காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா மாவட்ட அமைப்பாளர் ஆல்பர்ட் ஏற்பாட்டில், காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளரும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சித் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் சென்னை புனித தோமையர் மலையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு துணை முதலமைச்சரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, 1500க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு புத்தாடை, அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்கள், பாத்திரம் உள்ளிட்ட தொகுப்பினை வழங்கினர்.
முன்னதாக கிருஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, கிறிஸ்து பிறப்பின் அடையாளமாக வைக்கப்பட்ட குடில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து முன்னாள் பேராயர் சின்னப்பா அவர்கள் அதனை ஆசிர்வதித்தார். இறுதியாக கிறிஸ்மஸ் கேக் வெட்டி இனிப்புகள் பகிரப்பட்டது, அதனைத் தொடர்ந்து முத்தமிழ் அறிஞர் கலைஞர் வேடமிட்ட சிறுவன் சாய் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் வசனங்களை பேசிய அவையோறை ஈர்த்தார்.
இதில் கழக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.அர்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், மயிலை உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் ஏ.எம்.சின்னபா,தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் ஜோ.அருண், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், காஞ்சிபுரம் மாவட்டம் ஊராட்சி குழுத் தலைவர் படப்பை மனோகரன், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடையில் பேசியதாவது, “கிறிஸ்மஸ் என்றாலே எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. நான் பள்ளி மற்றும் கல்லூரி எல்லாம் கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள்தான். கிருஸ்துமஸ் என்றால் எல்லோரிடமும் அன்பு செலுத்த வேண்டும் என்பதுதான். எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றனர் ஆனால் மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் தான் வெறுப்பை பரப்புகிறார்கள். சங்கிகள் மட்டுமல்லாது அவர்களின் ஸ்லீப்பர் செல்கள் என்னும் பொறுப்பில் இருப்பவர்கள் கூட வெறுப்பை பரப்பி கொண்டு வருகின்றனர்.
சமீபத்தில் அலகாபாத் நீதிபதி ஒருவர் இஸ்லாமியருக்கு எதிரான கருத்தினை முன் வைத்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அத்தனை எதிர்க்கட்சிகளும் ஓரணியில் நின்று இருந்தனர். அதிமுக அந்த கடிதத்தில் கையெழுத்து கூட போடவில்லை.
நாடாளுமன்றத்தில் அண்ணல் அம்பேத்கரை இழிவாக பேசிய அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் எதிர்ப்பு அலைகள் எழுந்தன. திமுக செயற்குழு கூட்டத்தில் அமித்ஷாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். மாநில சுயாட்சியை கொண்டு வந்த பேரறிஞர் அண்ணாவின் பெயரால் கட்சி வைத்துள்ள அதிமுக, மாநிலத்தின் உரிமைகளை பறிக்கும் நோக்கமாக ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரிக்கிறது.
புயல் நிவாரண நிதியை வழங்கவில்லை என்று கேட்டால் அதற்கு குரல் கொடுக்காத அதிமுக, சிறுபான்மை மக்கள் தாக்கப்படுகின்றனர் என்றால் அதற்கும் குரல் கொடுக்காத அதிமுக, கழக அரசு மீது எந்த ஒரு குற்றச்சாட்டும் சொல்ல முடியவில்லை என்பதால்தான் வதந்திகளை பரப்பி வருகின்றன.
சனாதனம் குறித்து நான் பேசியதால் ஏதோ ஒரு சாமியாரை அழைத்து பரிகாரம் செய்ததாக ஒரு வதந்தியை கிளப்பி வருகின்றனர். நான் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், என் தலையை வெட்டுவேன் என்று ஒரு சாமியார் சொன்னார். ‘நான் கலைஞரின் பேரன், நான் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்?’ என கூறினேன். வாயை வாடகைக்கு விடுகிறார் என்று கூறுவார்களே, அதுபோல திமுக மீதும் என் மீதும் அதிமுகவினர் வதந்திகளை பரப்பிக் கொண்டு வருகின்றனர்.
பிறப்பால் ஏற்றத்தாழ்வு சொல்லும் எதையும் எப்போதும் நாங்கள் எதிர்ப்போம், சமத்துவ சமுதாயம் அமைப்போம் என்பதுதான் எப்போதும் எங்கள் இலக்கு. சிறுபான்மையினர் மக்களுக்கு அரணாக கழகமும், கழகத்திற்கு அரணாக சிறுபான்மையினர் மக்களுக்கும் எப்போது இருக்கும்” என்றார்.
kalaignarseithigal
கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments