
பாமக பொதுக்குழு கூட்டத்தில் நிறுவனர் ராமதாஸின் மகள் வழிப்பேரனுக்கு பொறுப்பு வழங்கியதால், மேடையிலேயே ராமதாஸும் பாமக தலைவர் அன்புமணியும் மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமிக்கப்படுகிறார் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி, கட்சியில் இணைந்த சில மாதங்களிலேயே அவருக்கு பொறுப்பு கொடுப்பதா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு உடனடியாக பதிலளிக்கும் வகையில் பேசிய ராமதாஸ், “கட்சியை உருவாக்கியவன் நான். வன்னியர் சங்கத்தை உருவாக்கியவன் நான். முடிவுகளை நான் தான் எடுப்பேன்” என தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய அன்புமணி, களத்தில் உள்ள அனுபவசாலிகளுக்கு பதவி கொடுக்கலாம் என்றும், குடும்பத்தில் உள்ள இன்னொருவருக்கும் பதவி கொடுங்கள் என காட்டமாக தெரிவித்து மைக்கை தூக்கி போட்டார். பதிலுக்கு பேசிய ராமதாஸ், நான் எடுத்த முடிவுதான் கட்சியின் முடிவு என்றும், விருப்பம் இல்லாதவர்கள் கட்சியிலிருந்து வெளியேறலாம் என்றும் தெரிவித்தார். இறுதியில் பேசிய அன்புமணி ராமதாஸ், பனையூரில் புதிதாக கட்டியுள்ள அலுவலகத்தில் இனி தொண்டர்கள் என்னை வந்து சந்திக்கலாம் என கூறினார். பாமக பொதுக்குழு கூட்டத்தில் தொண்டர்கள் முன்னிலையிலேயே ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த முகுந்தன்?
முகுந்தன் என்பவர் பாமக நிறுவனர் ராமதாஸின் மகள் வழி பேரனாவார். ராமதாஸ், தன் மூத்தமகள் காந்திமதியை, தனது அக்கா மகன் டாக்டர் பரசுராமனுக்கே திருமணம் செய்துவைத்தார். காந்திமதி - பரசுராமன் தம்பதியரின் மகன்தான் முகுந்தன். பொறியியல் படித்துள்ள இவர், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றியவர்.
முகுந்தன் பாமகவில் சமூக ஊடக பேரவையின் மாநில செயலாளராக பொறுப்பில் உள்ளார். கடந்த மூன்று மாதங்கள் மட்டுமே கட்சிப்பணி ஆற்றி வரும் முகுந்தனுக்கு முக்கியப்பொறுப்பு கொடுத்தது ஏன் என அன்புமணி கேள்வி எழுப்பியதால் பாமக பொதுக்குழு கூட்டத்தில் சர்ச்சையானது.
முன்னதாக ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரன் இளைஞரணி தலைவர் பதவியில் இருந்தார். தமிழ்குமரன் பதவி விலகிய நிலையில் புதிய தலைவராக முகுந்தனை இப்பதவியில் நியமித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments