Ticker

6/recent/ticker-posts

வேகமாக பரவும் #MenToo பிரச்சாரம்: பெங்களூரு ஐடி ஊழியர் மரணமும்.. மனைவியின் டார்ச்சரும்..!


பெங்களூருவில், மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் 3 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக கூறி இளம் ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சுபாஷ் அதுல் பெங்களூரு மரத்தஹல்லி பகுதியில் வசித்து வந்தார். சுபாஷ் அதுல் அவரது மனைவி நிகிதாவை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இருவரின் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், சுபாஷ் அதுல் தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் எழுதி வைத்திருந்த 24 பக்க கடிதத்தில், தனது மனைவி மற்றும் அவரது உறவினர்கள் தன்னை கொடுமைப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, அதுலின் சகோதரர் பிகாஸ் புகார் அளித்தார். அதுல் மீது அவரது மனைவி நிகிதா பல பொய் புகார்களை பதிவு செய்துள்ளதாகவும், அவற்றை திரும்ப பெற வேண்டும் என்றால் 3 கோடி ரூபாய் தர வேண்டும் என மனைவி மற்றும் குடும்பத்தினர் மிரட்டியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தனது மகனை பார்க்க வேண்டும் என்றால் 30 லட்சம் ரூபாய் தர வேண்டும் என அதுலிடம் அவர்கள் கேட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்கொலைக்கு தூண்டியதாக அதுலின் மனைவி மற்றும் அவரது தாய், சகோதரர் மற்றும் உறவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறப்பதற்கு முன் சுபாஷ் அதுல் வீடியோ ஒன்றையும் இணையத்தில் பதிவிட்டார். அதில், குடும்ப வன்முறை, வரதட்சணை துன்புறுத்தல் மற்றும் இயற்கைக்கு மாறான குற்றங்கள் உட்பட ஒன்பது வழக்குகளை தனது மனைவி தனக்கு எதிராகப் பதிவு செய்துள்ளார் என்றும் இந்த வழக்குகள் ஆதாரமற்றவை என்றும் சுபாஷ் கூறுகிறார். ஒரு வழக்கை தனது மனைவி வாபஸ் பெற்றால், அதன் பின்னர் புதிய வழக்கை தாக்கல் செய்வார் என்றும் திருமண சண்டையே தனது இறப்புக்கு காரணம் என்றும் சுபாஷ் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

“என் மனைவி என் மீது ஒன்பது வழக்குகளை பதிவு செய்துள்ளார். ஆறு வழக்குகள் கீழ் நீதிமன்றத்திலும் மூன்று வழக்குகள் உயர் நீதிமன்றத்திலும் உள்ளன. நான் சம்பாதிக்கும் பணம் என் எதிரிகளை பலப்படுத்துகிறது. எனவே, நான் என் வாழ்க்கையை முடித்துக்கொள்வது நல்லது. ஏனென்றால், நான் அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். அதே பணம் என்னை அழிக்கவே பயன்படுத்தப்படும். இது ஓர் சுழற்சியாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது.” என்றும் பதிவிட்டுள்ளார்.

“மனைவியும் ஐடி ஊழியராக சம்பாதித்தாலும், தன்னிடம் இருந்து ரூ.40 ஆயிரம் வரை ஒவ்வொரு மாதமும் பராமரிப்புத் தொகையாக பெறுகிறார். இது போதாது என்று மாதம் ரூ.4 லட்சம் கேட்கிறார்“ என்றும் சுபாஷ் கூறியிருக்கிறார்.
இப்படி மனைவி மீதும் அவர் சம்பந்தப்பட்டவர்கள் மீதும் வழக்கை விசாரித்த நீதிபதி மீதும் அடுக்கடுக்கான புகார்களை கூறி சுபாஷ் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவும், அவரது மரணமும் #MeToo இயக்கம் போல, #MenToo இயக்கத்தை உருவாக்கியுள்ளது.

சமூக ஊடக பயனர்கள் #JusticeForAtulSubhash மற்றும் #MenToo என்ற ஹேஷ்டேக்குகளுடன் ஆண்களுக்கு எதிராக பொய்யாக பதிவிடும் வழக்குகளை சுட்டிக்காட்டியும், ஆண்களுக்கும் உரிமை தேவைப்படுகிறது என்றும் பதாகைகளுடன் வலைதள பதிவுகள் அதிகமாகி வருகின்றன.

news18



 Ai SONGS

 



Post a Comment

0 Comments