டு மற்றும் எஸ்ஐபி போன்ற முதலீடுகள் அதிக இலாபத்தை வழங்குவதற்கான அடிப்படைத் தத்துவங்களில் கூட்டு வட்டியும் ஒன்று.
நீங்கள் உங்கள் வருமானத்தை உயர்த்த விரும்பினால் இன்றே முதலீடு செய்யுங்கள். முதலீட்டை தாமதமாக்குவது கூட நமக்கான வருமான இழப்பு தான். ஆகையால் விரைவான முதலீடு உங்கள் பணத்தை பலமடங்கு உயர்த்தும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். முடிந்த அளவிற்கு கடன் வாங்குவதைத் தவிர்த்து விட்டு சேமிப்பில் இறங்குங்கள். அதுதான் உங்கள் வருமானத்தை உயர்த்தும் திறவுகோல்.
kalkionline
| HOME
0 Comments