புலம்பெயர் நாடுகளில் வாழுகின்ற தமிழ் மக்களிடம் 'நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்' என்று கேட்டால், ‘பொறியியலாளராகப் பணியாற்றுகிறேன்’, ‘வியாபாராம் செய்கிறேன்’, ‘ரெஸ்டோரன்டில் வேலைசெய்கிறேன்’ என்று ஏதாவது ஒரு வேலையைக் குறிப்பிடுவார்கள்.
‘ஜெனிவா வேலைத்திட்டம் செய்கின்றேன்’ என்று கூறிக்கொண்டும் புலம்பெயர் நாடுகளில் ஒரு கூட்டம் அலைந்து திரியும்.
இவர்கள் வேறு எந்த வேலையும் செய்வது கிடையாது. இவர்களுடைய முழுநேரப் பணியே ஜெனிவாவை மையப்படுத்திய பணிகள்தான்.
உடனடியாக நீங்கள் நினைத்துவிடக்கூடாது இவர்கள் ஜெனிவாவிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் ஏதோ பெரிய வேலை செய்வதாக.
அவர்களது முழு நேரவேலை என்னவென்றால், தமிழ் மக்களின் அவலங்களை ஜெனிவாவில் வியாபாரமாக்கிப் பணம் சம்பாதிப்பது மாத்திரம்தான்.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அவலங்களை ஜெனிவாவில் பேசுவது, அதற்கு ஆதாரமாக இலங்கையில் காணாமல்போனவர்களின் உறவுகளை அழைத்து ஜெனிவாவில் அவர்களைப் பேசவைப்பதுதான், பின்னர் தமிழ் ஊடகங்களில் செவ்வி வழங்குவது இவைகள்தான் இந்த ஜெனாவா வேலைத்திட்டம் என்று கூறித்திரிகின்ற பிரமுகர்களின் பிரதான செயற்திட்டம்.
மனித உரிமைச் செயற்பாட்டாளர் என்று தன்னைக் கூறிக்கொண்டு திரிகின்ற ஒருவர் கடந்த 30 வருடங்களாக வேலைகள் எதுவுமே செய்யவில்லை. 30 வருடங்கள் ஜெனிவாவில் பேசி எதையாவது தமிழ் மக்களுக்குப் பெற்றுத்தந்தாரா என்றால் அதுவும் இல்லை. சரி, யுத்தம்தான் முடிவடைந்துவிட்டதே இனியாவது ஏதாவது செய்து பிழைப்பாரா என்றால் அதுவும் இல்லை.
புலம்பெயர் தமிழர்களிடம் காசுசேர்ப்பதற்கு இறந்தவர்கள் உயிருடன் இருப்பதாக வதந்திபரப்பிக்கொண்டு வேறு ஒரு துருப்புச் சீட்டைக் கரங்களில் எடுத்துச் சுற்றித்திரிகின்றார்.
இது இவ்வாறு இருக்க, ஜெனிவா வேலைத் திட்டம் என்று கூறித்திரிகின்ற சிலர் சட்டவிரோத காரியங்களில் ஈடுபட்டுவருவது வெளித்தெரியவந்து, தமிழ் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிவருகின்றது.
ஜெனிவாவில் பேசுவதற்காகவென்று கூறி வீசாக்களைப் பெற்று பலரையும் சுவிட்சலாந்துக்கு அழைத்துவந்து, சுவிட்சலாந்தில் வைத்து அவர்களில் சிலரை தங்கவைத்துவிடுவார்கள்- பெருமளவு பணத்தைப் பெற்றுக்கொண்டு.
இதுவும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி, சில ஜெனிவா செயற்திட்ட வீரர்கள் சுவிஸ் வருவதற்குத் தடைவிதிக்கப்பட்ட கேவலமும் நடந்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜெனிவா செயற்திட்ட வீரரொருவர் சுவிஸ் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.
நேற்றைய தினம் மற்றொரு முசுப்பாத்தி ஜெனிவாவில் நடந்துள்ளது.
இறுதி யுத்தத்தின்போது காணாமல்போண ஒருவரின் மனைவி என்று கூறிக்கொண்டு ஜெனிவா வந்திருந்த ஒரு பெண், அங்கிருந்து தப்பியோடியுள்ளார். காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்டக் கிழைத் தலைவியே இப்படி தப்பியோடியவர் என்று கூறுப்படுகின்றது.
சிறிலங்கா காவல்துறை தன்னைத் தேடுவதாக ஏற்கனவே செய்திகளைக் கசியவைத்ததுடன், அவர் ஜெனிவாவில் நின்றபோது ஆட்களை ஏற்பாடுசெய்து கொழும்பில் இருந்து தொலைபேசி அழைப்புக்களை எடுக்கும்படி செய்து, அகதி அந்தஸ்து கோருவதற்கான ஆதாரங்களை அவர் திரட்டியதாகவும் கூறப்படுகின்றது.
இதில் வேடிக்கை என்னவென்றால், ஜெனிவா செயற்திட்ட மாபியாக்களின் தொல்லை பொறுக்கமுடியாமல் இம்முறை சுவிஸ் அரசாங்கமே இந்தப் பெண்களை ஜெனிவாவுக்கு அழைத்துவந்திருந்தார்கள் என்பதுதான்.
எம்மில் ஒருசிலர் செய்கின்ற இதபோன்ற காரியங்கள் உண்மையான இழப்புக்களுடன் நின்று தவிக்கின்ற மக்களையும், மனித உரிமை விடயங்களில் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்ற சில செயற்பாட்டாளர்களையும் எந்த அளவுக்கு பாதிப்புக்குள்ளாக்கும் என்பதை உணர்ந்துகொள்ளாதவரை, தமிழ்களுக்கு இலங்கையில் மாத்திரமல்ல எங்குமே விடிவு கிடைக்காது.
ibctamil
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments