Ticker

6/recent/ticker-posts

Ad Code



திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-174


குறள் 583 
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல்.

நாட்டுல எங்கெங்க என்னென்ன நடக்குதுன்னு உளவுத் துறை மூலம் சரியா தெரிஞ்சு அதுனால என்ன நடக்கும்னு நெனச்சுப் பாக்காத ஆட்சியில விடியலுக்கு வழியே இல்லை. 

குறள் 585
கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.

உளவு பாக்க ஆளுங்க எப்படி இருக்கணும்னா, பார்த்தா யாருக்கும் சந்தேகம் வரக் கூடாது. அப்படி சந்தேகம் வந்துட்டா அவங்களுக்கு அஞ்சாமலும், எப்படி கேட்டாலும்  மனசுல உள்ளதை ஒளறாமலும் இருக்கணும்.

குறள் 587
மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று.

மத்தவங்க யாருக்கும் தெரியாம செய்யுத வேலைகளைப் பத்தி துப்பறிஞ்சு, அதுபத்திய உண்மைகளைத் தெளிவா தெரிஞ்சுக்கிடுதவந் தான் சரியான உளவாளி. 

குறள் 589
ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்.

ஒரு உளவாளியை மத்த உளவாளி தெரிஞ்சு கொள்ள முடியாத படி மூணு உளவாளியை நியமிக்கணும். மூணு பேரும் சொல்லுத தகவல் ஒரே மாதிரி இருந்தா அதை உண்மைன்னு ஏத்துக் கொள்ளணும். 

குறள் 590
சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை.

துப்பறிந்து தகவல் கொடுப்பவனின் திறமையை எல்லார் முன்னாடியும் வச்சு  பாராட்டுனா, உளவாளியைப் பத்தி நாமளே எல்லாருக்கும் காட்டிக் கொடுத்தது மாதிரி ஆயிரும். 

(தொடரும்)



 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments