
மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் FIR வெளியாக தேசிய தொழில்நுட்ப நிறுவனமே காரணம் என அமைச்சர் ரகுபதி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தமிழ்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து புகார் அளிக்கப்பட்டதும் துரிதமாக செயல்பட்ட காவல்துறை இந்த சம்பவத்தில் ஈடுபட ஞானசேகரன் என்ற நபரை கைது செய்தது.
இதனிடையே இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை ஊடகங்களில் வெளியானது. இதற்கு தமிழ்நாடு காவல்துறையே காரணம் என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில், முதல் தகவல் அறிக்கைகளை இணைய வழியில் நிர்வகிக்கும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் (NIC) சி.சி.டி.என்.எஸ் அமைப்பில் இருந்த தொழில்நுட்ப குறைபாடுகளே காரணம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில், "அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பாக, சென்னை பெருநகர காவல் துறை துரிதமாக உரிய நடவடிக்கைகளை எடுத்து குற்றவாளியை கைது செய்தது குறித்தும், இந்த சம்பவம் தொடர்பான அனைத்து தகவல்களும் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
மாண்பமை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளவாறு சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டு, இது தொடர்பான விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த வழக்கின் விசாரணையின் போது, இவ்வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை பொது வெளியில் வெளிவந்ததற்கு, இந்த அறிக்கைகளை இணைய வழியில் நிர்வகிக்கும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் (NIC) சி.சி.டி.என்.எஸ் அமைப்பில் இருந்த தொழில்நுட்ப குறைபாடுகளே காரணம் என்பதும், காவல்துறை காரணம் அல்ல என்பதும் விளக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கு பற்றிய சென்னை காவல்துறை ஆணையரின் பேட்டி பற்றி தெரிவிக்கப்பட்ட கருத்துக்களைப் பொறுத்தவரை, அகில இந்திய பணிகள் (நடத்தை) விதிகள் 1968-ன்படி கடைபிடிக்கப்படும் நடைமுறைகளின் அடிப்படையில் இதில் எந்த தவறும் இல்லை எனத் தெளிவுபடுத்த உள்ளோம்" என்று கூறப்பட்டுள்ளது.
kalaignarseithigal

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments