
தன் ஜாகைக்குப் பெண் கேட்டுவந்து, சம்மதத்திற்காகக் காத்திருந்தவர்களுக்கு மனப்பூர்வமான தனது விருப்பத்தைத் தெரிவித்தார் ரெங்க்மாவின் தந்தை.
அதன் பின்னர் வந்திருந்தவர்களுள் வயதான ஒரு மூதாட்டி ரெங்க்மாவைத் தனியாக ஒதுக்குப்புறமான ஓர்
இடத்துக்கு அழைத்துச் சென்றார்.
ரெங்மாவிடம் பலதையும் பத்தையும் அலவலாவிவிட்டு, இறுதியாக செரோக்கியைக் கட்டிக்கொள்வதில் அவளது சம்மதத்தை மிகவும் நாசூக்காக கேட்டார்!
ரெங்க்மா பெண்மைக்கேயுரிய வெட்கத்தில் தலைகுனிந்தவாறு தரையில் பெருவிரல் கொண்டு வட்டம்போட ஆரம்பித்தாள்!
வெட்கம் கலந்த நாணத்தோடு சம்மதம் தெரிவித்துவிட்டு, ஜாகைக்குள் ஓடிவிட்டாள்!
கிழவி தள்ளாடியபடி நடந்து வந்து, தரையில் வட்டமிட்டு அமர்ந்திருந்தவர்களோடு சேர்ந்து அமர்ந்து,
“நல்ல செய்தி கிடைத்துவிட்டது! குட்டிப் பாப்பா சம்மதம் தெரிவித்து விட்டது” என்று கூறினார்.
மகிழ்ச்சிப் பிரவாகத்தில் கூடியிருந்தோர் விசிலடித்தும், கூவல் கோசம் செய்தும் தமது சந்தோசத்தை வெளிப்படுத்தினர்!
மணநாள் நிர்ணயிக்கும் பொறுப்பை இரு குடும்பத்தினரிடமும் விட்டு விட்டு, வந்திருந்தோர் அங்கிருந்து நகர்ந்தனர்!
விரிப்பில் சாய்ந்தபடி, தனது பெற்றோர் வரும்வரைக்கும் செரோக்கி பலதையும் யோசிக்கலானான்.
ஒருநாள் வனத்துக்குள் சென்று கொண்டிருந்த போது,
தனது தந்தை -‘நீயும் பெரியவனானதும் மணமுடிப்பாய் - ஒர் அழகான பெண்ணைப் பார்த்து - நாங்கள் உனக்கு மணமுடித்து வைப்போம்’ என்று கூறியது அவனது நினைவுக்கு வந்தது!
வட்ட வடிவான அழகிய முகம்! அதற்கு அமைவான நீண்ட மூக்கு! கருகரு என்றிருந்த கூர்மையான கயல்விழிகள்! காண்போரை சுண்டியிழுக்கும் தடித்த உதடுகள்! இவை அனைத்தும் பொதிந்த காம்பீரமான உடற்கட்டைக் கொண்டிருந்த ரெங்கமாதான் அவன் மணமுடிக்கப் போகும் அந்த மங்கை என்று அவன் நினைத்திருக்கவில்லை!
திருமணம் என்று வரும் போது மணமகன் மான் வேட்டையாடி வந்து, அதன் கொம்பைப் பதப்படுத்தி - வடிவமைத்து வளையல் செய்து மணமகளுக்கு அணிவிக்க வேண்டும்! வனவாசிகளின் சம்பிரதாயங்களுள் இதுவும் ஒன்று!
அதே போன்று திருமணத்தின்போது மணமகள் அணியும் ஆடைகளை அவளே தன் கைப்பட்ட தயார் செய்ய வேண்டும். தனி ஒருத்தியாக திருமண ஆடை ஒன்றை முழுமையாகத் தயாரித்து முடிக்க நீண்ட காலம் எடுக்கும்! திருமணப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்ததிலிருந்து ரெங்க்மா தனது மணமகள் ஆடையைத் தயாரிப்பதில் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தாள்!
திருமணச் சடங்குகளின் ஆரம்ப நிகழ்வுகள் நிறைவேறிய பின்னர், மணப்பெண்ணை காளை மாட்டின் மேல் அமர
வைத்து ஊர் முழுவதும் ஊர்வலமாகக் கொண்டு சென்று, இறுதியில் மணமகனின் ஜாகையில் வைத்து தாலியணிவிக்கப்பட்டு வாழ்த்துக்களுக்கும் ஆரவாரங்களுக்கும் பிறகு - அதே காளை மாட்டில் மணமக்களை ஏற்றி மறுபடியும் ஊர்வலமாக அழைத்துச் சென்று சூரியன் மறைகின்ற நேரத்தில் வனத்துக்குள் விட்டு விடுவார்கள்!
பூமிப்பரப்பில் உற்பத்தியாகும் கார்பன்டைக்ஸைடை பெருமளவில் உட்கொள்வது "அமேசான்" காடுகள்தான். உலகின் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு விலங்கினங்கள் இக்காடுகளில்தான் வசிக்கின்றன.
எண்ணற்ற செடிகொடிகளையும், மூலிகைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள அதிசய உலகம்தான் இந்த அமேசான் மழைக்காடுகள்!
அதற்குள் இரவு வேளையில் தனியாக ஒர் இளம் சோடியை நுழைய விடுவதென்பது இளந்தலைமுறையினருக்கு வனத்தின் மீதுள்ள பயத்தை இல்லாமற் செய்வதற்கான ஒரு யுக்தியாகவே பழங்குடியினர் கருதுகின்றனர்!
அமேசான் வனத்துக்குள் செல்வதில் செரோக்கி பல்வேறு சவால்களை எதிர்நோக்க வேண்டியிருந்தான்! அதனால் அவன் வனத்துக்குள் செல்வது போன்று பாசாங்கு செய்து, எவரும் அறியாமல் பக்கத்திலுள்ள அம்புளுவாவக்காட்டை நோக்கித் மனங்கவர்ந்தவளோடு நடந்தான்!
பெளர்ணமி நிலவில் - பனி பெய்யும் பொழுதில்
ரெங்க்மாவோடு அவன் முதலில் அலவத்தைக்குள் நுழைந்தான்!
அங்கு துளிர்விட்டு வளர்ந்து கொண்டிருந்த மரவள்ளிச் செடிகளுக்கு நடுவே இருவரும் ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்டவர்களாக சந்தோசமாக நடந்து கொண்டிருந்தனர்.
செரோக்கி தன்னை எங்கு அழைத்துச் செல்கின்றான் என்பது ரெங்க்மாவுக்குத் தெரியவே தெரியாது! அவன் மீதிருந்த அபார நம்பிக்கையில் அவள் அவனைத் தொடர்ந்து கொண்டிருந்தாள்!
(தொடரும்)
செம்மைத்துளியான்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments