Ticker

6/recent/ticker-posts

Ad Code



புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-47


பழங்குடி மக்களிடமிருந்த சில பழக்கங்கள் 
அபூர்வமானவை.  அவற்றை அவர்கள் கடைபிடிப்பதில் எப்போதும் பிடிவாதமாக இருப்பர். 

அந்தவகையில் மணமகன் தரப்பினர்தான் மணமகள் ஜாகைக்குப் பெண் கேட்டுச் செல்ல வேண்டுமே தவிர, மணமகள்  ஜகையினர் மணமகன் ஜாகைக்கு மாப்பிள்ளை கேட்டுச் செல்லும் பழக்கம் அவர்களிடமில்லை! 

செரோக்கியின் பெற்றோர் ரெங்க்மாவின் ஜாகைக்கு பெண் கேட்டுச் செல்ல ஆயத்தமானார்கள்.

ஒரிநொகோ நதியிலிருந்து பிடித்து வந்து பக்குவப்படுத்தி தும்மேசையில் காயவைத்து வைத்திருந்த பெரிய மீன் ஒன்றையும், வனத்துக்குள் விளைகின்ற பழவகைகள் சிலவற்றையும்,  தேன்மதைகளை மரப்பட்டைகளில் சுற்றியும், அதற்கு மேல் அழகிய பல வர்ணங்களிலான மலர்களை  வைத்து அலங்கரித்தும், பெண் ஜாகைக்கு எடுத்துச் செல்லும் பொதிகளைத் தயார் படுத்தினார்கள், செரோக்கியின் பெற்றோர்!

அக்கம் பக்கத்திலிருந்த உறவினர்களில் குடும்பத்துக்கொரு மூத்தவர்களைத் தேர்ந்தெடுத்து,அவர்களையும்   அழைத்துக் கொண்டு  செரோக்கியின் பெற்றோர் மேளதாளத்தோடு ரெங்க்மாவின் ஜாகையை அடைந்தார்கள்!

முன்னறிவித்தல் எதுவுமின்றி மணமகள் வீட்டாரிடம் சென்று பெண் கேட்பது வனவாசிகளின் மற்றொரு மரபாகவிருந்தது! 

அந்த வகையில் ரெங்க்மாவின் ஜாகை முன்றலை செரோக்கியின் பெற்றோரும் அயலவரும் அடையும் வரை ரெங்க்மாவின்  தாய்   இவ்வாறானதொரு வருகை பற்றி அறிந்திருக்கவில்லை!

ரெங்க்மாவின் தந்தை வேட்டைக்குச் சென்றிருந்தார். அவர் வரும் வரைக்கும் வந்தவர்கள் முன்றலில் நடனமாடிக் கொண்டிருந்தனர்!

ரெங்க்மாவுக்கும் அவளது தாயாருக்கும் உதவிக்கு வந்த பக்கத்து ஜகையினர் சிலர், முன்றலில் தடிகளை நட்டி அதன் மேல் தின்பண்டங்களையும் குடிபானங்களையும் பரப்பிக்கொண்டிருன்தனர்!

சில தினங்களுக்கு முன்னர் ரெங்க்மாவின் தந்தை வேட்டையாடிக் கொண்டு வந்து தோல் நீக்கி தும்மேசையில் தொங்கவிட்டிருந்த மிருகமொன்றை அவசர அவசரமாகக் கற்களை அடுக்கிவைத்து, அதன் மேல் நெருப்பு மூட்டினார் ரெங்க்மாவின் தாயார். 

அந்தி சாயும் வரை வந்தவர்கள் உண்டு குடித்து நடனமாடிப் பரவசமடைந்து கொண்டிருந்தனர்!  எப்போதும் வனவாசிகள் இப்படியானதொரு ஒன்று கூடலை எதிர் பார்த்துக் காத்திருப்பர்! சிலவேளை அவர்கள் வந்த வேலையை மறந்தவர்களாக சந்தோசத்தில் திளைத்து ஆடிப்பாடி மகிழ்வதுமுண்டு!

செரோக்கியின் தாயும் தந்தையும் தாங்கள் அழைத்து வந்தவர்களை முகமலர்ந்து உபசரித்துப் பரிமாறிக் கொண்டிருந்தனர்!

ரெங்க்மாவின் தாய் தனது வேலையில் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தபோதிலும், வேட்டைக்குச் சென்ற கணவர் கெதியில் வந்துவிட மாட்டாரா என்று உள்மனதில் சஞ்சலப்பட்டு, தனது வேலைகளுக்கு மத்தியில் அடிக்கடி அவள் கணவனின் வருகையை எதிர்பார்த்தவளாகக் காட்டுப்புற வழி நோக்கிக் கொண்டிருந்தாள்!

நாய் குரைக்கின்ற சத்தம் கேட்டதும்தான் அவளால் நிம்மதிப் பெருமூச்சுவிட முடிந்தது! அவளது கணவர் வந்துவிட்டார்!

அவர் எப்போதும் வேட்டையாடச் செல்லும்போது தனது “எல்சீசன்” நாயையும் கூட்டிக் கொண்டுதான் செல்வார்.

மிருகங்களுக்குக் குறிவைத்து அம்பெய்திய பின்னர் அம்பு பட்டதும் சில மிருகங்கள் அந்த இடத்திலேயே விழுந்து விடும். சீறுகொண்ட சில மிருகங்கள் காயத்தோடு ஓடிவிட முற்படும். அப்படியாக ஓடுகின்ற மிருகத்தைத் துரத்திப் பிடிப்பதற்கென்றே அவர் நாயைத் தன்னோடு கூட்டிச் செல்வது வழக்கம்! நாய் முன்னே குரைத்தபடி வர அவர் அதற்குப் பின்னால் வேட்டையாடிய வற்றைச் சுமந்து வந்து கொண்டிருந்தார். தனது ஜாகைப்பக்கமிருந்து தாரதம் பட்டச் சத்தங்கள் வந்தது அவருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது!

நடையை விரைவாக்கியவர், பின் கதவு வழியாக ஜாகைக்குள் நுழைந்தார். ஜாகையும் வெளியே முன்றலும் அல்லோல கல்லோலப் பட்டிருந்ததைக் கண்டதும் அவர் திகைத்துப் போய்விட்டார்!

முன்றலில் ஒரு கும்பல் ஆடிப்பாடிக் கும்மாளமடித்துக் கொண்டிருந்தது!
மாமிசம் தீயில் வாடுகின்ற வாசனை மூக்கைத் துளைத்தது.  சுமந்து வந்தவைகளை இறக்கி வைத்துவிட்டு, விரிப்பில் அமர்ந்தவரிடம் சொர்யா விபரத்தைச் சொன்னதும் அவருக்குச் சந்தோசம் தாங்க முடியவில்லை!

விறுவிறென்று முன்றலுக்கு ஓடிச்சென்றார். வந்திருந்தவர்களுக்குத் தலைசாய்த்து வந்தனம் தெரிவித்தார்.

விருந்தினர்கள் அனைவரும் வட்டமாகத் தரையில் அமர்ந்து கொண்டனர். அவர்களுள் ஒரு முதிர்ந்த வயதானவர், பெண் கேட்கும் படலத்தை ஆரம்பித்து வைத்தார்.

(தொடரும்)

செம்மைத்துளியான்



 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments